Wednesday 22 April 2020

மாலை உரையாடல்கள் - 9

’’தம்பி! தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் எந்த விஷயங்களை மாணவர்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும்னு நினைக்கிறீங்க?’’

மாலை உரையாடலுக்கு இந்த கேள்வியுடன் வந்து சேர்ந்தார் நண்பர்.

1. ஐந்து வயதில் பள்ளியில் வந்து சேர்கிறான் ஒரு மாணவன். பன்னிரண்டு ஆண்டுகள் படிக்கிறான். இந்த 12 ஆண்டுகளில் தமிழ் மொழியை சரளமாக எழுத மொழிப்பாடத்தில் பயிற்சி அளிப்பது இன்றைய அவசியத் தேவை. 

ஒருமுறை எனது நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரது மனைவி அரசுப் பள்ளி ஆசிரியை. மாணவர்களின் அரையாண்டு விடைத்தாள்களை வீட்டில் வைத்து திருத்திக் கொண்டிருந்தார். நான் ஒரு விடைத்தாளை எடுத்துப் பார்த்தேன். நூற்றுக்கு 83 மதிப்பெண் பெற்றிருந்தான் அந்த விடைத்தாளை எழுதிய மாணவன். முழுவதும் படித்துப் பார்த்தேன். 

வள்ளலார் - சிறு குறிப்பு வரைக. என்று கேள்வி. பதிலில் பெயர்: , இயற்பெயர்: , தந்தையார் பெயர்: பிறந்த ஊர்:, எழுதிய நூல்: என்பதாக ஒற்றை வார்த்தை பதிலாக எழுதியிருந்தான். இது மொழிப்பாடம் தானே? ஏன் இவ்வாறு வார்த்தை வார்த்தையாக விடை தருகிறார்கள். முழு வாக்கியம் எழுதத் தெரியாதா என்று கேட்டேன். அந்த ஆசிரியை சங்கடத்துடன் பத்தில் ஒன்பது மாணவர்களுக்கு பிழையின்றி வாக்கியம் எழுத வராது. அதனால் இப்படி எழுதச் சொல்லி விடுவோம் என்றார். பொதுத்தேர்விலும் இப்படித்தானா என்று கேட்டேன். அதிலும் அப்படித்தான். தேர்ச்சி சதவீதம் அதிகமாக இருந்தால்தான் அரசு மக்களுக்கு கல்வி அளிப்பதில் முனைப்பாக இருக்கிறது என்ற தோற்றம் உருவாகும் என்பதால் வாக்கியமாக இல்லாமல் ஒற்றை வார்த்தை பதில் எழுதியிருந்தாலே முழு மதிப்பெண் அளிக்கச் சொல்லி விடுவார்கள் என்றார்.

இப்படி மாணவர்களைப் பயிற்றுவிப்பது ஓர் ஆசிரியராக உங்களுக்கு வருத்தம் தரவில்லையா என்று கேட்டேன். வருத்தமாகத்தான் இருக்கிறது; எங்களால் என்ன செய்ய முடியும் என்றார்.

2. இந்தியாவில் வங்கிக் கணக்கு என்பது ஒவ்வொருவருக்கும் தேவை. மத்திய அரசாங்கமோ அல்லது மாநில அரசாங்கமோ குடிமக்களுக்கு ஏதேனும் மானியமோ அல்லது நிவாரணமோ அளிக்க நினைத்தால் நேரடியாக மக்கள் கணக்கில் வரவு வைத்தால் பலவிதமான இடைநிலை ஊழல்களைத் தவிர்க்க முடியும். வங்கிக் கணக்கின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தில் எடுத்துரைக்கலாம்.

3. ஆயுள் காப்பீடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவை. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் அவசியம் தேவை. ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த எளிய அறிமுகத்தை சமூக அறிவியல் பாடத்தில் சேர்க்கலாம்.

4. அரசு தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது. அவை குறித்த விழிப்புணர்வு மக்களிடம் மிகவும் குறைவு. அந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைப்பது சமூகத்தின் எல்லா படிநிலையிலும் இருக்கும் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

5. பொருளியல் குறித்த அறிமுகம் 6 - 12 வகுப்பு மாணவர்களுக்கு அளிப்பது அவர்களுக்கு பயன் அளிக்கும்.

6. சிற்பவியலின் அடிப்படைகளையும் சிற்பங்களை அடையாளம் காணும் பயிற்சியையும் ஓர் அறிமுகமாக அளிக்கலாம்.

சமூகத்தின் யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதாகவே இவை அமையும். தமிழ்நாட்டில் இதை எதிர்பார்ப்பதே அதிகம் என்பதாக இருக்கிறது.

(தொடரும்)