Tuesday 22 October 2019

தூய்மையும் பயணமும்

சென்னை கோயம்பேடிலிருந்து தமிழ்நாட்டின் எல்லா முக்கிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் மற்றும் ஆண்கள். நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் கூட பயணத்தின் இடையில் ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் எங்காவது நின்று செல்கின்றன. தமிழ்நாட்டுக்குள் சென்னையிலிருந்து அதிகபட்சம் பதினாறு மணி நேரம் பயணிக்கும் பேருந்துகள் கூட இருக்கின்றன. சுகாதாரமான கழிவறைகள் பேருந்து நிற்கும் இடங்களில் எங்குமே இருப்பதில்லை. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் சந்திக்கும் இடர் இது. தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாநில நெடுஞ்சாலைகளிலும் ஒவ்வொரு எண்பது கிலோமீட்டருக்கும் தமிழ்நாட்டில் ‘’ஸ்வச் பாரத்’’ திட்டத்தின் கீழ் ’’டாய்லெட் ஸோன்’’களை வடிவமைக்கலாம். அங்கே கட்டப்படும் டாய்லெட்களில் பயன்படுத்தப்படும் நீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் விதத்தில் அமைக்கலாம். அப்பகுதியில் வேறு எந்த வணிக நடவடிக்கையும் இருக்கக் கூடாது. பயணத்தின் இடையில் நிற்கும் எல்லா பேருந்துகளும் இந்த ‘’டாய்லெட் ஸோன்’’களில் நின்று செல்ல வேண்டும் என்பதை கட்டாயமாக்கலாம். அவற்றின் பராமரிப்பைத் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கலாம். இந்தியாவில் தமிழ்நாடு மிக அதிக போக்குவரத்து வசதி கொண்ட மாநிலம். பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட அளவுக்கு பயணிகளுக்கு குறைந்த பட்ச வசதிகள் கூட கடந்த ஐம்பது ஆண்டுகளில் செய்து தரப் பட்டதில்லை. பேருந்து நிலையங்கள் நகராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வரும். அங்கு எந்த அடிப்படை வசதிகளும் முறையாக இருக்காது. 

மத்திய அரசு பெட்ரோல் நிலையங்கள் அங்கே வரும் நுகர்வோருக்கு முறையான டாய்லெட் வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல் நிலையங்களில் டாய்லெட்கள் சுகாதாரத்துடன் பராமரிக்கப்படத் துவங்கியுள்ளன. காரில் பயணிப்பவர்களுக்கு இது உபயோகமானது. 

‘’ஸ்வச் பாரத்’’ திட்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளிலும் மாநில நெடுஞ்சாலைகளிலும் ‘’டாய்லெட் ஸோன்’’கள் கட்டப்பட்டு அவை தனியாரால் நிர்வகிக்கப்பட்டு சுகாதாரமான சேவையை அளிக்குமெனில் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களுக்கு தினமும் பயன்படும் விஷயமாக அது இருக்கும். மேலை நாடுகளும் அமெரிக்காவும் தங்கள் சாலைகளில் இவ்வாறான ‘’டாய்லெட் ஸோன்’’களை உருவாக்கியுள்ளன.