Wednesday 23 October 2019

பெருமழையும் பேரிடரும்


எனக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. அப்பணிகளை பல்வேறு முறை ஒருங்கிணைக்கவும் செய்திருக்கிறேன். அதில் இருக்கும் எல்லா அம்சங்கள் குறித்தும் எனக்கு நடைமுறை அறிவு உண்டு. 2015ம் ஆண்டு சென்னையிலும் தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் பெருமழை பெய்தது. தலைநகரில் ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்து வெள்ளம் மாநகரைச் சூழ்ந்தது. சென்னையை அடுத்து கடலூர் மாவட்டமும் பெருமழையின் பாதிப்புக்குள்ளானது. எல்லா நிவாரண உதவிகளும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் நான் கடலூர் மாவட்டத்தில் இயன்ற பணிகளைப் புரிவது என்று முடிவெடுத்தேன். நிவாரண உதவிகளுக்கான தேவை பெரிய அளவில் இருந்தது. எனினும் நாங்கள் நண்பர்கள் பத்து பேர் இணைந்து ஒரு கிராமத்தின் மக்களுக்கு முடிந்த வரை உதவி செய்வது என்று முடிவு செய்தோம். சராசரியாக ஒரு கிராமத்தில் ஐந்நூறு குடும்பங்கள் வரை இருக்கக் கூடும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் பதினைந்து நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்கள், போர்வை மற்றும் பாய் ஆகியவற்றை வழங்கினோம். கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் வழங்கினோம். எங்கள் சிறு குழுவுக்கு ஒரு கிராமம் என்பது பொருள் அளவிலும் பணிகளின் அளவிலும் மிகப் பெரிது. எனினும் தெளிவான திட்டமிடுதல் மூலம் பணிகளை மிகத் துல்லியமாக செய்து முடித்தோம்.  நிவாரண உதவிகள் வழங்கிய சில அமைப்புகளுக்கும் நிவாரணம் தேவைப்பட்ட சில கிராமங்களுக்கும் பாலமாகச் செயல்பட்டேன். அதன் மூலம் மேலும் ஐந்து கிராமங்களுக்கு உதவி செய்ய முடிந்தது. நிவாரணப் பணிகளில் ஈடுபடப் போகிறோம் என்ற போது உங்களுக்கு இதற்கு முன்னர் பணியாற்றிய அனுபவம் உண்டா என்று கேட்டனர். இல்லை என்று சொன்னேன். மிகக் கடுமையான பணி; அனுபவம் இல்லாமல் இறங்கினால் அவஸ்தைக்கு ஆளாவீர்கள் என்றார்கள். எதிர்மறையாகவே பலரும் அபிப்ராயம் சொன்னார்கள். ஓர் அணி அமைவதும் அதற்குத் தேவையான பொருள் உதவி கிடைப்பதும் தமிழ்ச் சூழலில் அபூர்வம் என்பதால் நான் பணிக்களத்தை நேரடியாக அணுகுவது என்று முடிவு செய்தேன்.

எனது நண்பர்கள் அணியின் முதல் கூட்டத்தைக் கூட்டினேன். பத்து பேரும் கலந்து கொண்டார்கள். நான் சில எண்ணங்களை முன்வைத்தேன்.

1. ஒரு தாலுக்காவின் சிறு அலகான ஒரு கிராமத்தை எடுத்துக் கொள்வோம். அந்த கிராமத்துக்கு நம்மால் முடிந்ததை முழுமையாகச் செய்வோம் என்று சொன்னேன்.
2. ஒரு கிராமத்துக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வாங்க தேவைப்படும் தொகையை முடிவு செய்து கொண்டோம். அத்தொகையை நன்கொடையாக பெறும் பொறுப்பை பத்து பேரும் பகிர்ந்து கொண்டோம்.
3. நன்கொடை ஒவ்வொருவருக்கும் நேரடியாகத் தெரிந்த நண்பர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ மட்டுமே பெறப்பட வேண்டும். வேறு எவரிடமும் கேட்கக் கூடாது என்று முடிவு செய்தோம்.
4. நன்கொடை திரட்ட நான்கு நாட்கள் அவகாசமே தரப்பட்டது. ஒவ்வொரு நாளும் முற்பகலும் பிற்பகலும் ஒவ்வொருவரும் திரட்டிய தொகை எவ்வளவு என்பதை ஒருங்கிணைப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். நன்கொடையளிப்பவர்களின் பெயர் முகவரி தொடர்பு எண் ஆகியவை அணியின் முன் வழங்கப்பட வேண்டும்.
5. நிதி திரட்டல் முடியும் வரை அணி உறுப்பினர்கள் நிவாரணம் தொடர்பாக வேறு எந்த பணியும் ஆற்ற வேண்டியதில்லை. கிராமத்தை அடையாளப்படுத்தும் பணியை தன் பங்கு நிதி திரட்டலுடன் இணைந்து கூடுதலாக ஒருங்கிணைப்பாளர் மேற்கொள்வார்.

திட்டம் உருவான அன்றே நான் எனது வெளியூர் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். வெளிநாடுகளில் வசிப்பவர்களையும். எங்கள் திட்டத்தைத் தெரிவித்தேன். என் பங்களிப்பாக நான் உறுதியளித்த நிதி திரட்டலின் தொகையில் ஒரு பகுதியை நன்கொடை அளிப்பதாக உறுதியளித்தனர். என் வங்கிக் கணக்கு விபரத்தைப் பெற்றுக் கொண்டு அதில் தொகையை செலுத்தி விட்டு தகவல் சொல்வதாகக் கூறினார்கள். நானும் ஒரு தொகை அளித்தேன். என்னுடைய நிதி திரட்டல் இரண்டே நாளில் நிறைவு பெற்றது. திட்டம் உருவானதற்கு மறுநாள் நான் சிதம்பரம் சென்றேன்.

அரசு அதிகாரிகளைச் சந்தித்து மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டு கிராமங்களைக் கூறுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்கள் இரண்டு கிராமங்களைச் சொன்னார்கள். நான் அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு அவற்றில் ஒன்றை நிவாரணப் பணிகளுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். தேர்ந்தெடுத்த கிராமத்தையும் அதில் செய்ய உள்ள பணிகளையும் உங்களிடம் தெரிவித்த பிறகு நிவாரணம் வழங்குகிறோம் என்று உறுதி கொடுத்தேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அன்று மதியமே புவனகிரி தாலுக்காவில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைத் தேர்வு செய்தேன்.

வெள்ள பாதிப்பு என்பது என்ன?
பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு கிராமம் என்பது 800லிருந்து 1200 பேர் வரை மக்கள் தொகை கொண்டதாக இருக்கும். இது ஒரு சராசரி கிராமம். 2000 பேர் வரை மக்கள்தொகை கொண்ட பெரிய கிராமங்களும் உண்டு. மழை வெள்ள பாதிப்பில் முதன்மையானது என்பது கூரை வீடுகளின் தரை நாட்கணக்கில் ஈரம் காயாமல் சொதசொதத்து விடுவது. அவர்கள் வீட்டில் மண் அடுப்பு தரை ஈரத்தால் ஈரமாகி விடும். அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் விறகும் ஈரமாகி விடும். அவர்களுடைய துணிமணிகள் உடுத்த முடியாத அளவுக்கு ஈரமாகி விடும். வீட்டில் இருக்கும் சொற்ப தானியங்கள் மிகை ஈரத்தால் பயன்படுத்த இயலாததாகி விடும். நான்கு நாட்கள் விடாமல் பெய்யும் மழை ஒரு கிராமத்தின் பாதிக்குப் பாதி மக்களை செயல்பட முடியாதவர்களாக ஆக்கி விடும்.

குழந்தைகளுக்கோ முதியவர்களுக்கோ நோய்த்தொற்றால் காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டால் நிலைமை சிக்கலாகி விடும்.
கிராமத்தில் இருக்கும் பெரும்பாலான கூரை வீடுகள் 100 சதுர அடி அளவே பரப்பு கொண்டவை. நான் அந்த கிராமத்தின் ஒவ்வொரு தெருவாக ஒவ்வொரு வீடாகச் சென்று பார்த்தேன். அதனால் அங்கேயிருக்கும் பலருடன் அறிமுகமாகிக் கொண்டேன். அவர்களின் சிக்கல் என்னென்ன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டேன். உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் இப்போது நினைத்தாலும் சிலிர்க்கச் செய்கிறது. அவர்கள் கூறினர்: ‘’நீங்கள் எங்கோ ஓர் ஊரிலிருந்து நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து எங்களுக்கு உதவ வந்துள்ளீர்கள். நீங்கள் வந்ததே பெரிய ஆறுதல். உங்களால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள்’’. ஒருவர் கூட இன்னது வேண்டும் என்று கேட்கவில்லை.

நான் ஊர் திரும்பி அணி நண்பர்களைக் கூட்டி புவனகிரி தாலுக்காவில் மேற்கொண்ட பூர்வாங்க பணிகளை விளக்கினேன். நாங்கள் எதிர்பார்த்த நன்கொடை திரண்டு கொண்டிருந்தது. இன்னும் சொற்ப தொகையே வந்து சேராமல் இருந்தது. நாங்கள் நிர்ணயித்த இலக்கு முழுவதும் திரளும் வரை காத்திருந்தோம். முழுதும் திரண்ட பின் அடுத்த பணியை மேற்கொண்டோம்.

ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் கிராம நிர்வாக அதிகாரி தெரிவித்த விபரங்கள் அடிப்படையிலும் உள்ளூர் பிரமுகர்களின் கோரிக்கையின் படியும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாங்கள் பத்து கிலா அரிசி, மளிகைப் பொருட்கள், எண்ணெய், பாய், போர்வை, வேட்டி, புடவை மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் ஆகியவற்றை ஒரு சிப்பமாக முறையாகக் கட்டி ஒரு வாகனத்தில் ஏற்றிக் கொண்டோம். இதனால் மக்களை கிராமத்தில் இருந்த கோயில் வாசலில் திரளச் சொல்லி ரேஷன் கார்டு அடிப்படையில் பெயர் சொல்லி அழைத்து சிப்பங்களைக் கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டோம். அவ்வாறே செய்தோம். பணியில் என்னென்ன முன்னேற்றங்கள் என்பதை அவ்வப்போது அதிகாரிகளுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்ததால் அதிகாரிகள் நல்ல பழக்கத்திலிருந்தனர். மாவட்ட அதிகாரிகள் சிலர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். அவர்களைக் கொண்டே சிப்பங்களை கொடுக்கச் செய்தோம். ஒரு கிராமம் முழுமைக்குமான பணி இரண்டு மணி நேரத்தில் முடிந்தது. ஊர் திரும்பும் போது ஒரு விஷயத்தை சரியாகச் செய்தோம் என்ற நிறைவு இருந்தது.

அடுத்த சில நாட்களில், எங்கள் பணி குறித்து கேள்விப்பட்ட சில அமைப்புகள் எங்களைத் தொடர்பு கொண்டன. அவர்களுக்கு நாங்கள் செயலாற்றிய பாணியிலேயே பணியை ஒருங்கிணைத்து மேலும் ஐந்து கிராமங்களுக்கு உதவி செய்தோம்.