Friday 8 May 2020

கம்பன் - சுந்தர காண்டம் - 1


அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால், ‘ அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்! (4847)

கம்பனிடம் இருக்கும் அத்வைத தாக்கம் இப்பாடலில் வெளிப்படுகிறது. சங்கரரின் கயிற்றரவு படிமம் இப்பாடலில் பயன்படுத்தப் படுகிறது. மாயையை விலக்குபவனும் மறைகளின் இறுதியாக விளங்குபவனும் ஸ்ரீராமன். அவன் கையில் வில்லேந்தி இலங்கையுடன் போர் புரிந்தவன்.

‘கண்டனென் இலங்கைமூதூர்! கடிபொழில், கனக நாஞ்சில்,
மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியில் செய்த
வெண் தளக் களப மாட வீதியும், பிறவும்! ‘என்னா,
அண்டமும் திசைகள் எட்டும் அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான். (4849)

கடிபொழில் – காட்டரண்
மண்டல மதில் – வட்ட வடிவமான மதில். ‘’மண்டலம்’’ என்பது ஒரு சுற்றைக் குறிக்கும். கருநிலவு நாள் தொடங்கி அடுத்த கருநிலவு நாள் வரை முப்பது நாட்கள் என்பது ஒரு சுழற்சி. கருநிலவு தொடங்கி முழுநிலவு நாள் வரை பதினைந்து நாட்களும் ஒரு சுழற்சி. துவங்கிய இடத்தில் வந்து நிறைவதோ அல்லது அதன் உச்ச புள்ளியில் சென்று நிறைவதோ சுழற்சி. மண்டல மதில் என்பது பல்வேறு விதமான சுற்றுக்களைக் கொண்ட மதில்.
கொற்ற வாயில் – பிரதான நுழைவு வாயில்
களப மாட வீதி – யானைகள் செல்லும் வீதி
அனுமன் இலங்கையின் காட்சிகளாக இவற்றைக் காணுகிறான்.

4869. துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அறச், சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன் துஞ்சத், திவலையது ஊழிக் காலின்,
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி, வாரி
தள்ளிய திரைகள் முந்து உற்று, இலங்கை மேல் தவழ்ந்த மாதோ! (4869)

அனுமன் இலங்கையை நோக்கி வானில் பறந்த வேகத்தின் விசையால் கடலின் அலைகள் பொங்கி இலங்கைக் கரையை அனுமன் செல்வதற்கு முன்பே அடைந்து அதனை விரைந்து தாக்கின.

விண்ணவர் ஏத்த, வேத முனிவரர் வியந்து வாழ்த்த,
மண்ணவர் இறைஞ்சச், செல்லும் மாருதி, மறம் உள் கூர,
‘அண்ணல் வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னும்! ‘என்னாக்
கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலையங் கிரியை ஒத்தான்! (4872)

வானவர்களின் முனிவர்களின் வாழ்த்தைப் பெற்ற – மானுடரால் வணங்கப்படும் அனுமன் இராவணனை அமுக்கிய திருக்கயிலாயம் போல் விளங்கினான்.
திருக்கயிலாயம் வானவர்களும் முனிவர்களும் வாழ்த்துவது. மானுடரால் வணங்கப்படுவது. அனுமனும் அவ்வாறே. இராவணன் ஆணவத்தை அனுமனும் தோற்கடிப்பான் என்பதை குறிப்பாகக் கம்பன் உணர்த்துகிறான்.

‘நல் தாயினும் நல்லன் எனக்கு இவன்! என்று நாடி
இற்றே, இறை! எய்தினன்; ஏயது கோடி என்னால்;
பொன்தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த போதே
உற்றார்செயல் மற்றும் உண்டோ? ‘என உற்று உரைத்தான். (4904)

மைந்நாக மலை அனுமனிடம் உன் மேல் உன் தாயினும் அன்பு பூண்டவன் நான். என் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்க என்று கூறினான்.

பொன்கொண்டு இழைத்த? மணியைக்கொடு பொதிந்த?
மின்கொண்டு அமைத்த? வெயிலைக்கொடு சமைத்த?
என்கொண்டு இயற்றிய? எனத் தரெிவு இலாத
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்! (4942)

இலங்கையின் மாடங்கள் பொன் கொண்டு இழைக்கப்பட்டுள்ளனவா? மணிகளால் பதிக்கப்பட்டுள்ளனவா? மின்னும் மின்னல்களால் அமைக்கப்பட்டுள்ளனவா? கதிரொளி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனவா? அவை எதனால் ஆனவை?

தேறல் மாந்தினர், தேன் இசை மாந்தினர், செவ்வாய்
ஊறல் மாந்தினர், இன் உரை  மாந்தினர், ஊடல்
கூறல் மாந்தினர், அனையவர்த் தொழுது, அவர் கோபத்து
ஆறல் மாந்தினர், அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர்! (4972)

இலங்கை அசுரர்கள் இனிய கள் அருந்தினர். இன்னிசை கேட்டிருந்தனர். அசுரப் பெண்களின் சிவந்த இதழ்களை அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் ஊடும் சொற்களைக் கூறிக் கொண்டிருந்தனர். அப்பெண்களின் ஊடலால் அடைந்த சினத்தை பருகிக் கொண்டிருந்தனர்.

ஏய்வினை இறுதியில் செல்வம் எய்தினான்
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான்
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான்
தீவினை என இருள் செறிந்தது எங்குமே! (4984)

தவத்தால் அருள் அடையாமல் பொருள் மட்டும் அடைந்தவனும் ஆராயும் திறன் அற்ற மனம் கொண்டவனும் அறிஞர்களின் அறிவுரையை கருதாதவனும் தனக்கு வரக்கூடிய மரணம் குறித்த பிரக்ஞை இல்லாதவனும் உள்ளத்தில் உண்மை இல்லாதவனும் சென்றடையும் இருள் போல இலங்கையில் இருள் நிறைந்தது.

துயில் அறக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்,
வெயில் இடைத் தந்த விளக்கு என,  ஒளி இலா மெய்யாள்,
மயில் இயல் குயில் மழலையாள்,  மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலிக் குழாத்து  அகப்பட்டது அன்னாள். (5179)

உறக்கமும் முழு விழிப்பும் இன்றி சோர்வுடன், பகலில் ஏற்றப்பட்ட விளக்கு போல முழு பிரகாசம் இன்றி இள மான் ஒன்று புலிகளின் கூட்டத்தில் சிக்கினால் மிரளுவது போல மிரண்டு காணப்பட்டாள் சீதை.



விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல் இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள். (5180)

உளத் துயர் உடலில் உண்டாக்கும் விளைவுகளால் சோர்வுற்றிருந்தாள் சீதை.

துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு,
ஒப்பினான் தனை நினைதொறும்,  நெடும் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து, அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை.
வெப்பினால் புலர்ந்து, ஒருநிலை உறாத மென் துகிலாள். (5183)

இராமனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் சிந்தினாள் சீதை.

மெய்த் திருப்பதம் மேவுஎன்ற போதினும்
இத்திரு துறந்து ஏகுஎன்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள். (5195)

தாமரை இரவில் குவியக்கூடியது. சித்திரத்தில் வரையப்பட்ட தாமரை எப்போதும் மலர்ந்திருப்பது. இராமன் முகம் சித்திரத்தில் வரையப்பட்ட தாமரை போன்று எப்போதும் மலர்ந்திருப்பது. அரச பதவியை ஏற்க வேண்டும் என்ற போதும் அதனைத் துறந்து காட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற போதும் அவன் முகம் சிறிதும் மாற்றமின்றி சித்திரத் தாமரையை ஒத்து இருந்தது. அப்படிப்பட்ட இராமனை நினைத்துக் கொண்டேயிருந்தாள் சீதை.

ஆயிடைத் திரிசடை என்னும் அன்பினால்
தாயினும் இனியவள் தன்னை நோக்கினாள்
தூயநீ! கேட்டி! என் துணைவி ஆம்! ‘எனா
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள். (5206)

கம்பன் திரிசடையை ‘’அன்பினால் தாயினும் இனியவள்’’ என்கிறான். குகனை இலக்குவன் ‘’தாயினும் நல்லன்’’ எனக் கூறுவது இங்கே நினைவு கொள்ளத் தக்கது.

(தொடரும்)