Wednesday 15 April 2020

மாலை உரையாடல்கள் - 1

சில நாட்களாக, மாலை வேலைகளில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். அவர் சமூகப் பிரக்ஞை கொண்டவர். என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். நெடுநாட்களாக எங்களுக்கு பழக்கம். இந்த காலகட்டத்தில் பகல் பொழுதுகளில் சந்தித்துக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. 

பொதுவாக ஒருவர் உரையாடலைத் தொடங்கினால் நான் அதனைக் கவனமாக கேட்டுக் கொள்வேன். அவர்கள் பயன்படுத்தும் சொற்கள், அவர்களுடைய ஆர்வம், அவர்களுடைய உணர்வுகள், பேசும் விஷயத்தில் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாடு ஆகியவற்றைக் கவனிப்பேன். பின்னர் அவர்கள் கூறுவதில் எனக்கு இருக்கும் ஐயங்களைக் கேட்பேன். அதற்கான விளக்கங்களைப் பெறுவேன். அதன் பின்னர் நான் என்னுடைய அவதானங்களைக் கூறத் துவங்குவேன். 

சிந்திக்கும் பழக்கம் கொண்ட ஒருவனாக , நான் சமூகம் சார்ந்த எந்த விஷயத்தையும் தர்க்கபூர்வமாக அணுகி அதன் வரலாற்று இடத்தை ஆராய்ந்து அதனை நான் எப்படி பார்க்கிறேன் என்பதையே எப்போதும் முன்வைக்கிறேன். எனது தரப்பை ஏற்பதும் ஏற்காமல் போவதும் எதிராளியின் முடிவு. நான் முன்வைக்கும் தர்க்கம் முழுமையானதாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாறா உறுதி உண்டு. 

நண்பர் என்னிடம் ஒருநாள் ஆரம்பித்தார்.

‘’தம்பி! வீட்டு மனை விவசாய நிலத்தை கோயில் இடம் பட்டான்னு இரண்டாகச் சொல்றாங்களே ; இதுல பட்டா இடம்னா என்னன்னு புரியுது. கோயில் இடம்னா என்ன?’’

அவரிடம் விளக்கம் கொடுத்தேன்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஊர்களில் அந்த ஊர்களில் இருக்கும் ஆலயங்களுக்கு அந்த ஊரில் இருக்கும் நிலத்தில் கிட்டத்தட்ட பாதி நிலம் சொந்தமாக இருக்கும். அந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் அந்த ஆலயத்துக்குரியது. ஆலயத்தைச் சேர வேண்டியது. அந்த இடத்தில் ஆலய நிர்வாகம் நேரடியாக விவசாயம் செய்யலாம். குத்தகைக்கு விடலாம். வாடகைக்கு விடலாம். அந்த வருமானம் ஆலயத்தைச் சேர வேண்டும். 

அந்த சொத்து ஆலயத்தைச் சேர்ந்தது. ஆலயத்தை நம்பியிருக்கும் அர்ச்சகர்கள், தேவார ஓதுவார்கள், இசைக் கலைஞர்கள், ஆலயத்தின் தூய்மைப் பணியாளர்கள் , தமிழ் கற்றுத் தரும் ஆசிரியர்கள், நடனம் பயிற்றுவிப்போர், சிற்பிகள், சொற்பொழிவாளர்கள் ஆகியோரை நல்ல முறையில் பேண அந்த தொகை செலவழிக்கப்பட வேண்டும். அது ஆலயத்தை மட்டும் பேணும் செயல் அல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிகழும் ஒரு பண்பாட்டுச் சூழலைத் தக்கவைத்துக் கொள்வதற்கான முயற்சியும் கூட. 

1970களில் குத்தகைச் சட்டம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டது. அதில் நில உரிமையாளர் , குத்தகையாளர் ஆகியோரில் நில உரிமையாளரின் உரிமைகள் பெருமளவில் முடக்கப்பட்டு குத்தகைதாரர்களுக்கு பெரும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இது வாக்கு வங்கிக்காக நிகழ்த்தப்பட்டது. 2005ம் ஆண்டுக்குப் பின் வங்கிகள் தங்கள் பிணையில் இருக்கும் வாராக்கடன் சொத்துக்களை ஏலத்துக்கு கொண்டு வருவது தொடர்பாக ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்ற போது நீதிபதிகள் தடை தர முடியாது என்று சொல்லி உரிமையாளர் - குத்தகையாளர் குறித்து விளக்கங்களை அளித்தனர். நிலத்தின் உரிமையாளரே முதன்மையானவர் என நீதிபதிகள் கூறினர். 

நண்பர் என்னிடம் ஒரு விளக்கம் கேட்டார்.

’’கோயில் இடத்தை விற்க முடியுமா தம்பி?’’

‘’விற்க முடியாது. விற்கக் கூடாது. சட்டப்படியும் தார்மீகப்படியும் அது தவறு. பல நீதிமன்ற தீர்ப்புகள் அதனை உறுதிப்படுத்தி விட்டன’’

‘’குத்தகைச் சட்டத்தை எப்படி அரசியல் லாபத்துக்காக என்று கூறுகிறீர்கள்?’’

‘’தமிழ்நாட்டில் ஒரு ஊரின் சராசரி நிலப்பரப்பு 1000 ஏக்கர். சராசரி மக்கள் தொகை 1000. அதில் கோயில் நிலம் 400 ஏக்கர் என எடுத்துக் கொள்வோம். இந்த 400 ஏக்கர் நிலம் 200 பேருக்கு 2 ஏக்கர் வீதம் குத்தகைக்குத் தரப்படும். இந்த 200 பேரும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து குடும்பத்துக்கு மூன்று பேர் எனக் கணக்கிட்டால் 600 பேர் இருப்பார்கள். இதில் 400 பேர் வாக்குரிமை உள்ளவர்களாக இருப்பார்கள். நிலத்தின் விவசாயக் கூலிகளாக 250 பேர் இருப்பார்கள். ஆலயத்தை நம்பி வாழ்பவர்களாக 100 பேர் இருப்பார்கள். ஆலயத்துக்கு முறையாக குத்தகை வருமானம் வருமானால் ஆலயம் உயிர்ப்புடன் செயல்பட அது உதவும். குத்தகை நிலத்தின் 25 சதவீதத்தை சுழற்சி முறையில் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கினால் அவர்களும் பொருளியல் வளர்ச்சி பெற அது உதவும். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக குத்தகைச் சட்டம் கொண்டு வந்தனர். திராவிட இயக்கம் ஆலயங்களை அழிக்க வேண்டும் என்று பரப்புரை செய்த இயக்கம். அவர்கள் ஆட்சிக்கு வந்த போது ஆலயங்களை பொருளியல் ரீதியாக முடக்கினர். மறைமுகமாக குத்தகைதாரர்களை குத்தகை செலுத்தாமல் இருக்க ஊக்கப்படுத்தினர். ஆலயங்களுக்கும் கிராம மக்களுக்கும் இருக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பு மெல்ல அகற்றப்பட்டது.’’

‘’கோயில்கள் ஆக்கபூர்வமான சமூகப் பணிகளை எங்கயாவது செய்யறாங்களா தம்பி’’

‘’கர்நாடகா-ல தர்மஸ்தலான்னு ஒரு ஊர் இருக்கு. மஞ்சுநாத சுவாமி கோயில் இருக்கு. எப்போதும் பெரிய அன்னதானம் நடக்கற இடம். டிஸ்கவரி சேனல்-ல உலகின் மிகப் பெரிய சமையலறைகள் நிகழ்ச்சியில் அத அடிக்கடி காட்டுவாங்க. அந்த கோயில் டிரஸ்டிக்கு பத்ம விபூஷன் விருது கொடுத்துச்சு இந்திய அரசாங்கம்.அது ஒரு உதாரணம். இந்தியாவுல எல்லா மடமும் எல்லா பெரிய கோயிலும் அவங்களால முடிஞ்ச கல்விப்பணி செஞ்சுகிட்டுதான் இருக்காங்க’’

‘’இந்த விஷயத்துக்குள்ள இவ்வளவு கணக்கு வழக்கு இருக்கா. நம்பவே முடியலை தம்பி”

‘’யார் சொல்றதையும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே சுயமா யோசிச்சுப் பார்த்து முடிவுக்கு வாங்க’’

(தொடரும்)