Saturday 2 November 2019

ஆழமும் உயரமும் - 1


தஞ்சை பயணச்சுற்றை நினைவுகளிலிருந்தே உண்டாக்கினேன். மோட்டார்சைக்கிள் ஓட்ட ஆரம்பித்ததிலிருந்தே இந்த பிரதேசங்களுக்குச் சென்றிருக்கிறேன். இந்த பகுதியில் பெரும்பாலும் நானும் என்னுடைய மோட்டார்சைக்கிளும் ஒருமுறை கூட செல்லாத பகுதி என்பது அனேகமாக இல்லை என்று சொல்லலாம். அப்போதெல்லாம் ஒரு பழக்கம் உண்டு. புதிதாக ஏதேனும் ஓர் ஆலயத்தின் பெயரைக் கேட்டால் மறுநாள் அல்லது அடுத்த சில நாட்களில் அங்கு சென்று வந்து விடுவேன். எனக்கும் பைக் பயணத்துக்கும் இடைவெளியே இருந்ததில்லை என்பதால் நினைத்தவுடன் கிளம்பியிருக்கிறேன். இன்றும் அதே பைக் தான். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக. புதிதாக ஒரு கிராமத்துச் சாலையில் செல்வதாகத் தோன்றும் போது சில நிமிடங்களில் முன்னர் எப்போது பயணித்தோம் என்பது நினைவில் வரும். அன்று நடைபெற்ற சம்பவங்கள், அப்போதைய மனநிலை ஆகியவை துல்லியமாக மேலெழும்.

எந்த ஒரு தலத்தையும் வரலாற்றில் அதன் இடத்தையும் முக்கியத்துவத்தையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே திருத்தலங்களை நோக்கிச் செல்வது என்பது என்னைப் பொறுத்த வரையில் வரலாற்றை நோக்கிச் செல்வதே. நாம் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் தோறும் நிகழ்காலத்தைப் புரிந்து கொள்கிறோம். நிகழ்காலத்தைப் புரிந்து கொள்ளும் தோறும் நம்மைப் புரிந்து கொள்கிறோம்.

தஞ்சை பயணச்சுற்றில் இடம் பெற்றிருக்கும் தலங்கள் குறித்தும் அவை குறித்து என் மனதில் இருக்கும் மனப்பதிவுகள் குறித்தும் சிறு சிறு குறிப்புகளாக எழுதுவது இப்பிராந்தியத்தை மேலும் புரிந்து கொள்ள உதவக் கூடும்! இவை ஆய்வாளனின் குறிப்புகள் அல்ல. ஓர் பயணியின் குறிப்புகளே!

சீர்காழி

சைவம் தமிழ்நாட்டில் மிக வலுவாக நிலைபெற்றதற்கு காரணமான ஊர். தன் குறுகிய வாழ்நாளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களுக்குச் சென்று அங்கே இருந்த சிவாலயங்கள் குறித்து பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களைப் பாடி மிக அதிக சமூகங்களைச் சைவத்துக்குள் கொண்டு வந்து ஒரு வலுவான மறுதுவக்கத்தை சைவத்துக்கு உண்டாக்கிக் கொடுத்த திருஞானசம்பந்தர் பிறந்த ஊர். ‘’தோடுடைய செவியன்’’ திருஞானசம்பந்தரின் ‘’உள்ளம் கவர் கள்வனாக’’ காட்சி கொடுத்த ஊர். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம். சிவ பக்தர்களின் நினைவில் இனிக்கும் தலம். பைரவ வழிபாட்டின் அம்சமாக சட்டநாதர் வழிபடப்படும் இடம். சீர்காழி நகரின் ஒரு பகுதியாக ‘’திருக்கோலக்கா’’ என்ற அழகிய சிறு கோயில் ஒன்று உள்ளது.

மண்ணும் விண்ணும் அளக்கும் திரிவிக்ரமப் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கும் காழிச் சீராம விண்ணகரம் இங்கே உள்ளது. தாடாளன் கோவில் என்பர்.

நாங்கூர் திவ்யதேசங்கள்

சோழநாட்டு திவ்யதேசங்கள் 40ல் 12 தலங்கள் நாங்கூரில் மட்டுமே உள்ளன. தில்லைவாழ் அந்தணர்கள் 3000 என்ற எண்ணால் குறிக்கப்படுவது போல நாங்கூர் 4000 என குறிக்கப்படுகின்றனர். வைணவத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊர். தை மாதம் நடைபெறும் நாங்கூர் கருடசேவை மிகப் பிரசித்தமானது.

நரசிங்கன் பேட்டை

தஞ்சைப் பிராந்தியத்தில் இருக்கும் மிகச் சில பல்லவர் கால ஆலயங்களில் முக்கியமானது. பல்லவர்கள் நரசிம்ம வழிபாட்டில் பெரும் ஈடுபாடு கொண்டவர்கள். தென்னிந்தியாவை காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட ஒரே அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற கனவு கண்டவர்கள். ராஷ்டிரகூடர்களுக்கும் அதே கனவு இருந்தது. பின்னர் வந்த சோழர்களே அதை நனவாக்கினார்கள். பல்லவர்களால் அமைக்கப்பட்ட ஆலயம். ஆயிரத்து நானூறு ஆண்டுகள் வரலாறு உடையது. நரசிங்கன் பேட்டை நரசிம்மர் வரப்பிரசாதி. தினமும் பல ஊர்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும் திருத்தலம். மயிலாடுதுறை – கும்பகோணம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

திருவெள்ளியங்குடி

பெருமாள் வில் ஏந்தி நின்ற கோலத்தில் இராமனாக சேவை சாதிக்கும் தலம்.பெருமாளின் அழகு அபூர்வமானது. அந்த அழகைக் காண கண் கோடி வேண்டும்.  கண் நோய் உடையவர்கள் வழிபட்டால் நோய் விரைவில் தீரும் என ஐதீகம்.

ஒருமுறை நான் சாமி கும்பிட அங்கே சென்றிருந்தேன். அப்போது ஒரு குடும்பம் சென்னையில் இருந்து வந்திருந்தது. பட்டர் அக்குடும்பத் தலைவரிடம் என்ன உத்தியோகம் என பொதுவாக விசாரித்தார். வந்தவர் விபரம் சொன்னார். அவர் சென்னையின் பிரபலமான கண் மருத்துவர்களில் ஒருவர். அடுத்த வாரம் தனக்கு கண் அறுவைசிகிச்சை நடக்க உள்ளதாகவும் அதற்காகவே இங்கே பிராத்தித்துக் கொள்ள வந்திருப்பதாகவும் சொன்னார்.

திருவாவடுதுறை

மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின், தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு நிலை பெற்ற பின்னரே எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருளில் மூழ்கிக் கிடந்த தமிழகம் ஒளிக்கு மீண்டது. விஜயநகரின் ஆதரவால் சமய நிறுவனங்கள் அக்காலத்திலேயே வளரத் துவங்கின. திருவாவடுதுறை மடம் நாயக்க மன்னர்களாலும் மராத்திய மன்னர்களாலும் ஆதரிக்கப்பட்டது.
உ.வே.சா-வின் ‘’என் சரித்திரம்’’ திருவாவடுதுறை மடம் குறித்த நுண் சித்திரங்களை  அளிக்கும் நூல். உ.வே.சா திருவாவடுதுறையை ‘’சிவ ராஜதானி’’ என்கிறார்.

மயிலாடுதுறை

அம்பிகை சிவபெருமானை மயில் வடிவம் கொண்டு பூஜித்த தலம். சுவாமியின் பெயர் மாயூரநாதர். அம்மன் அபயாம்பிகை. மாயூரநாதர் கோயில் கொண்ட தலமாதலால் இவ்வூர் மாயூரம் என பெயர் பெற்றது. திருஞானசம்பந்தர் மாயூரநாதர் மீது பாடிய தேவாரப் பதிகங்களில் மாயூரத்தை மயிலாடுதுறை என்கிறார்.

பதிகம் பாடும் போது இறைவனையும் திருத்தலத்தையும் வெவ்வேறு பெயர்களில் பாடுவது என்பது தமிழ் மரபு. மயிலாடுதுறையில் கோயில் கொண்டுள்ள இறைவன் மாயூரநாதன். மாயூரநாதன் கோயில் கொண்டுள்ள ஊர் மயிலாடுதுறை. உ..வே.சா தம் ஆசான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்ற ஊர் மயிலாடுதுறை.