Thursday 16 April 2020

மாலை உரையாடல்கள் - 3

நண்பர் மாலை உரையாடலை ஒரு கேள்வி மூலம் துவக்கினார்.

ஊழல் அரசு அலுவலர்கள் தொடர்பான விஷயமும் கூட. எந்த கட்சி ஆட்சி வந்தாலும் அதே அரசு ஊழியர்கள்தான் இருக்கப் போகிறார்கள். திராவிடக் கட்சிகள் மட்டும் ஊழல்வாதிகள் என விமர்சிக்கப்படுவது எதனால்?

நான் என் தரப்பைக் கூறினேன்.

உலகில் எல்லா அரசுகளிலும் ஊழல் நடக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஏன் ஜப்பான் அரசின் மீது கூட ஊழல் புகார் அவ்வப்போது எழுவதுண்டு. ஆனால் அவற்றுக்கும் தமிழ்நாட்டின் மாநில அரசில் நடக்கும் ஊழலுக்கும் பெரும் வேறுபாடு உண்டு. 

மேற்படி நாடுகளில் சாமானிய குடிமக்கள் தங்கள் அவசியமான பணிகளை மேற்கொள்ள அங்குள்ள அரசு அலுவலகங்களை அணுகும் போது அங்கிருக்கும் அரசு ஊழியர்கள் எவரும் லஞ்சம் கேட்பதில்லை. அவை எந்த லஞ்சமும் பெறப்படாமல் முறைப்படியே நடக்கின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுகி தங்கள் பணிகள் நிறைவு செய்யப்பட்டு வெளியேறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பொதுமக்கள் என்ன காரணத்துக்காக அரசு அலுவலங்களுக்குச் செல்கிறார்கள்? சாமானியர்கள் இரு சக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெற அரசு அலுவலகங்களை அணுகுகிறார்கள். இரு சக்கர வாகனமோ அல்லது நான்கு சக்கர வாகனமோ பதிவு செய்ய அணுகுகிறார்கள். வாழ்வில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தாங்கள் வாங்கும் சொத்தை பத்திரப் பதிவு செய்ய அணுகுகிறார்கள். சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ள கட்டிட அனுமதி கேட்டு நகராட்சி அலுவலகம் செல்கிறார்கள். கட்டிய வீட்டுக்கு வரி மதிப்பீடு கேட்டு மீண்டும் செல்கிறார்கள். வரி பெயர் மாற்றம் தேவைப்பட்டால் செல்கிறார்கள். ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இதைத் தவிர நடுத்தர வர்க்க சாமானியனுக்கு அரசு அலுவலகம் செல்லும் வேலை மிகவும் குறைவு. போக்குவரத்துத் துறை, பத்திரப் பதிவுத் துறை, உள்ளாட்சித் துறை மற்றும் நுகர்பொருள் வழங்கல் ஆகியவற்றையே சாமானியர்கள் அரசாங்கம் என நினைக்கிறார்கள். அதனையே சற்று விரிவாக்கி தேசம் தங்களுக்குச் செய்யும் செயல்களாக எண்ணுகிறார்கள்.

1. தமிழ்நாட்டில் இந்த அலுவலகங்களில் முறையாக மதிப்புடன் நடத்தப்பட்டவர்கள் என எவரும் இருக்கின்றனரா?

2.  தமிழ்நாட்டில் இந்த அலுவலங்களில் லஞ்சம் கொடுக்காமல் தங்கள் செயல்களை நிறைவேற்றிக் கொண்டவர்கள் என எவரும் உள்ளனரா?

3. இந்த அலுவலகங்களில் லஞ்சம் தர மாட்டோம் என உறுதியாய் இருந்தவர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகாமல் இருந்திருக்கிறார்களா?

4. இந்த அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கும் மக்கள் அரசின் மீதும் நிர்வாகம் மீதும் தேசம் மீதும் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கிக் கொள்கிறார்களே அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

5. அரசு அலுவலகம் என்றாலே லஞ்சம் தர வேண்டும் என்ற மனப்பதிவு பொதுமக்கள் மனதில் உருவாகியிருப்பது தார்மீக வீழ்ச்சி இல்லையா? 

நான் இவற்றுக்கு தமிழ்நாட்டை கடந்த 53 ஆண்டுகளாக ஆண்ட திராவிட இயக்கத்தைக் குற்றம் சாட்டுகிறேன். அவர்கள் அதனை எப்படி நடைமுறைப்படுத்தினார்கள் என்பதை எடுத்துரைக்கிறேன். 

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். அவர்கள் காங்கிரஸ்ஸை எதிர்த்து அரசியல் செய்தார்கள். அன்றைய காங்கிரஸ் லட்சியவாதத் தன்மை கொண்டது. அதன் தலைவர்கள் லட்சியவாதம் மீது நம்பிக்கை கொண்டவர்கள். தேசத்தில் பூசலைக் குறைத்து ஒற்றுமையை நிலைநாட்டி வலுவான தேசத்தைக் கட்டமைப்பதின் சவாலை ஏற்றுக் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்கள். அவர்களுக்கு எதிராக பாப்புலிச பரப்புரையை மேற்கொண்டு அரசியலில் தங்கள் இடத்தை அடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினர். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழலைப் பரவலாக்கினர். ஒரு பாப்புலிச ஆட்சி எவ்வழியிலேனும் தனது ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொள்ளும். நிர்வாகத்தில் ஊழலை ஊக்குவித்து அந்த தொகையில் தங்களுக்கும் பங்கு பெற்றுக் கொண்டனர்.

மத்திய அரசின் துறைகளில் சாமானியர்கள் அணுகுவது ரயில்வே, தபால் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம். அவற்றில் சாமானியர்களுக்கு அளிக்கப்படும் சேவைகளுக்கு லஞ்சம் பெறப்படுவதில்லை.

மாநில அரசு நிர்வாகத்தில் லஞ்சம் மிகுந்திருப்பதால் ஏற்படும் கேடுகள்.

1. லஞ்சம் ஆயிரக்கணக்கான மக்கள் மனதில் அவநம்பிக்கையை உண்டாக்குகிறது. அது தேசத்தின் மீதான அவநம்பிக்கையாக மாறுகிறது. 

2. லட்சியவாத அரசியலுக்கான இடம் இல்லாமல் போய் பாப்புலிச அரசியல் மட்டுமே நிலைக்கிறது.

3. மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள். அதனை பயங்கரவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

4. ஒவ்வொரு குடிமகனுக்கும் அது தனது தேசம் குறித்த தாழ்வுணர்ச்சியை உருவாக்குகிறது. 

5. ஒரு சமூகத்தின் தார்மீக மதிப்பீடுகள் அழிக்கப்படுகின்றன. 

6. ஊழல் மனித மனத்தின் பேராசை சார்ந்தது. அதனை கட்டுக்குள் வைக்க முடியாது. கட்டற்று பெருகிக் கொண்டு செல்வது பேரழிவை உண்டாக்கும்.

7. திராவிட இயக்கத்தின் ஊழல் செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. எ.டு மணற் கொள்ளை.

லஞ்சத்தின் கரங்கள் கடைசியில் மக்களின் கழுத்தையும் இறுக்கத் துவங்கியுள்ளது. வாக்குக்கு பணம் தருவதன் மூலம் ஜனநாயகத்தை கழுவேற்றியுள்ளனர் திராவிட இயக்கத்தினர்.

திராவிட இயக்க பாப்புலிச அரசியல் நம்மை ஒரு விஷச்சுழலில் சிக்க வைத்துள்ளது. அதனை உணர்வதற்கான நேரம் இது.

(தொடரும்)