Thursday 16 April 2020

மாலை உரையாடல்கள் - 2

மாலை நண்பர் வந்திருந்தார்.

’’தம்பி! கோயில் நிலம் பற்றி நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தேன். நீங்கள் சொல்வது உண்மைதான்.’’

‘’அப்படியா’’ என்று கேட்டுக் கொண்டேன்.

’’ராஜாஜி பெரிய தலைவரா தம்பி?’’ என நண்பர் வினா எழுப்பினார்.

‘’ஏன் அவ்வளவு சந்தேகமா அந்த கேள்வியக் கேட்கிறீங்க?’’

‘’அவர் செய்த சாதனைகள் பற்றி தமிழ்நாட்டுல யாரும் பேசறது இல்லையே ஏன்?’’

‘’தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட 30 வருஷ காலம் மதுவிலக்கு அமலில் இருந்தது. அதைக் கொண்டு வந்தவர் ராஜாஜி.’’

நண்பர் ஆச்சர்யமடைந்தார். அவர் அதனைக் கேள்விப்பட்டிருக்கவில்லை.

’’பல வருஷமா ஹோசூர்ல பல விதமான தொழிற்சாலைகள் இருக்கே. அந்த ஊரை ஒரு தொழில் மையமா மாத்தணும்னு திட்டமிட்டு வேலைகள் செஞ்சவர் ராஜாஜி’’

நண்பர் அதனையும் கேள்விப்பட்டிருக்கவில்லை.

‘’நீங்கள் ராஜாஜி பற்றி என்னதான் கேள்விப்பட்டீர்கள்?’’

‘’அவர் குலக்கல்வி திட்டம் கொண்டு வந்தார்னு கேள்விப்பட்டிருக்கேன்?’’

‘’வேற என்ன கேள்விப்பட்டீங்க?’’

‘’தம்பி! கோச்சுக்காதீங்க. குலக்கல்வி திட்டம் ஜாதியை வளர்க்கற திட்டம்னு கேள்விப்பட்டேன்.’’

ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்து அவருக்கு விளக்கினேன்.

நாடு சுதந்திரம் பெற்றவுடன், மத்திய அரசு மக்களுக்கு கல்வியறிவு அளிக்க வேண்டும் என்று விரும்பியது. கல்வியறிவு பெற்ற சமூகமே ஒப்பீட்டளவில் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும். சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் சமூகத்திலேயே அமைதி நிலவும். அதனால் வளர்ச்சி ஏற்பட சாத்தியமாகும். மேலும் மனிதர்களின் உழைப்பு சுரண்டப்படாமல் இருக்க அவர்கள் கல்வியறிவு பெற்றிருப்பது அவசியமானதாகும்.

நாம் இந்த விஷயத்தை பலவிதங்களில் அணுக முடியும். தமிழ்நாடெங்கும் நடைமுறை விஷயங்கள் பல திண்ணைப் பள்ளிக்கூடங்களில்  பயிற்றுவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் ஓர் ஆசிரியர் இருந்து கிராம மக்களுக்கு கல்வி அளித்துக் கொண்டிருந்தார். அவர்களையும் உள்ளடிக்கிய ஒரு கல்விமுறை கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஜவகர்லால் நேரு சோவியத் யூனியனை தன் ஆதர்சமாகக் கொண்டவர். அதன் அடிப்படையும் இயங்குமுறையும் முற்றிலும் வேறானது. சோவியத் கல்வியை அரசாங்கத்தின் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதே போல் இங்கும் திட்டமிட்டார் நேரு.

ராஜாஜி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் படிக்க வாய்ப்புள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்ததைக் கண்டார். அதனைக் குறைக்க பள்ளிகளின் வேலை நேரத்தை சில மணி நேரங்கள் கூடுதலாக்கினார். அதாவது , காலை 9.30 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை  என இருக்கும் பள்ளி நேரத்தை காலை 8 மணியிலிருந்து 5.30 மணி வரை என ஆக்கினார். மாணவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து ஒரு பிரிவு காலை 8 மணியிலிருந்து 12.30 மணி வரையும் இன்னொரு பிரிவுக்கு மதியம் 1.30 மணியிலிருந்து 5.30 மணி வரைக்கும் என கல்வி கற்க வாய்ப்பு தந்தார். அரசாங்கத்திற்கு உபரி செலவு இன்றி மாணவர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திட்டம் இது. தங்கள் பணி நேரம் அதிகரிக்கும் என்பதால் ஆசிரியர்கள் அதனை விரும்பவில்லை. அன்று ஆசிரியர்களே கிராமங்களில் அரசாங்கத்தைப் பற்றிய அரசியல் தலைவர்களைப் பற்றிய பொது அபிப்ராயத்தை உருவாக்குபவர்கள். அவர்களுடைய அதிருப்தியைப் புரிந்து கொண்ட திராவிட இயக்கம் அதனை எதிர்த்தது.

ஷிஃப்ட் முறையில் பயின்ற நேரம் போக மீதி நேரம் மாணவர்கள் என்ன செய்வது என்று கேட்கப்பட்ட போது பெற்றோருக்கு அவர்கள் தொழிலில் உதவட்டும் என்றார் ராஜாஜி. அதனை உள்நோக்கத்துடன் திரித்து மேடைக்கு மேடை பரப்புரை செய்து தந்தை செய்யும் தொழிலை மகனை செய்யச் சொல்லி ஜாதியை வளர்க்கிறார் ராஜாஜி என்றனர். சட்டநாதக் கரையாளர் என்னும் சுதந்திரப் போராட்ட வீரர் ’’திருச்சி சிறை’’ என்ற நூலை எழுதியிருக்கிறார். அதனை எவரும் வாசித்துப் பார்க்கலாம். அதில் சுதந்திரத்துக்காக சிறை சென்று எவ்வாறு சிறைக் கொட்டடியில் பல மாதங்கள் அடைபட்டுக் கிடந்தார் ராஜாஜி என்பதன் பதிவுகள் இருக்கின்றன. சிறையில் சிறைக் கைதிகளுக்கு திருக்குறளும் ஷேக்ஸ்பியரும் வகுப்பாக எடுத்தவர் ராஜாஜி. மகாத்மா காந்தி ராஜாஜியை தனது மனசாட்சி என்றார்.அவரை ஜாதி வெறியர் என்றனர். பிற்போக்குவாதி என்றனர்.

திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்ததும் கல்வித்தரம் கீழிறிங்கியது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு என உருவாக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழங்கும் பட்டயம் போல நகைப்புக்குரிய திட்டம் வேறேதும் இருக்குமா என்பது கேள்விக்குறி. பத்தாம் வகுப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பட்டயம் பெற்றால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஆக முடியும். திராவிட இயக்கம் ஏன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து இளங்கலை, முதுகலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்ற மாணவர்களை ஆரம்பப் பள்ளிக்குத் தேர்ந்தெடுக்கவில்லை. அன்று மேற்படி படிப்புகள் படித்து வேலையில்லாமல் இருந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகம் தானே? இன்று மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் 40 சதவீதத்துக்கு மேல் பள்ளி ஆசிரியர்கள் இருக்கின்றனர். கல்வித்தரம் எப்படி இருக்கிறது? எல்லா ஊரிலும் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன என்றால் ஏன் அத்தனை தனியார் பள்ளிகள் துவக்கப்பட்டன? பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஏன் திராவிட இயக்க அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன?

ராஜாஜியின் திட்டம் கூர்மதியுடனும் தொலைநோக்குடனும் வடிவமைக்கப்பட்டது. மக்கள் நலனை மையமாகக் கொண்டது.

ராஜாஜியின் கல்வித்திட்டம் ஜாதியை வளர்க்கும் என்றார்களே அவர்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கிறது. தமிழ்நாட்டின் பல பள்ளிகளில் மாணவர்கள் குறிப்பிட்ட வண்ணங்கள் கொண்ட கயிறுகளை தங்கள் ஜாதிகளை அடையாளப்படுத்தும் விதத்தில் கைகளில் அணிந்திருப்பதாகச் சொல்கிறார்கள். திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து 53 ஆண்டுகள் ஆகி விட்டது. ராஜாஜியின் கல்வித் திட்டம் தோற்கடிக்கப்பட்டு 65 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. ஏன் ஜாதி வெறி பள்ளிகளில் கூட இத்தனை கூர் கொண்டுள்ளது?

ஓர் உண்மையான தேசபக்தர் பிற்போக்குவாதி என வசைபாடப்படுவதும் மக்களை ஜாதியால் பிரித்தவர்கள் தலைவர்கள் என போற்றப்படுவதும் தமிழ்நாட்டில் நடக்கிறது. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்று ஒரு பழமொழி உள்ளது. அது தமிழ்ச் சமூகம் பற்றியதோ?

(தொடரும்)