Tuesday 21 April 2020

மாலை உரையாடல்கள் - 8

’’தம்பி! உத்யோகம் வீடுன்னு நேரம் சரியா இருக்கு தம்பி. தமிழ்ல ஏதாவது படிக்கணும்னு ஆசைப்படறேன். நீங்க நிறைய புத்தகம் பேரை சொல்றீங்க. கேட்கும் போது ஆசையா இருக்கு. ஒரு ஆரம்ப வாசகன் படிக்கற மாதிரி பத்து புத்தகத்தை அறிமுகம் செய்யுங்க தம்பி. புத்தகங்களை வாங்கி அவசியம் வாசிக்கிறேன்.’’ நண்பர் மாலை உரையாடலுக்கு ஒரு கோரிக்கையுடன் வந்தார். 

சில புத்தகங்களைப் பரிந்துரைத்தேன்.

1. பனி மனிதன்

இது குழந்தைகளுக்கான நாவல். வயதில் பெரியவர்களுக்கும் வாசிக்க சுவாரசியமானது. இமயமலையைப் பின்னணியாகக் கொண்டு அறிவியல், வரலாறு, பண்பாடு மற்றும் ஆன்மீகத்தினை விரிவாக விவாதிக்கும் நாவல். இந்தியா குறித்து பரவலாக அறியப்படாத பல்வேறு செய்திகளை பெட்டிச்செய்தி வடிவில் கொடுத்திருப்பது வாசிப்பை இன்னும் சுவாரசியமாக்குகிறது. இந்நூலின் ஆசிரியர் ஜெயமோகன்.

2. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் 

இந்தியாவின் ஞான மரபைப் புரிந்து கொள்ள சாங்கியம், வைசேஷிகம், நியாயம், தர்க்கம், மீமாம்சம் மற்றும் வேதாந்தம் ஆகிய ஆறு தரிசனங்களைப் புரிந்து கொள்வது இன்றியமையாதது. இந்திய மண்ணின் எந்த சிந்தனையும் இந்த ஆறு தரிசனங்களில் வேர் கொண்டிருக்கும். இந்து ஞான மரபைப் புரிந்து கொள்ள இந்த நூல் மிகவும் உதவிகரமானது. இந்நூலின் ஆசிரியர் ஜெயமோகன்.

3. சங்கச் சித்திரங்கள்

கவிதையை வாசிக்க அதனை வாழ்க்கை அனுபவங்களிலிருந்து திறக்க வேண்டும். நாளும் ஒவ்வொரு கணமென நம்மைச் சூழ்ந்து நிரம்பித் ததும்பும் அனுபவக் கணங்களிலிருந்து கவிதையைத் திறப்பதன் மாயத்தை சுட்டிக் காட்டும் நூல். இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேற்பட்டு தமிழில் எழுதப்படும் கவிதையின் அடிப்படையான நுண்ணுணர்வைப் பின் தொடரும் நூல்.

4. துணையெழுத்து

எழுத்தாளனின் அனுபவங்கள் அலாதியானவை. வாசிப்பும் பயணமும் அவனை நிலமெங்கும் அலைய உந்திக் கொண்டேயிருக்கின்றன. கையில் ஒரு பையில் ஒரே ஒரு மாற்றுத்துணி மற்றும் சில புத்தகங்களுடன் இந்தியாவெங்கும் பயணித்த ஒரு எழுத்தாளனின் அகக் குறிப்புகள் இந்நூல். ஆசிரியர் எஸ். ராமகிருஷ்ணன்

5. கம்பன் - கவியும் கருத்தும்

தமிழ் இலக்கியத்தின் ஆகப் பெரிய செல்வம் கம்பராமாயணம். தமிழ்க் கவிதையின் உச்சபட்சமான சாதனை. கம்பனில் ஆழமாய்த் தோய்ந்து கம்பனை ரசித்த திரு. பி. ஜி. கருத்திருமன் அவர்கள் கம்பராமாயணத்திலிருந்து தேர்ந்தெடுத்த இனிமையான 900 பாடல்களை தமிழ் வாசகனுக்கு அறிமுகப்படுத்தும் நூல்.

6. சொன்னால் நம்ப மாட்டீர்கள்

தமிழின் மிக சுவாரசியமான சுயசரிதை நூல்களில் ஒன்று. தமிழ்நாட்டில் தேசியம் தழைக்க வேண்டும் என்று ஓயாமல் செயலாற்றிய ஒரு செயல் வீரனின் கதை. சுதந்திரத்துக்குப் பின்னான தமிழ்நாட்டின் வரலாற்றின் முக்கியமான அரசியல் தலைவர்களுடனான அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். ஆசிரியரின் சொற்கள் வழியே உருவாகி வரும் ராஜாஜியின் சித்திரம் அற்புதமானது.  இந்நூலின் ஆசிரியர் சின்ன அண்ணாமலை.

7. காந்தி வாழ்க்கை

லூயி ஃபிஷர் எழுதிய காந்தியின் சரிதம். மகாத்மாவை மிகச் சரியாக இந்திய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நூல். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

8. சிலிர்ப்பு

தமிழ்ச் சிறுகதையில் ஆகச் சிறந்த படைப்புகளைக் கொடுத்த கலைஞன் தி.ஜானகிராமன். எளிய மனிதர்களின் வாழ்வின் நுட்பமான மிக அரிதான தருணங்களைக் கலையாக்கியவர் அவர். அவரின் குறிப்பிட்ட சில சிறுகதைகள் ‘’சிலிர்ப்பு’’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழ்ச் சிறுகதைகளை வாசிக்க ஆரம்பிக்க இந்நூல் முழுமையாக உதவும்.

9. பாரதி நினைவுகள்

பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த போது சிறு குழந்தையாயிருந்த சிறுமி யதுகிரி பின்னாளில் தன் நினைவுகளிலிருந்து எழுதிய குறிப்புகளே பாரதி நினைவுகள் என்னும் இந்நூல். ஒரு குழந்தைக்கும் குழந்தை மனம் கொண்ட ஒரு கவிஞனுக்கும் இடையேயான உரையாடல்கள் ஒரு மகா கலைஞனை நமக்கு அறிமுகப்படுத்தும். ஆசிரியர் யதுகிரி அம்மாள்.

10. ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்

புதிய இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் வாழ்வை பணியை செய்தியை படைப்பூக்கம் கொண்ட மொழியில் வெளிப்படுத்தும் நூல். தன் வாழ்நாள் முழுதும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் தொண்டாற்றிய சுவாமி சித்பவானந்தரால் எழுதப்பட்டது.

(தொடரும்)