நான் வசிக்கும் பகுதி, மயிலாடுதுறை கடைத்தெருவிலிருந்து ஒரு கி.மீ தொலைவு கொண்டது. நான் சிறுவனாயிருந்த போது அப்பகுதியின் எல்லா வீடுகளிலிருந்தும் ஆண்களும் பெண்களும் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மூன்று முறையாவது கடைத்தெருவிற்கு பல்வேறு விதமான பணிகளின் நிமித்தம் செல்வார்கள். ஆண்கள் சைக்கிளில் செல்வார்கள். பெண்கள் நடந்து செல்வார்கள். வீதியே நடந்து செல்பவர்களால் நிரம்பியிருக்கும். இரண்டு சக்கர வாகனக்கள் மிகக் குறைவான நபர்களிடமே இருக்கும். நான் பள்ளிக்கு சைக்கிளில் செல்வேன்.
இப்போது காலையில் வாக்கிங் செல்பவர்களைத் தவிர சாலையில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்பவர்கள் குறைவு. வசதிகள் வந்திருப்பது மனிதர்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது. மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. நல்ல விஷயம். ஆனால் வசதிகள் இன்னும் மேலான வாழ்க்கையை வாழ்க்கை நோக்கை நமக்குத் தருகிறதா அல்லது நுகர்வின் சங்கிலிகளில் நாம் தளைக்கப்பட்டிருக்கிறோமா என்பது நாம் யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.
இன்று சமூகத்தில் பெரும்பாலானோருக்கு குறைந்தபட்ச உடல் உழைப்பு கூட இல்லை என்பதே யதார்த்தம். காலையும் மாலையும் மூன்று கிலோ மீட்டர் குறைந்தபட்சம் நடந்து செல்வோமாயின் நம் உடலின் ஆற்றல் சீராக செலவழிக்கப்படும். நல்ல பசி இருக்கும். செரிமானம் நன்றாக இருக்கும். எலும்புகள் வலுப்படும்.
இன்று ஒவ்வொரு வீட்டின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கின்றன. ஆனால் ஏன் அவர்கள் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடிய இந்த சிறு விஷயம் ஏன் அவர்களுக்குப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படுவதில்லை? நமது நாட்டின் கல்வி நமது இளைய சமுதாயத்துக்கு என்னதான் அளிக்கிறது? அதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று சொன்னால் ஏன் அவ்வளவு எதிர்ப்பு உருவாகிறது?
எவ்விதமான சமூகம் நாம்?