Saturday 9 May 2020

கம்பன் - சுந்தர காண்டம் - 2


முனியொடு மிதிலையின் முதல்வன் முந்துநாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டு என
நனி துடிக்கின்றன; ஆயின் நல்குவாய்! (5208)

சீதை தன் புருவமும் தோளும் கண்களும் இராமனைக் கண்ட தினத்தில் துடித்தது போன்று இப்போது துடிக்கின்றன என்று திரிசடையிடம் கூறினாள்.

விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் எனக்
கருநிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குருநிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரும் நிறம் அத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை! (5238)

கருமேகங்களுக்கு இடையே தோன்றும் வெண்மின்னல் போல
அரக்கியர்களுக்கு இடையே இருந்த சீதையை அனுமன் கண்டான்.

வீடினது அன்று அறன்! யானும் வீகலேன்!
தேடினன் கண்டனன் தேவியே! ‘எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான். (5242)

தன் முயற்சி வெற்றி அடைந்ததை உணர்ந்த அனுமன் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான்.

வாழி சானகி! வாழி இராகவன்!
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்!
வாழி நல்லறம்! என்று உற வாழ்த்தினான்
ஊழி தோறும் உயர்வுறும் கீர்த்தியான். (5275)

ஜெய கோஷம் எழுப்பினான் அனுமன்.

அன்னவன் தன்னை உம்கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கிப்,
பின்னவற்கு அரசு நல்கித் துணை எனப் பிடித்தான்; எங்கள்
மன்னவன் தனக்கு நாயேன்  மந்திரத்து உள்ளேன், வானின்
நல்நெடும் காலின் மைந்தன், நாமமும் அநுமன் என்பேன். (5366)

இராவணனை வென்ற வாலியை ஒரு அம்பினால் மாய்த்த இராமன் சுக்ரீவனுக்கு அரசாட்சியை வழங்கினான். அந்த சுக்ரீவனின் மந்திரி நான். வாயுவின் மைந்தன். என் பெயர் அனுமன்.

நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறைசெல்வம்
பூண்டு அதனை நீங்கி நெறி போதல் உறு நாளின்
ஆண்டு அந் நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்
யாண்டையது கான்? ‘என இசைத்ததும் இசைப்பாய். (5396)

செல்வங்களைத் துறந்து அயோத்தி மாநகரை நீங்கிய போது நகர நுழைவாயிலைக் கடப்பதற்கு முன்னரே காடு எப்போது வரும் என கேட்டதை சீதையிடம் நினைவுபடுத்துவாயாக.

மீட்டும் உரை வேண்டுவன இல்லைஎன மெய் பேர்
தீட்டியது தீட்டு அரிய செய்கையது செவ்வே :
நீட்டு இது! ‘என நேர்ந்தனன் எனா நெடிய கையால்
காட்டினன் ஒர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். (5398)

நுண்ணிய அழகிய வேலைப்பாடுகள் கொண்டதும் இராமனின் கணையாழியை சீதையிடம் அனுமன் காட்டினான். சீதை அதனைக் கண்களால் கண்டாள்.

வாங்கினள் : முலைக்குவையில் வைத்தனள் : சிரத்தால்
தாங்கினள் : மலர்க்கண் மிசை ஒத்தினள் : தடம்தோள்
வீங்கினள், மெலிந்தனள் : குளிர்ந்தனள், வெதுப்போடு
ஏங்கினள் : உயிர்த்தனள் : இது இன்னது எனல் ஆமே? (5401)

கணையாழியை வாங்கி தன் மார்பில் சீதை வைத்துக் கொண்டாள். பின்னர் தன் சென்னி சூடினாள். மலர்க்கண்களால் அதனை ஒத்தினாள். மகிழ்ச்சியால் தோள்கள் துடிக்கப் பெற்றவனாள். மனம் குளிர்ந்து உயிர்த்தாள்.

பாழிய பணைத்தோள் வீர!
    துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய! வள்ளலே! யான்
    மறு இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும்
    யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவு உற்ற ஞான்றும்,
    இன்று என இருத்தி! ‘என்றாள். (5407)

வீரனே! நான் மாசற்ற மனம் கொண்டவளெனில் நீ சிரஞ்சீவியாக என்றும் இருப்பாயாக.

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன். (5470)

என் சொல் எல்லா உலகங்களையும் அழிக்கும். இலங்கை எனக்கு ஒரு பொருட்டல்ல. இராமன் வில்லிற்கு புகழ் சேர்க்கவே நான் அமைதி காத்துள்ளேன்.

இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்ககிலேன் : அந்த
மன்னன் ஆணை! இதனை மனக்கொள் நீ! (5481)

இராமன் வருகைக்காகக் காத்திருந்து நான் ஒரு மாதம் மட்டுமே ஜீவித்திருப்பேன். இது இராமன் மேல் ஆணை என்று சொல்வாயாக.

தொழுது வாங்கினன் சுற்றிய தூசினில் முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து
அழுது மும்மை வலங்கொடு இறைஞ்சினன்; அன்போடு
எழுது பாவையும் ஏத்தினள்; ஏகினன் இப்பால். (5536)

அனுமன் சூடாமணியைத் தொழுது வாங்கினான். தூசி படாமல் ஆடையில் முடிந்து கொண்டான். அழுத கண்களுடன் சீதையை மும்முறை வலம் வந்தான். அன்னையும் அனுமனை வாழ்த்த அனுமன் புறப்பட்டான்.

(தொடரும்)