Saturday, 28 December 2019

புத்தாண்டு எண்ணங்கள்


நான் திட்டமிடுதலில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவன். சிறுவயதிலிருந்தே எனக்குத் திட்டமிட்டு பழக்கம் உண்டு. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது சின்ன சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரின் பல பகுதிகளில் சுற்றுவேன். அப்போது எனக்கு நகரை எந்தெத்த விதங்களில் விரிவாக்கம் செய்யலாம் என்ற யோசனைகள் இருந்துள்ளன. உறவினர்களிடம் கூறுவேன். யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நீ ஏன் இதையெல்லாம் யோசிக்கிறாய் என்பார்கள். யாரோ ஒருவர் யோசனையிலிருந்துதான் பழையனவற்றை மாற்றியமைக்கும் புதிய விஷயங்கள் பிறக்கின்றன என்பதால் ஏன் நான் யோசிக்கக் கூடாது என்று நினைப்பேன். சிலர் பாராட்டுவார்கள். எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார் செய்வதை மிக நேர்த்தியான பணிமுறையாகத் திட்டமிட்டு வடிவமைப்பார். அவரிடம் 25 விழுக்காடு மதிப்பெண்ணுடன் அவர் வகுப்புக்கு வருபவன் 45 மதிப்பெண் பெறுவான். 50 மதிப்பெண் எடுப்பவன் 75 மதிப்பெண் வாங்குவான். 80ஐ 90க்குக் கொண்டு வருவார். அவரிடம் வந்தும் ஓரிருவர் தேர்ச்சியடையாமல் போவர் என்பது அவர்களின் பிரத்யேகமான பிரம்மலிபி.

அவர் காலை 3 மணிக்கு எழுவார். யோகப்பயிற்சிகள் செய்வார். தினமும் நடத்த வேண்டிய பாடங்களை தினமும் படித்து குறிப்பு எழுதுவார். கோயிலுக்குச் சென்று வருவார். பள்ளிக்கு பள்ளி நேரத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்பாகவே வந்து விடுவார். பள்ளி விட்ட பின்னும் ஒரு மணி நேரம் இருந்து விட்டு செல்வார். நான் பத்தாம் வகுப்பு தேர்வு கடைசித் தேர்வு எழுதியதும் அவரிடம் சென்று ஆட்டோகிராஃப் கேட்டேன். ’’தன்னம்பிக்கை நம்மை உயர்த்தும்’’ என்று எழுதி ஆட்டோகிராஃப் இட்டார். தான் ஆசிரியப் பணிக்கு வந்து முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன; ஒரு மாணவனின் ஆட்டோகிராஃப் புத்தகத்தில் இடும் முதல் கையெழுத்து என்று சொன்னார்.

பின்னர் கல்லூரி சென்றேன். பொறியியல் பட்டம் பெற்ற பின் வணிகத்துக்குள் வந்தேன். வணிகத்தை நிலைநிறுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சி மற்றும் உழைப்பு. லௌகிக வாழ்க்கையின் சவால்களினூடும் என்னுடைய பணிகளைத் திட்டமிட்டே செய்கிறேன். துல்லியத் திட்டமிடலை சில இடங்களில் தளர்த்திக் கொள்ளவும் செய்கிறேன். எப்போதும் இலக்குகள் இருந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றை நோக்கி மெல்லவானாலும் முன்னேறியே செல்கிறேன்.

2020 பிறக்க உள்ளது. இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ஒரு இந்திய விழாவில் பங்கெடுப்பது எனத் திட்டமிட்டது நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த ஆண்டு புதிதாக ஒரு அபார்ட்மெண்ட் கட்டத் திட்டமிட்டுள்ளேன். சற்று பெரிய பிராஜெக்ட். இடம் என்னுடைய சொந்த இடம். வீடுகள் கட்டி விற்பனை செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு உடலைப் பராமரித்தலுக்கு முக்கியத்துவம் தரலாம் என்று நினைக்கிறேன். கடந்த சில வாரங்களாக நண்பரின் சிகிச்சைக்காக உடனிருந்தது நம் சமூகம் எவ்விதம் ஆரோக்கியம் தொடர்பாக எவ்விதத்திலும் உதவியற்ற சமூகமாக இருக்கிறது என்பதை அறிய வைத்தது. எனவே இந்த ஆண்டு உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர உள்ளேன்.

ஒரு நாளின் செயல்திட்டம்

1. காலை 3 மணிக்கு எழுதல்.

2. நல்லெண்ணெய் மூலம் வாயைத் தூய்மை செய்தல் (ஈறு, பற்களை வலுவூட்டக்கூடியது)

3. ஓங்காரம் உச்சரித்தல் ( ஒரு மணி நேரம்)

4. நடைப்பயிற்சி (7 கி.மீ)

5. சூர்ய நமஸ்காரம்

6. யோகப் பயிற்சிகள், தியானம்

7. புத்தக வாசிப்பு (காலை ஒன்றரை மணி நேரம், மாலை ஒன்றரை மணி நேரம்)

8. மாலை 6 மணிக்குள் இரவு உணவை அருந்துதல்

அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.