Friday 17 April 2020

மாலை உரையாடல்கள் - 4

’’தம்பி! நம்ம சமூகம் பழைய விஷயங்களையே விடாம பிடிச்சுக்கிட்டு இருக்கறதால தான் முன்னேறாம இருக்கா?’’

‘’எதை பழைய விஷயங்கள்னு சொல்றீங்க’’

‘’பிறப்புலேந்து இறப்பு வரைக்கும் சடங்குகள் இருக்கே?’’

‘’உலகத்துல சடங்குகள் இல்லாத சமூகம் உண்டா?’’

‘’அங்கெல்லாம் சடங்குகள் குறைச்சலா இருக்கு’’

‘’எல்லா சமூகத்திலயும் திருமணம் உண்டு. குழந்தைக்குப் பெயரிடும் சடங்கு உண்டு. நிச்சயதார்த்தம் உண்டு. சாவுக்குப் பிற்பாடான சடங்குகள் உண்டு. நினைவு தினம் உண்டு.’’

‘’நீங்கள் சொல்வது உண்மைதான்.’’

நண்பர் சில கணங்கள் அமைதியானார். பின்னர் கேட்டார்.

‘’நாம சடங்குகள் செய்யறதாலதான் பிற்போக்கா இருக்கோம்னு நம்மள தமிழ்நாட்டில நம்ப வச்சுடறாங்க. இது ஏன் நடக்குது?’’

மனிதர்கள் சமூகமாக வாழத் துவங்கியதிலிருந்து சடங்குகள் இருக்கின்றன. ஒரு பெரிய கதையைச் சொல்வதற்கான துவக்கத்தை உருவாக்குகிறார் நண்பர். என்னால் எவ்வளவு தூரம் செல்ல முடிகிறது என்று பார்ப்போம் என என் பதிலை கூறத் தொடங்கினேன்.

குகை ஓவியங்கள் ஆதி மனிதர்களால் மொழி உருவாகும் காலத்திற்கு முன்பே வரையப்பட்டவை. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் முக்கியமான குகை ஓவியங்கள் இருக்கின்றன. ஒரு தொல் குடித்தலைவன் பறவையின் இறகுகளால் ஆன கிரீடம் ஒன்றை தலையில் சூட்டியிருப்பதன் சித்திரம் அதில் வருகிறது. தனி மனிதன் இரண்டு விதமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுகிறான். ‘’நான்’’ என்ற தன்னுணர்வு. அது உருவானதுமே அதனைக் கடந்து செல்ல வேண்டும் என்ற உணர்வு. இந்த இரண்டு நிலையும் அவனுக்கு மாறி மாறி ஏற்பட்ட வண்ணமே இருக்கிறது. எல்லா சடங்குகளுமே தனிமனிதன் தன்னைக் கடந்து சென்று குடும்பத்துடன், சமூகத்துடன், இயற்கையுடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியே. சடங்குகள் உருமாறும் இயல்பு கொண்டவை. மானுடப் பிரக்ஞை வளரும் தோறும் சடங்குகள் மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. பிராணிகள் தீயில் பலியிடப்பட்டிருக்கின்றன. இப்போது  மனதின் தீய இயல்புகளை தீயில் இடுங்கள் என்று சொல்கிறார்கள். இரண்டுமே குறியீடு தான். சாலையில் பச்சை விளக்கு எரிந்தால் செல்லலாம் என்றும் சிவப்பு விளக்கு எரிந்தால் செல்லக் கூடாது என்றும் நாம் ஒரு பொதுப் புரிதலில் புரிந்து கொள்வது போல.
எல்லா சடங்கும் எல்லா சமூகங்களிலும் மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. 

இந்திய மண் எப்போதுமே மனிதர்கள் எல்லைகளுடன் உருவாக்கிக் கொள்ளும் எல்லாவற்றையும் தாண்டிச் சென்றவாறு இருக்கவே அறைகூவல் விடுக்கிறது. ஸ்ரீகிருஷ்ணர், புத்தர், சங்கரர், ராமானுஜர், ஸ்ரீராம கிருஷ்ணர் என காலங்காலமாக ஞானிகள் இங்கே தனி மனித அகத்தை மேலான நிலைக்கு வழிநடத்தியிருக்கிறார்கள். உலகிலேயே தனி மனிதர்கள் மேற்கொள்ளும் சடங்குகளுக்கு எந்த கட்டாயமும் உருவாக்காத சமூகம் ஒன்று இருக்குமானால் அது இந்திய சமூகமாகவே இருக்க முடியும். எந்த சமூக நியதிகளுக்கும் எந்த விதமான சடங்குகளுக்கும் உட்படாத பெரும் குழுக்களை பேணிய சமூகமும் இந்திய சமூகமாகவே இருக்கிறது. 

சுயநலமற்ற அனைத்தும் என்னை வந்தடைகின்றன என்றார் ஸ்ரீகிருஷ்ணர். தூய பிரக்ஞையின் மூலம் இருப்பை உணருங்கள் என்றார் புத்தர். அறிவே தெய்வம் என்றார் ஆதி சங்கரர். மனிதனுக்குச் செய்யும் சேவை இறைவனுக்குச் சேவை என்றார் ராமானுஜர். அன்பின் பெருக்கால் யாவும் ஒன்றே என்றார் ராமகிருஷ்ணர்.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னால், இந்தியா அன்னியத் தாக்குதலுக்கு ஆளான வண்ணம் இருந்தது. அன்னிய ஆட்சியாளர்கள் ஹிந்து மதத்தை அழிக்க விரும்பினர். ஆலயங்கள் அழிக்கப்பட்டன. இன்றும் வட இந்தியாவில் பேராலயங்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அப்போது தங்கள் சமயத்தை மரபைக் காப்பாற்றிக் கொள்ள நாம சங்கீர்த்தனம் முன்னெடுக்கப்பட்டது. திரளாக ஓரிடத்தில் கூடி தெய்வ உருவத்தை வழிபட முடியாத நிலையில் இறைவன் பெயரை உச்சரியுங்கள் என்றனர். ஹிந்து மதம் அவ்வாறே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

ஒரு சமூகத்தில் பெரும்பான்மையானோரின் மன அமைப்புக்கு சடங்குகள் எளிதில் பொருந்திப் போகின்றன என்பது ஓர் உண்மை. பெரும்பான்மையானோருக்கு மன அமைதியைத் தருகின்றன என்பது ஓர் நடைமுறை. சமூக மாற்றத்துடன் ஒத்துப் போகாத சடங்குகள் இல்லாமல் ஆகின்றன.

நாராயண குரு தனது வாழ்வில் பல சடங்குகளை மாற்றியமைத்தார். திருமணங்களை எளிமையாகச் செய்யுங்கள் என்றார். மிகக் குறைந்த நபர்கள் உடனிருந்தால் போதும் என்றார். மணமகனின் தாய் தந்தையும் மண மகளின் தாய் தந்தையும் மட்டும் உடனிருக்க திருமணங்கள் நடந்தால் போதும் என்றார். பெரும் தொகை செலவழிக்க நினைத்தால் அதனை மணமக்களின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து விடுங்கள்; அவர்கள் எதிர்கால வாழ்விற்கு அது பயன்படும் என்றார்.

மகாத்மா காந்தி பட்டாடை அணியாமல் கதராடை அணிந்து எளிய முறையில் திருமணங்களை நடத்திக் கொள்ள வேண்டும் என்றார். தன் குடும்பத்தில் நிகழ்ந்த திருமணங்களை மிக எளிமையாகவே காந்தி நடத்தினார்.

ஆர்ய சமாஜிகள் திருமணங்கள் எளிமையாக நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். அதன் நிறுவனர் சுவாமி தயானந்த சரஸ்வதி விதவை மறுமணத்தை ஆதரித்தவர்.

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். தங்கள் அரசியல் நலன்களுக்காக அவர்கள் பண்பாட்டின் மீது பெரும் தாக்குதல் தொடுத்தார்கள். ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் சடங்குகளை மற்ற ஜாதிகள் மீது திணிக்கிறார்கள் என்ற பரப்புரையை மேற்கொண்டார்கள். மக்கள் சிந்தனையில் நாராயண குருவோ அல்லது மகாத்மா காந்தியோ ஏற்படுத்திய மாற்றத்தை அவர்கள் தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்களா என்பதை யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும்.

(தொடரும்)