Thursday 7 May 2020

கம்பன் - கிட்கிந்தா காண்டம் - 3


விழைவுறு பொருள் தரப் பிரிந்த வேந்தர் வந்து
உழை உற உயிர் உற உயிர்க்கும் மாதரின்
மழை உற மா முகம் மலர்ந்து தோன்றின
குழை உறப் பொலிந்தன உலவைக் கொம்பு எலாம். (4277)

குடும்பத்துக்காகப் பொருள் ஈட்டுவதற்காக வேற்றூர் சென்று திரும்பிய கணவனைக் காணும் பொழுதில் பெண்களின் முகம் எவ்வாறு மலர்ந்து மகிழுமோ அவ்வாறு உலர்ந்து கிடந்த மரங்களெல்லாம் தளிராய் மலர்ந்தன.

கம்பனுக்கு முன்னும் பின்னும் மரம் தளிர்த்தல் என்பதும் முகம் மலர்தல் என்பதும் எப்போதும் தமிழ்க் கவிதையின் முக்கியமான படிமங்கள்.

நிறைந்தன நெடுங்குளம்; நெருங்கின தரங்கம்;
குறைந்தன கருங்குயில்; குளிர்ந்த உயர் குன்றம்;
மறைந்தன நெடுந்திசை; வருந்தினர் பிரிந்தார்;
உறைந்தன மகன்றில் உடன் அன்றில் உயிர் ஒன்றி. (4323)

கார்காலத்தின் மழையால் நெடுங்குளங்கள் நிறைந்தன. அலைகடலும் பொங்கியது. குயிலோசை குறைவாய்க் கேட்டது. இறுகிய மலைகளும் குளிர்ந்தன. திரண்ட கருமேகங்களால் திசைகள் மறைக்கப்பட்டன. பிரிந்திருந்த காதலர்கள் வருத்தம் பெருகியது. அன்றில் பறவைகள் இணையைத் தழுவியிருந்தன.

அங்கதன் உடன்செல அரிகள் முன்செல
மங்கையர் உள்ளமும் வழியும் பின்செல
சங்கை இல் இலக்குவன் தழுவி தம் முனின்
செங்கதிரோன் மகன் கடிதிற் சென்றனன். (4492)

அங்கதன் சுக்ரீவனுடன் சென்றான். வானர சேனை அவர்களுக்கு முன்னால் சென்றது. வானர மகளிரின் மனம் பின் தொடர்ந்து வந்தது. அவர்கள் கடந்து சென்ற பாதை பின்னால் அப்படியே இருந்தது. சுக்ரீவன் இலக்குவனுடன் தோளோடு தோள் இணைந்து சென்றான். இராமன் இருக்குமிடம் நோக்கி ஆர்வத்துடன் முன்னேறினர்.

ஒரு படை என்பது ஒரு வாகனம் போல. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து தங்கள் பணியைச் செய்தால் மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். அங்கதன் சுக்ரீவனுக்கு காப்பாக உடனிருக்கிறான். சுக்ரீவன் இலக்குவனுடன் தோளோடு தோள் நிற்கிறான். சைன்யம் தலைவர்களுக்கு முன்னால் செல்கிறது. போர்வீரர் இல்லப் பெண்களின் மனம் அவர்களைப் பின் தொடர்ந்து வருகிறது. அவர்கள் கடந்த பாதை அப்படியே அங்கேயே இருக்கிறது.

ஒரே பயணத்தின் வெவ்வேறு காட்சிகள்.

எண்ணின், நான்முகர் எழுபதினாயிரர்க்கு இயலா;
உண்ணின் அண்டங்கள் ஓர்பிடி உண்ணவும் உதவா;
கண்ணின் நோக்குறின் கண் நுதலானுக்கும் கதுவா;
மண்ணின்மேல் வந்த வானர சேனையின் வரம்பே. (4536)

இராமன் புகழ் பாடும் வானர சேனையின் அளவை முக்கண்ணனாகிய சிவனாலும் மூன்று கண்களால் கண்டு விட முடியாது. இப்படையின் பெருக்க்த்தை எழுபதாயிரம் பிரம்மர்களாலும் கற்பனை செய்து விட முடியாது. இப்படை உண்ணத் தொடங்கினால் அதன் பசிக்கு இந்த அண்டமும் போதாது.

ஒடிக்குமேல், வடமேருவை வேரொடும் ஒடிக்கும்;
இடிக்குமேல், நெடு வானக முகட்டையும் இடிக்கும்;
பிடிக்குமேல் பெருங்காற்றையும் கூற்றையும் பிடிக்கும்;
குடிக்குமேல், கடல் ஏழையும் குடங்கையின் குடிக்கும். (4537)

வானர சேனை ஒடிக்க வேண்டும் என்று நினைத்தால் வடவரையை ஒடித்து எறியும். வானர சேனை இடிக்க வேண்டும் என்று நினைத்தால் மேலே இருக்கும் வானத்தை இடிக்கும். பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் சூறாவளியைப் பிடிக்கும். குடிக்க வேண்டும் என்று நினைத்தால் ஏழு கடலையும் குடிக்கும்.

‘ஏகி ஏந்திழை தன்னை இருந்துழி
நாகம் நாடுக; நால் நிலம் நாடுக;
போக பூமி புகுந்திட வல்லநின்
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால். (4558)

சுக்ரீவன் அனுமனிடம் சீதையை நானிலம் முழுதும் தேடுக. நாகர்கள் வாழும் உலகிலும் தேடுக. வானவர் வாழும் சுவர்க்கத்திலும் தேடுக என்றான்.

‘குட திசைக்கண் சுடேணன்; குபேரன் வாழ்
வட திசைக்கண் சதவலி; வாசவன்
இட திசைக்கண் வினதன்; விறல் தரு
படையொடு ‘உற்றுப் படர்க எனப் பன்னினான். (4562)

சுக்ரீவன் இந்திரனுக்குரிய கிழக்கு திசையில் தேட வினதனையும் மேற்கு திசைக்கு சுடேணனையும் குபேரனுக்குரிய வடக்கு திசைக்கு சதவலியையும் சீதையைத் தேடுமாறு அனுப்பினான்.

‘மல்லல் மாநகர் துறந்து ஏகும் நாள், மதி தொடும்
கல்லின் மாமதில் மணி கடை கடந்திடுதல் முன்,
எல்லை தீர்வு அரிய வெங்கானம் யாதோ “ எனச்
சொல்லினாள்; அஃது எலாம் உணர, நீ சொல்லுவாய்.’ (4624)

வனவாசம் செல்ல அயோத்தி நகரை விட்டு நீங்கும் போது அரசமாளிகையிலிருந்து நகரின் காப்பரணாகிய மதிலைத் தாண்டுவதற்கு முன்பே சீதை இராமனிடம் காடு எங்குள்ளது என்று கேட்கிறாள்.

’’நின் பிரிவினும் சுடுமோ அப்பெருங்காடு’’ என்று வினவிய சீதை இராமனைப் பிரிந்திருப்பது பெருந்துன்பம் என்பது அறிந்தவள். இராமனைப் பிரிந்திருக்கும் துன்பத்தை இராமனைக் கண்ட கணத்திலிருந்து மறுநாள் சுயம்வர மண்டபத்தில் காணும் வரை அனுபவித்தவள். அதனால் ‘’நின் பிரிவினும் சுடுமோ அப்பெருங்காடு’’ என்கிறாள். ஆனால் சீதை அரண்மனை நீங்காதவள். முதல் முறை அரசபோகங்களைத் துறந்து நகர் நீங்கும் போது கணவனிடம் காடு எங்குள்ளது என்று கேட்கிறாள்.

பொதுவாக குழந்தைகளை ஏதேனும் ஊருக்கு அழைத்துச் சென்றால் கிளம்பிய சில நிமிடங்களில் ஊர் எப்போது வரும் என்று கேட்கத் துவங்குவர். சீதை குழந்தை மனம் படைத்தவள். ஆதலால் அப்படிக் கேட்கிறாள்.

இந்த உரையாடல் இராமனும் சீதையும் மட்டுமே அறிந்தது. அதை சீதையிடம் சொல்லுமாறு அனுமனை இராமன் கேட்டுக் கொள்கிறான்.