Monday 21 October 2019

அதிகாரப் பரவலாக்கல்


சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். எனக்கான ரயிலுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. நான் முன்பதிவு செய்திருந்தேன். பயணச்சீட்டு அலுவலகத்தைக் கடந்து  நடைமேடையில்  நுழைந்த போது  ஒவ்வொரு  வினியோக சாளரத்தின் முன்னும் நூறு  பேர் பயணச்சீட்டு வாங்க  நின்று கொண்டிருந்தனர். மிக நீளமான வரிசை. ஆண்கள். பெண்கள். மூத்த குடிமக்கள். எல்லார் கையிலும்  ஸ்மார்ட் ஃபோன். கியூவில் நின்றவாறு ஃபோனை தோண்டிக் கொண்டிருந்தனர். ஸ்மார்ட் ஃபோன் இருக்கையில் அவர்கள் கியூவில் நிற்க வேண்டிய அவசியமேயில்லை. இந்திய ரயில்வேயின் செயலி மூலம் சில வினாடிகளில் டிக்கெட் பெற்று விடலாம். ஸ்மார்ட் ஃபோன் மக்கள் மிக விரும்பி வாங்கி சேகரித்து விட்டனர். அதை எவ்வாறு ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்திக் கொள்வது என்பதை இன்னும் எத்தனை காலம் கழித்து எல்லாரும் அறிவார்கள்? என்னுடைய அபிப்ராயம் அத்யாவசியமான சேவைகள் இணையக் கட்டணத்தில் சகாயமான விலையிலும் பொழுதுபோக்கு கேளிக்கைகளுக்கு இணையம் பயன்படுத்தப்படும் போது கட்டணம் மிகையாகவும் வசூலிக்கப்பட வேண்டும்.

நான் வீட்டில் இருந்தேன். ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த எனது நண்பர் ஒருவர் அலைபேசியில் கூப்பிட்டார். அவர் பயணித்த பெட்டியில் ஒரு தகராறு. என்ன செய்வது என்று என்னிடம் கேட்டார். உங்கள் கையில் பயணச்சீட்டு இருக்கிறதா அல்லது இ-டிக்கெட் வைத்துள்ளீர்களா என்று கேட்டேன். பயணச்சீட்டு உள்ளது என்றார். அதன் பின்பக்கத்தில் ரயில்வே காவல்துறையின் தொடர்பு எண் இருக்கும்; அதற்கு ஃபோன் செய்து வண்டியின் பெயரையும் பெட்டி எண்ணையும் விபரத்தையும் சொல்லுங்கள் என்றேன். பத்து நிமிடம் கழித்து ஃபோன் வந்தது. போலிஸ் வந்து இடர் உருவாக்கிய நபர்களை வெளியேற்றினார்கள் என்றார். மாற்றம் நடக்கிறது. மாற்றம் நடப்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் போதுமான அளவு உருவாக்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

இந்தியாவில் இப்போது எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் கழிவறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்துகிறது. ஏதாவது பெட்ரோல் நிலையத்தில் கழிவறையைப் பயன்படுத்தினால் அந்த பெட்ரோல் நிலையத்தின் எண்ணைய் நிறுவனத்துக்கு நாம் ஒரு குறுஞ்செய்தி மூலம் அவை சுகாதாரமாக இருந்தன என்றால் ஆம் என்றும் அவ்வாறு இல்லாமல் இருந்தால் இல்லை என்றும் செய்தி அனுப்பலாம். பராமரிப்பு சரியில்லை என்றால் எண்ணெய் நிறுவனம் சரி செய்ய ஆவன செய்கிறது.

இன்று காலை ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு வாகனத்தில் பெட்ரோல் நிரப்பச் சென்றேன். அங்கே எஞ்சின் ஆயிலை ஒரு மோட்டார் மூலம் சில நிமிடங்களில் மாற்றி புதிய எஞ்சின் ஆயில் ஊற்றுகின்றனர். அவ்வாறு மாற்றுபவர்களுக்கு ரூ. 50க்கு போனஸ் பெட்ரோல் வழங்குகின்றனர். மேலும் எஞ்சின் ஆயில் விலையில் அதிர்ஷ்டத் தள்ளுபடியும் உண்டு. எனக்கு ரூ.50 அதிர்ஷ்டத் தள்ளுபடி கிடைத்தது. எஞ்சின் ஆயில் விலை ரூ. 300. எனக்கு இன்று ரூ.200க்கு கிடைத்தது.