Sunday 29 December 2019

ஒரு புதிய துவக்கம்

புத்தாண்டுத் தீர்மானங்கள் வாசித்து விட்டு நண்பர்கள் அழைத்து ஊக்கப்படுத்தினர். செயலாக்க முடிவு செய்துள்ள விஷயங்கள் மிக நல்ல தன்மை கொண்டவை; பயனளிக்கக் கூடியவை என்றனர். 

நுகர்வுச் சூழல் நம்மைச் சூழ்கிறது. நமது பிள்ளைப் பிராயத்திலிருந்தே நாம் நம்மை அறியாமல் பலவித சமூகப் பழக்கங்களால் சூழப்படுகிறோம். இரண்டு நூற்றாண்டுக்கு முன்னால், தமிழ்நாடு பிரிட்டிஷ் ஆட்சியில் உணவுப் பஞ்சத்துக்கு ஆளானது. அதன் விளைவாக மக்கள்தொகையில் கணிசமான எண்ணிக்கையை பஞ்ச சாவு விழுங்கியது. அப்பஞ்சத்தின் விளைவாக இந்த மண்ணில் பாரம்பர்யமாக நிலவிய கல்வியும் சமூக அமைப்பும் இல்லாமல் ஆனது. சக மனிதர்களுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லாத - சக மனிதர்களை நம்பாத மக்கள் சமூகமாக தமிழ்ச் சமூகம் ஆனது. அதன் விளைவுகளில் ஒன்று உடல் உழைப்பைச் சற்று கீழான இடத்தில் வைத்து மதிப்பிடும் போக்கு. 

இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் மக்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும் விஷயங்களாக தொற்று நோய்களே பெருமளவில் இருந்துள்ளன. உலகளவில் மருத்துவத் துறையில் நிகழ்ந்த ஆராய்ச்சிகள் தொற்றுநோய்களைக் கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கியுள்ளன. எனினும், வாழ்க்கைமுறை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் இன்று சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது.

இன்று தமிழ்ச்சமூகத்தில் உணவுப் பற்றாக்குறை இல்லாமல் ஆகியுள்ளது. ஆனால் சமூகத்தில் குறைந்தது 80% பேர் மது அருந்துபவர்களாக ஆகியுள்ளனர். குறைவான உடல் உழைப்பும் மதுவும் பொருத்தமற்ற உணவுமுறையுமே இன்றைய நோய்களுக்கான மூலம். 

நுகர்வு நம்மைக் கட்டற்ற நுகர்வோராக மாற்றியிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்திய சமூகம் - தமிழ்ச் சமூகம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த பழக்கங்களை - கண்டுணர்ந்து நவீன வாழ்க்கை முறைக்குத் தகுந்தாற் போல அமைத்துக் கொள்ளுதல் மனிதனை நுகர்வோனாக மட்டும் பார்க்கும் முதலாளித்துவப் பார்வைக்கு எதிரான முக்கியமான செயல்பாடாக இருக்கும் என்று பட்டது. 

இன்று காலை அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவர் அழைத்து காலை 3 மணிக்கே விழிப்பது நல்ல முடிவு என்றார். எழுந்ததும் ஓம் ஓம் ஓம் என  ஒரு மணி நேரம் தொடர்ந்து உச்சரிப்பது மனதை எல்லா விதமான அழுத்தங்களிலிருந்தும் நீங்கியிருப்பதற்கு பெருமளவில் உதவும் என்றார். பின்னர் உடன் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியும் யோகாசனங்களும் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள ஏற்றதாயிருக்கும் என்று தன் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

கர்நாடகாவில் இருந்து ஒரு அழைப்பு. அதிகாலை கண் விழித்தல் நாம் வழக்கமாக இயங்கும் நேரத்தில் நாலில் ஒரு பங்கை சூர்ய உதயத்துக்குள் வழங்கி விடுகிறதே என ஆச்சர்யப்பட்டார். 

ஒரு மனிதன் எவ்வாறு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது கல்விக்கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இங்கே தரவுகள் மட்டுமே இருக்கின்றன. தமிழ்ச் சமூகத்துக்கு அவசியமான உபயோகமான கல்வி அளிக்கப்படவேயில்லை. 

2020 ஒரு புதிய துவக்கமாக அமையட்டும்.