Saturday 18 April 2020

மாலை உரையாடல்கள் - 5

நண்பர் அமைதியற்று இருந்தார். ஒவ்வொரு எளிய விஷயத்துக்கும் பின்னால் இருக்கும் பிரும்மாண்டமான பின்னணியும் நோக்கங்களும் அவரை அமைதி இழக்கச் செய்திருந்தன.

மனதில் இருந்த கேள்வியைக் கேட்டார்.

‘’தமிழ்நாட்டில் கோயில்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனவா?’’

’’உங்கள் அனுபவத்தில் நீங்கள் உங்கள் சிறு வயதிலிருந்து குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது கோயிலுக்குச் சென்றிருப்பீர்கள். எந்த கோவிலிலாவது அரசியல் விஷயங்கள் பேசப்பட்டதுண்டா?’’

‘’இல்லை; அவ்வாறு எதுவும் பேசப்பட்டதில்லை’’

‘’இந்த கேள்வி ஏன் உங்கள் மனதில் உருவானது?’’

‘’இங்கே மத ஆதிக்க சக்திகள் தலைதூக்கப் பார்க்கின்றன என்று பொது மேடைகளில் முழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதனால் தான் கேட்டேன்’’

என்னுடைய விளக்கத்தை ஆரம்பித்தேன்.

தமிழ்நாடு பெரும்பாலும் விவசாயத்தை நம்பியிருக்கும் மாநிலம். இன்றும் அதுதான் நிலவரம். பிரிட்டிஷ் ஆட்சியில் வசூலிக்கப்பட்ட நிலவரி மாநிலத்தின் விவசாயத்தை பெரும் நெருக்கடியில் தள்ளியது. அவர்கள் ஊருக்குள் தானியமாகப் பங்கிட்டுக் கொள்ளும் பழக்கத்துக்கு உட்பட்டிருந்தவர்கள். திடீரென நிலவரியை பணமாகச் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்ட போது அது பல எதிர்பாராத விளைவுகளை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சங்கள் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் பேரச்சத்தில் ஆழ்த்தியது. அந்த அச்சம் இன்று வரை தமிழ் மக்களின் ஆழ்மனத்தில் உள்ளது. 

திரு. பக்தவத்சலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது உணவுப்பொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. மீண்டும் ஒரு உணவுப்பஞ்சம் வந்து விடுமோ என தமிழ் மக்கள் பதட்டமடைந்தனர். அதைப் பயன்படுத்திக் கொண்ட தி.மு.க ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவோம் என்றார்கள். அவ்வாறு தரவில்லை என்றால் முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள் என்றார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ரூபாய்க்கு மூன்று படி அரிசி தரவில்லை என்பதே வரலாறு. 

மின் மோட்டார் பயன்பாடு 1990ம் ஆண்டுக்குப் பிறகே தமிழகமெங்கும் மிகப் பரவலாக அதிகரித்தது. ஆற்றுப்பாசனத்தை நம்பியிருந்த பகுதிகளில் மட்டுமே நெல் விவசாயம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நெல் மற்ற மாவட்டத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவது ஒரு கடத்தல் நடவடிக்கையாக எண்ணப்பட்டது. தமிழகத்தில் மானாவாரி நிலங்களில் கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவையே அதிகம் பயிரிடப்பட்டன.

1970களில் எழுதப்பட்ட இரண்டு தமிழ்ப் புத்தகங்களை நான் பரிந்துரைக்கிறேன். 1. தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரி வரை 2. சிட்டி எழுதிய சேக்கிழார் அடிச்சுவட்டில்

இந்த இரண்டு நூல்களையும் வாசித்துப் பார்ப்பவர்களால் ஆலயங்கள் எவ்வாறு கைவிடப்பட்டு இருந்தன என்பதன் சித்திரத்தைக் காட்டக் கூடியது. சிட்டி நாயன்மார்களின் ஒவ்வொரு ஊருக்கும் செல்கிறார். அந்த ஊர்க்காரர்களுக்கோ அதற்கு பக்கத்து ஊரில் இருப்பவர்களுக்கோ கூட அவர் தேடும் ஆலயம் எது என்பதை அறியாமல் இருக்கிறார்கள் என்று கூறுகிறார். சிவசேவையில் தலைமுறைகளாக ஈடுபட்டிருப்பதால் எந்த வருமானமும் இல்லாமல் வறுமையில் இருந்தாலும் பணியைத் தொடர்கிறோம் என பல ஆலயங்களில் அர்ச்சகர்கள் கூறுவதை சிட்டி பதிவு செய்கிறார்.

அதாவது இருபதாம் நூற்றாண்டின் வரலாறு என்பது தமிழ்நாடு பஞ்சத்துக்கு அஞ்சிய வரலாறு. அப்போது ஆலயங்கள் பெரும்பாலும் கைவிடப்பட்டிருந்தன.  சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் கிராமங்களில் நடக்கும் இராமாயண , மஹாபாரத பிரசங்கங்களே சமயச் செயல்பாடாக இருந்துள்ளன. அவற்றை சமயச் செயல்பாடு என்றும் முழுமையாகக் கூற முடியாது. அவை பண்பாட்டுச் செயல்பாடுகள். அதிலும் மஹாபாரதக் கூத்து வட தமிழ்நாட்டில் மட்டுமே இருந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் இராமாயணக் கதை நடக்கும். 

பொருளியல் ரீதியாக கைவிடப்பட்டிருந்த ஆலயங்களில் வருடத்துக்கு ஒரு வாரமோ பத்து நாளோ நடக்கும் இராமாயண உபன்யாசம் மட்டுமே கிராம மக்களுக்கு அவர்களின் பண்பாட்டின் வரலாற்றை எடுத்துரைப்பதற்கான வழியாக இருந்துள்ளது. இராமாயணமும் மஹாபாரதமும் இந்தியர்கள் வாழ்வுடன் நேரடியானத் தொடர்புடையது. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் இராமன் கதையையும் கிருஷ்ணன் கதையையும் கேட்டே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்தனர். அதன் கடைசிக் கண்ணி திருவிழா பிரசங்கங்கள் மூலம் தமிழ்நாட்டில் தொடர்ந்தது. 

திராவிட இயக்கம் அந்த மரபின் மேல் தனது அரசியலுக்காக தாக்குதலைத் தொடுத்தது. இராமாயணமும் மஹாபாரதமும் ஆரியர்களின் படைப்புகள் என்றும் அவை தமிழ் மக்கள் மீது செயற்கையாகத் திணிக்கப்பட்டது என்று மேடைக்கு மேடை கூறினர். திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம். அவர்களுக்கு சமூக மாற்றம் இலக்கு அல்ல; அரசியல் அதிகாரமே அவர்களின் தேவை. இராமயணம் மீதும் மஹாபாரதம் மீதும் இன்று வரை திராவிட இயக்கம் பரப்பி வரும் அவதூறுக்காக அவர்கள் வரலாற்றால் மன்னிக்கப்படப் போவதில்லை.

ஹிந்து மதமே ஜாதியை திணிக்கிறது என்றனர். சமத்துவத்துக்கு எதிரானது ஹிந்து மதம் என்றனர். பொய் பரப்புரை மூலம் ஒரு மொழியின் பண்பாட்டு சாரத்தின் மீது பெரும் தாக்குதல் தொடுத்தது திராவிட இயக்கம்.

இன்றும் ஆலயங்களுக்கு பொருளியல் வருமானம் இல்லை. இராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்லும் பண்பாட்டுச் செயல்பாடு தேக்கம் கண்டுள்ளது. கம்ப இராமாயணமும் தேவாரமும் நாலாயிர திவ்யப் பிரபந்தமும் தமிழ் மொழியின் பண்பாட்டுச் செல்வங்கள். அவை எல்லா வழியிலும் காக்கப்பட வேண்டும்.

(தொடரும்)