Monday 21 October 2019

முதல் முறை

நேற்று வெளியிட்ட ‘’ஓர் உரையாடல்’’ வாசித்து விட்டு சில நண்பர்கள் அழைத்தனர். தமிழ்நாடு சந்தித்த பஞ்சத்தில் இறந்து போனவர்கள் எண்ணிக்கை ஐம்பது லட்சம் என்பது  அதிர்ச்சியளித்ததாகவும்  இத்தகவலை முதல் முறையாக கேள்விப்படுவதாகவும் கூறினர். ஏன் இதைப் பற்றி எங்குமே பேசப்படுவதில்லை என வினவினர். பிரிட்டிஷ் அரசாங்கம் நினைத்திருந்தால் இதைக் கட்டுப்படுத்தியிருக்க முடியாதா  என்று கேள்வி எழுப்பினர்.  நான் எனது அவதானங்களாக சிலவற்றை முன்வைக்கிறேன். 

1. இந்தியா விவசாய நாடு. இன்றும் இந்தியா விவசாய நாடே. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையாக விவசாயமே இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன் இந்தியாவில் இருந்த அரசுகள் வரியை தானியமாகவே வாங்கின. அரசின் மிகப் பெரிய வருவாய் தானியங்களே. வணிகர்களிடம் வசூலிக்கப்பட்ட சுங்கமே தன வருவாயாக இருந்திருக்கிறது. தானியமாக வரி வசூலிக்கப்பட்டதால் விளைச்சலுக்கு ஏற்றார் போல வரிவசூல் செய்து கொள்ளும் நெகிழ்வான போக்கு இருந்திருக்கிறது. அரசாங்கங்கள் ஆங்காங்கே தானியங்களை சேமித்து வைத்தனர் அல்லது தங்கள் ஊழியர்களுக்கும், போர் வீரர்களுக்கும் அரசால் ஆதரிக்கப்படுபவர்களுக்கும் ஊதியமாக தானிய மூட்டைகளை வழங்கியுள்ளனர். ஆதலால் பகிர்வு இயல்பாக  இருந்திருக்கிறது.

2. பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவெங்கும் பெரும்பாலும் நிலவிய இந்த முறையை தங்கள் நிலவரி முறை மூலம் மாற்றியமைக்கின்றனர். எல்லா கிராமங்களிலும் நிலம் அளக்கப்பட்டு நிலவரி பணமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய கிராமங்கள் தானிய பண்ட மாற்று முறையில் இயங்கிய பழக்கம் கொண்டவை. அவர்களால் நிலவரியை பணமாக செலுத்தும் முறைக்குள் தங்களைப் பொருத்திக் கொள்ள முடியவில்லை. விவசாயம் நஷ்டமடையத் துவங்குகிறது.பிரிட்டிஷ் அரசாங்கத்தின் வரிவருவாயில் பெரும்பான்மையான பங்களிப்பு நிலவரி மூலமே கிடைக்கப் பெற்றது. கிட்டத்தட்ட 80 சதவீத வருமானம்.

3. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், பொருளியல் அறிஞர்  தாமோதர் தர்மானந்த கோசாம்பி விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் வரி தானியமாக பெறப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறார்.

4. தமிழ்நாட்டில் பஞ்சம் வந்த போது இந்தியாவிலிருந்து உணவு தானியங்கள் பிரிட்டிஷாரால் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. 

5. பஞ்சம் தமிழ்ச்  சமூகத்தில் வறுமையைக் கொண்டு வந்தது. வறுமை சுகாதாரமற்ற சூழலை உருவாக்கியது. சுகாதாரமற்ற சூழலால் நோய்கள் உருவானது. நோய்கள் தனி மனித சராசரி ஆயுளைக் குறைத்தன. சமூகத்தில் எப்போதும் அச்சமும் பதட்டமும் நிலவியது. சமூக ஒருங்கிணைப்பு சாத்தியமில்லாமல் போனது.