Thursday, 2 January 2020

முதல் தினம்


நேற்று உத்தமர் கோவில் சென்றிருந்தேன். சோழ நாட்டு திவ்ய தேசங்கள் நாற்பது. வைணவ மரபில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்கள் 108. அதில் பூலோகத்தில் உள்ளவை 106. மற்ற இரண்டும் பரமபதம் மற்றும் வைகுண்டம். இந்த 106 திவ்யதேசங்களில் சோழ நாட்டு திவ்ய தேசங்கள் 40. நடு நாட்டு திவ்ய தேசங்கள் 2. பாண்டி நாட்டு திவ்ய தேசங்கள் 18. மலை நாட்டு திவ்ய தேசங்கள் 13. வட நாட்டு திவ்ய தேசங்கள் 11. தொண்டை நாட்டு திவ்ய தேசங்கள் 22. 

இவற்றில் நான் 50க்கும் மேற்பட்ட திவ்ய தேசங்கள் வரை சென்றிருப்பேன். திவ்யதேசங்கள் அனைத்துக்கும் செல்ல வேண்டும் என விரும்புபவர்கள் முதலில் நடு நாட்டு திவ்ய தேசத்தில் துவங்கலாம். இரண்டு தலங்கள். கடலூர் அருகில் உள்ள திருவஹீந்திரபுரம் மற்றும் திருக்கோவிலூர். நடு நாடு முழுமை பெற்று விடும். 

சோழ நாட்டு திவ்ய தேசங்களில் உத்தமர் கோவிலும் அன்பிலும் நான் சென்றதில்லை. நெடு நாளாக செல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன். நேற்று சென்றேன். 

புத்தாண்டுத் தீர்மானங்களின் படி அதிகாலை விழித்து எண்ணிய வண்ணம் அனைத்தையும் செய்தேன். காலை புத்தம் புதிதாக இருந்தது. நான் மக்களைச் சந்திக்க விரும்புபவன். மக்களுடன் இருக்க விரும்புபவன். எனவே பண்டிகை தினங்களில் பயணிப்பதை விரும்புவேன். காலை 8.10 எக்ஸ்பிரஸில் திருச்சி பயணமானேன். அகல ரயில்பாதையில் விரைவு ரயில்கள் மயிலாடுதுறையிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் திருச்சி சென்றடைந்து விடுகின்றன. பேருந்தெனில் குறைந்தபட்சம் நாலரை மணி நேரம் ஆகிவிடும். 

சிறு வயதில் ரயிலிலும் ரயில் நிலையங்களை ஒட்டியும் வாழ்க்கை அமைய வேண்டும் என விரும்புவேன். ரயிலைப் பார்ப்பது ரயில் ஹாரனைக் கேட்பது என்பது பரவசமூட்டும் அனுபவமாக இருக்கும். 

திருச்சி ஆலயங்கள் நிறைந்த ஊர். மக்கள் குடும்பம் குடும்பமாக  ஆலயங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். மக்கள் முகத்தில் மகிழ்ச்சி. எப்போதும் இறைவனிடத்தில் அவர்களுக்கு ஒரு பிராத்தனை இருந்து கொண்டேயிருக்கிறது. மேலான வாழ்க்கை. அமைதி. 

உத்தமரைச் சேவித்தேன். உத்தமரைச் சேவித்து ஆண்டின் முதல் தினம் தொடங்கியது.