Saturday 26 October 2019

சீரமைத்தல்

சமீபத்தில் மேஜையை சீராக்குவது எப்படி என்று ஒரு கவிதையை எழுதினேன். கட்டுமானத் தொழிலுக்கு வந்த பின்பு, இரவு ஏழு மணிக்கு மேல் மேஜை முன், நாற்காலியில் அமர்ந்து கணக்கு எழுதுவதுண்டு. கோப்புகளில் ரசீதுகளை கோர்த்து வைப்பதுண்டு. பெரும்பாலும் அங்கே அமர்ந்திருப்பேன். மேஜையில் குறைவான பொருட்கள் மட்டுமே மேலே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் பலவிதமான பொருட்கள் குவிந்து விடும். கவிதை எழுத என்று ஒரு டைரி வைத்திருக்கிறேன். பெரும்பாலும் லேப்டாப்பில் தான் எழுதுவேன் என்றாலும் எப்போதாவது டைரியில் எழுவதுண்டு. அதனுடன் இன்னொரு டைரியும் இருக்கும். இப்போது கண்ணில் படுவது ரயில்வே கால அட்டவணை. அதன் அடியில் ஜராட் டையமண்ட் எழுதிய புத்தகம். அதன் கீழே தமிழ்ப் புத்தகம் ஒன்று. செல்ஃபோன். இரண்டு செல்ஃபோன் சார்ஜர். அடுத்த வாரம் செல்ல வேண்டிய நண்பர் திருமணத்தின் அழைப்பிதழ். ஒரு பிளாஸ்டிக் டிரே. அதில் சில காகிதங்கள். 

நாளை தீபாவளி. சாமி கும்பிட்டு புத்தாடை அணிந்த பின் மதியம் வரை வீட்டில் தான் இருப்பேன். சற்று முயற்சி செய்து மேஜையை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வரலாம் என இருக்கிறேன். 

இதில் நான் மட்டும் முடிவெடுத்தால் போதாது. மேஜையும் முடிவெடுக்க வேண்டும். பார்க்கலாம்.