Thursday 12 December 2019

ஒரு பிரியம்

ஆகஸ்ட் மாதத்தில் எனது நுகர்வு குறித்து ஒரு குறிப்பினை எழுதினேன். சந்தையில் ஆயிரக்கணக்கான பொருட்கள் குவிந்திருக்கின்றன. அவை உற்பத்தி செய்யப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் பல்வேறு சமூக, பொருளியல் அம்சங்கள் சார்ந்தவை.

சிறு வயது முதலே நான் குறைவான பொருள் நுகர்வுக்குப் பழகியவன். புத்தகங்கள் மீது தீராத விருப்பம் கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். ஆயினும் இன்றும் ஒரு சிறுவனின் ஆர்வத்துடனேயே பொருட்களைப் பார்க்கிறேன். ஆச்சர்யப்படுகிறேன்.

தீவிர இலக்கிய வாசகரும் சிறந்த புகைப்படக்கலைஞரும் நண்பருமான திரு.கணேஷ் பெரியசாமி அவர்கள் சில வாரங்கள் முன்பு ஸ்விட்சர்லாந்திலிருந்து அழைத்தார். நான் விரும்பும் பொருட்கள் என நான் எழுதியதை அவர் வாசித்திருந்தார். அதில் ஸ்விஸ் கத்தியை நான் விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தேன். அவர் ஸ்விட்சர்லாந்தில் இருப்பதால் எனக்கு அதனைப் பரிசளிக்க விரும்புவதாகக் கூறினார்.


நான் என் ஊரின் கடைத்தெருவுக்குளேயே பிரவேசிக்காமல் சுற்றிக் கொண்டு செல்பவன். நான் விரும்பும் பொருளொன்று கடலும் கண்டங்களும் தாண்டி வருவதென்பதில் ஆர்வமூட்டும் நூதனமான ஒன்று இருப்பதாகத் தோன்றியது.


நண்பரின் பரிசு சில நாட்கள் முன்னால் கூரியரில் வந்து சேர்ந்தது. அழகிய வடிவமைப்பில் என்னுடைய பெயரைப் பொறித்து அனுப்பியிருக்கிறார். மிகக் குறைவான எடையுடன் இருக்கிறது. அந்த சிறு வடிவத்துக்குள் ஒரு கத்தரிக்கோல் உண்டு. ஒரு ஸ்க்ரூ டிரைவர் இருக்கிறது. சிறு லென்ஸ் உள்ளது. காய்கறி நறுக்கும் கத்தி இருக்கிறது.  சட்டைப்பையில் வைத்திருந்தால் கூட பாரமற்றுள்ளது. இதைத் தயாரிக்கும் Victorinox நிறுவனம் உலகப்புகழ் பெற்றது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக இத்தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

ஒரு பொருள் பரிசளிக்கப்படும் போது அதனுடன் அன்பின் முடிவற்ற சாத்தியங்களும் பிரியங்களும் இணைந்து விடுகின்றன. நண்பரின் பிரியம் என்னைத் திகைக்கச் செய்கிறது.

தங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே!