Tuesday 22 October 2019

இங்கும் அங்கும்


பெரும்பாலான நண்பர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பயில்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை ஒரு மாதமோ அல்லது நாற்பது நாட்களோ ஊருக்கு வருகிறார்கள். அவர்களால் அமெரிக்காவை இழக்க முடியாது. எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை அமெரிக்காவைப் பற்றி சொன்னார்: ’’மீள முடியாத கடன் சொர்க்கம்’’ என்று . அமெரிக்கா அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. உலகின் பல்வேறு நாட்டு மக்களுடன் இணைந்து வாழும் சமூக அமைப்பும் அவர்களுடன் இணைந்து பணிபுரியும் பணிச்சூழலும் துல்லியமான சமூக ஒழுங்குகளும் தடையற்ற நல்ல வசதி வாய்ப்புகளும் அவர்களை அங்கேயே இருக்க வைக்கிறது. அமெரிக்காவை விரும்ப வைக்கிறது. ஆனால் அவர்கள் வெளியே பகிர்ந்து கொள்ள இயலாத ஒரு இடர் அவர்களுக்கு எப்போதும் உண்டு. எப்படி ஒரு வெளிநாட்டின் பண்பாட்டை குழந்தைகளுக்குக் கொடுப்பது என்பது. அங்கிருந்து வந்து விட வேண்டும் என்ற விருப்பம் ஒருபுறமும் இங்கே வந்தால் அங்கே வாங்கிய ஊதியத்தினை இங்கே பெற முடியாது என்ற யதார்த்தம் இன்னொரு புறமும் அவர்களை ஊசலாட வைக்கிறது. நான் அங்கே பயிலும் குழந்தைகளின் கல்வி எப்படி இருக்கிறது என்று பார்ப்பேன். துவக்கக் கல்வி பயிலும் குழந்தைகள் நல்ல மொழியறிவுடனும் நல்ல உரையாடல் திறனும் பெற்றிருப்பதைக் கண்டு மகிழ்வேன். எல்லா குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியில் புத்தக வாசிப்பு கட்டாயம் என்பதால் எனக்கு அமெரிக்கக் கல்விமுறை திருப்தியளிக்கும் ஒன்றே. குழந்தைகளுக்கு பேச்சு மொழியாக ஆங்கிலமே இருக்கிறது. தமிழ் பேசினால் புரிந்து கொள்கிறார்கள். அவர்களால் தமிழ் பேச முடிவதில்லை. பெரும்பாலும் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்கின்றனர். குழந்தைகளுடன் இருக்கும் நேரமே குறைவு. பேசும் நேரம் அதை விடக் குறைவு. மானசீகமாக குழந்தை தமிழ் பேசுவதில்லை என்பதே அவர்களை  தளரச்  செய்கிறது. மேலைப் பண்பாட்டின் வசதிகளை அனுபவித்தாலும் அதனை முழுமையாக ஏற்க முடியாத நிலை. மௌனமாக நிகழும் இனப்பாகுபாடு உருவாக்கும் நெருக்கடி.

நான் எப்போதுமே வகுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி யோசிப்பவன். காந்தி வாழ்நாளில் கால்வாசி வெளிநாட்டில் வசித்தவர்தான். அவருடைய குழந்தைகளை அவர் தென்னாஃப்ரிக்காவிலேயே படிக்க வைத்தார். எல்லா சமயங்கள் குறித்தும் எல்லா பண்பாடு குறித்தும் அடிப்படையான வாழ்க்கைக்கல்வி குறித்தும் அவரது குழந்தைகளுக்கும் அங்கே இருந்த இந்திய ஐரோப்பிய குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுத்தார். சிந்திப்பவர்களுக்கு உலகமே தாய்நாடுதான். எந்த நாட்டிலும் எவ்விதமான கெடுபிடியான சட்ட திட்டங்கள் உள்ள நாட்டிலும் கூட வெவ்வேறு மக்கள் தங்கள் நம்பிக்கைகளை தக்க வைத்துக் கொண்டே வாழ்கின்றனர். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் பொருளியல் சுதந்திரம் மூலம் தங்கள் தாய்நாட்டின் சாரமான பண்பாட்டு விஷயங்களை கற்றுக் கொடுக்கும் ஓர் இயங்குமுறை கொண்ட கல்வித்திட்டத்தை உருவாக்க முடியும். அது அங்கே மட்டும் பயன்படுவதோடு மட்டுமில்லாமல் இங்கேயும் மாற்றத்தை உண்டாக்கும். இங்கே இருப்பவர்களுக்கு வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் மற்றும் இந்தியக் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் வாய்ப்பால் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

இன்றும் அமெரிக்காவில் சீக்கியர்களும் குஜராத்திகளும் தங்கள் தனித்தன்மையுடனே வாழ்கின்றனர். எனது நண்பர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்ததால் அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளன. எனினும் அவர்களின் பதின் வயதுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்கு வந்து விட வேண்டும் என்கின்றனர் அவர்களின் பெற்றோர்.

குழந்தைகளுக்கு எவ்விதம் கல்வி அளிப்பது என்பது தமிழர்களுக்கு முற்றும் புரியாத விஷயமாகவே இன்னும் இருக்கிறது.