Friday 3 January 2020

ஒரு முழு வட்டம்


2000 ஜனவரியில் நான் மோட்டார்சைக்கிள் வாங்கினேன். ஹீரோ ஹோண்டா சிடி 100 எஸ் எஸ். 1987ல் அப்பா வீட்டின் முதல் மோட்டார் வாகனத்தை வாங்கினார். ஹீரோ ஹோண்டா சிடி 100. அப்பா அதன் பின் மூன்று வாகனம் மாற்றி விட்டார்கள். நான் இன்னும் மாற்றவில்லை. கார் இருக்கிறது. ஆனாலும் டூ-வீலர் மீது தான் அதிக பிரியம். 2000 புத்தாண்டை ஒட்டித்தான் வண்டி வாங்கினேன். அப்போது டிரைவிங் லைசன்ஸ் எடுத்து சில மாதங்கள் ஆகியிருந்தது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வந்திருந்தேன். அப்போது கல்லூரி மாணவர்கள் மிகச் சிலரிடமே மோட்டார் வாகனம் இருக்கும். இப்போது சொன்னால் அப்படியா என ஆச்சர்யப்படுவார்கள். கல்லூரி மாணவர்களில் கணிசமானோருக்கு இரு சக்கர வாகனம் இயக்கத் தெரியாது. அதிகமாக சைக்கிள்தான் புழக்கத்தில் இருக்கும். விரிவுரையாளர்கள் மோட்டார் வாகனம் பயன்படுத்துவர்.


இன்று என்னுடைய வாகனம் 99999.9 என்ற எண்ணிக்கையைத் தொட்டு மீண்டும் 00000.1 என மறுசுற்றுக்கு வந்தது. புதிய சுற்று புதிய வாகனம் என நம்ப வைக்கிறது. எனக்கும் இருபது வருடம் பின்னால் சென்று விட்டதாக ஓர் உணர்வு. எப்போதோ ஒரு லட்சம் கிலோ மீட்டர் என்ற அளவைத் தாண்டியிருக்கும். நடுவில் பல வருடங்கள் ஸ்பீடாமீட்டர் இயக்கத்தில் இல்லாமல் இருந்தது. கம்பெனியில் அந்த வகை ஸ்பீடாமீட்டர்கள் தயாரிப்பில் இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஹீரோ ஹோண்டா கம்பெனி இரண்டாகப் பிரிந்து விட்டது. சில மாதங்களுக்கு முன் மிக முயற்சி செய்து அதன் உதிரி பாகம் ஒன்றைத் தருவித்து ஸ்பீடாமீட்டரை மீண்டும் இயங்கச் செய்தேன்.


ஓர் உற்ற தோழனைப் போல உடனிருந்திருக்கிறது. சோழ மண்டலம் முழுமையையும் சுற்றியிருக்கிறோம். நானும் எனது வாகனமும் செல்லாத பாதைகள் இந்த பிரதேசத்தில் மிகச் சொற்பம்.


டூ-வீலரில் இந்திய நிலமெங்கும் சுற்றியிருக்கிறேன்.


என்னை என் வாகனம் அறியும்.


இந்த கணம் அதனை எண்ணி உளம் விம்முகிறேன்.