Sunday 19 April 2020

மாலை உரையாடல்கள் - 6

வழக்கமாக வரும் நேரத்தை விட சற்று தாமதமாக நண்பர் வந்தார். மாலை விடைபெற்றுச் செல்லும் பொழுது. திண்ணையில் அமர்ந்து கொண்டார் நண்பர்.

‘’தம்பி! உங்ககிட்ட பேசும் போது நீங்க அடிக்கடி சிவிக் ஸென்ஸ் அப்படின்னு ஒரு வார்த்தையை சொல்றீங்களே அது என்ன? தமிழ்ல அப்பப்ப குடிமைப்பண்புன்னு சொல்லுவீங்க.’’

உலகில் மிகப் பெரும்பாலானவர்கள் குழந்தைகளாக இருக்கும் போது குடும்பத்தால் வளர்க்கப்படுகிறார்கள். பெற்றோர் நமது குருதி உறவுகள். சமூகத்தில் வீடு என்பது நுண்ணிய அலகு. வீட்டுக்குள் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர் மிகப் பரிவுடன் சொல்லித் தருகின்றனர். எந்த மனிதனுக்குமே அவன் குழந்தையாய் இருக்கும் போது பயிலும் விஷயங்களும் உருவாக்கிக் கொள்ளும் மனநிலைகளும் அவனது அந்திமக் காலம் வரை தொடர்கின்றன. வீட்டில் எப்போதுமே நமக்கு சலுகைகள் உண்டு. வீடு கொடுக்கும் சலுகைகளை சமூகம் கொடுக்காது. சமூகத்தில் நாம் செயல்படும் போது அதற்கென சில விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே குடிமைப் பண்பு எனப்படுகிறது.

நண்பர் யோசித்தார். நெடுநேரத்துக்குப் பின் ஒரு ஐயத்தைக் கேட்டார்.

‘’இதெல்லாம் எங்கியாவது கத்துக்கணுக்குமா என்ன? சொசைட்டில மூவ் பண்ணும் போது அவங்க அவங்களே தெரிஞ்சுக்க மாட்டாங்களா?’’

குடிமைப்பண்புகள் வீட்டில் பெற்றோரால் பயிற்றுவிக்கப்பட வேண்டும். பின்னர் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு குடிமைப்பண்புகள் குறித்து எடுத்துச் சொல்லியவாறு இருக்க வேண்டும். குடிமைப்பண்பு போதிக்கப்படாமல் போகும் எனில் அதனை சமூகத்தில் உருவாக்க மிகக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டிய தேவை உருவாகும். அதற்கு நீண்ட காலம் தேவைப்படும்.

‘’நம்ம நாட்டுல குடிமைப்பண்பை போதிச்சிருக்காங்களா?’’

இன்றைய காலகட்டத்தில் நாம் தேசம் குறித்து பேசும் போது சாலைகளால் எல்லா கிராமங்களும் இணைக்கப்பட்ட மின்சாரமும் இரு சக்கர வாகனங்களும் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் உலகின் எங்கு உற்பத்தி ஆகும் பொருளும் சிறு கிராமத்தையும் வந்தடையும் வணிக வலைப்பின்னல் நிரம்பிய சூழலைக் கணக்கில் எடுக்கிறோம். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் நாட்டில் ஒரு நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பே இருந்திருக்கிறது. விவசாயமே பிரதான தொழில். அவர்களுடைய உடலும் மனமும் விவசாய வேலைகளுக்கே பழகியிருக்கும். அவர்களுடைய சமூகம் என்பது கிராமத்தின் எல்லைக்குள்ளேயே முடிந்து விடும். பெரிய அளவில் வெளித்தொடர்புகள் இருக்காது. வணிகம் நுழைந்த பின், கிராமத்தில் இருப்பவர்கள் வணிகம் மூலம் பொருளீட்ட முயலும் போதே எல்லா விதமான சமூக ஸ்தாபனங்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. ரயில் நிலையம், பேருந்து நிலையம், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் மக்கள் குழுமத் தொடங்குகின்றனர். ஜனநாயக ஆட்சி உருவாகும் போது அதில் பங்களிப்பதற்கான வாய்ப்பு சாமானிய மக்களுக்கும் கிடைக்கிறது. ஒரு கிராமத்துக்குள்ளேயே வாழ்க்கை நடத்திக் கொள்வதற்கு குறிப்பிட்ட சில விதிகளும் குறிப்பிட்ட சில மனநிலைகளும் போதுமானது. பெரிய சமூகமாக இயங்கும் போது இன்னும் விரிவான பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கான பயிற்சியை அளிக்கத் துவங்கியவர் மகாத்மா காந்தி.

டொமினிக் லாப்பியர், ’’நள்ளிரவில் சுதந்திரம்’’னு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் அவர் ஒரு காட்சியைப் பதிவு செய்கிறார். காந்தி ஒரு கிராமத்துக்குச் செல்லும் போது அவருக்கு முன்னால் இண்டியன் வாட்டர் கிளாசெட்டும் ஒரு துடைப்பமும் ஏந்திச் செல்லப்படுகிறது. அது காந்தியின் பதாகை போல என்கிறார் டொமினிக் லாப்பியர். பொது இடங்களில் தூய்மையைப் பேண வேண்டும் என்பதை ஒட்டு மொத்த இந்தியச் சமூகத்துக்கும் தன் வாழ்நாள் முழுவதும் ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தவர் மகாத்மா காந்தி.

ஒரு நாகரிக சமூகம் தன்னைப் போலவே பிறரை எண்ணும் பிரஜைகளால் மட்டுமே சாத்தியம். குடிமைப்பண்பு எல்லா விதமாக குறுகிய மனோபாவங்களுக்கும் குறுகிய எல்லைகளுக்கும் எதிரானது; மாற்றானது. நமது சமூகத்தில் குடும்பத்தைத் தாண்டி ஜாதி மட்டுமே அடுத்த சமூக நிறுவனமாக அறிமுகமாகிறது. ஜாதி அடையாளமும் ஜாதி அரசியலும் தனி மனித அகத்தில் நுழைகின்றன. இந்திய ஜனநாயகம் பலவித சமூகக்களின் மனிதர்களின் பங்களிப்பால் உருவானது. உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையை நிர்வகிக்கும் அமைப்பு இந்திய ஜனநாயகம்.

சமூக விதிகளைப் பின்பற்றுவதில் இந்தியர்கள் எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. சாலை விதிகளை மதிப்பதில்லை. ரயில் நிலையத்திலோ வங்கியிலோ வரிசையைப் பின்பற்றுவதில்லை. எந்த வித குற்ற உணர்வும் இன்றி ‘’கியூ’’வில் முன்னால் இருப்பவர்களைத் தாண்டி டிக்கெட் கவுண்டருக்குள் கை நீட்டி பயணச்சீட்டு கேட்கிறோம். பொது இடத்தில் சத்தமாகப் பேசுகிறோம். எந்த வித கூச்சமும் இன்றி நம் சுயநலத்தை முன்வைக்கிறோம். விதிகளை கடுமையாக்கினால் அது ஜனநாயக விரோத சர்வாதிகாரச் செயல் என்கிறோம்.

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. இது நடந்து 15 ஆண்டுகள் இருக்கக்கூடும். பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களுக்கு வாடகைப் படி தரப்படுகிறது. வங்கி ஊழியர் சொந்த வீட்டில் வசிக்கவில்லையெனில் அவர்கள் மாதந்தோறும் செலுத்தும் வாடகையை வங்கி ஊழியருக்குக் கொடுத்து விடும். அவர் சொந்த வீடு கட்டினாலோ அல்லது வாங்கினாலோ வாடகைப்படி பெறும் உரிமையை இழந்து விடுவார். ஸ்டேட் வங்கி ஊழியர்கள் அரசிடம் சொந்த வீட்டில் இருக்கும் ஊழியருக்கும் வாடகைப்படி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கை பொருத்தமற்றது என அரசு நிராகரித்தது. அதனை நிறைவேற்றக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரசை எச்சரித்தனர். அந்த கோரிக்கையுடன் வழக்கமான வேறு சில கோரிக்கைகளும் இருந்தன. அரசு வாடகைப்படி தொடர்பாக ஊழியர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிட்டது. பொதுமக்கள் வங்கி ஊழியர்களின் நியாயமற்ற கோரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். வங்கி ஊழியர்களிடம் அந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். ஓரிரு நாளில், திட்டமிடப்பட்டிருந்த அந்த வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.

குடிமைப்பண்புகள் மிக்க சமூகம் இன்னும் மேலானதாக இருக்கும். மேலான நிலையை நோக்கி எப்போதும் முன்னேறிச் சென்றவாறே இருக்கும்.

(தொடரும்)