Monday 11 May 2020

பஹுரூபி காந்தி - பல ரூபங்களில் காந்தி


இன்று பஹுரூபி காந்தி என்ற நூலினை வாசித்தேன். ’’பல ரூபங்களில் காந்தி’’ என இந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலை எழுதியவர் அனு பந்தோபாத்யாய. மகாத்மாவின் வாழ்க்கை முறையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக இந்நூலை அவர் எழுதியிருக்கிறார். பிரபல கார்ட்டூனிஸ்டான ஆர். கே. லஷ்மண் இந்நூலில் ஆர்வமூட்டும் விதத்தில் பல விதமாக காந்தியைப் படம் வரைந்துள்ளார்.

எனக்கு இந்நூலை வாசித்ததும் பாரதியின் ‘’கண்ணன் பாட்டு’’ நினைவுக்கு வந்து கொண்டேயிருந்தது. கண்ணன் பாட்டில் பாரதி கண்ணனை தனது தோழனாக , தாயாக, தந்தையாக, சேவகனாக, ஆசிரியனாக, சீடனாக, காதலனாக நினைத்து பாடல்களை எழுதியிருப்பார். தமிழ் மரபில் கடவுளைத் தம் குழந்தையாக எண்ணி பாடப்படும் பாடல்களுக்கு ’’பிள்ளைத்தமிழ்’’ என்று பெயர். குமரகுருபரர் எழுதிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பிரபலமானது. ஆழ்வார்கள் பெருமாளை தன் காதலனாக எண்ணி பாடிய பாடல்கள் ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ளன. ‘’யாவுமே சுக முனிக்கோர் ஈசனாம்’’ என்னும் இரண்டற்ற நிலை அது.

மகாத்மா காந்தி ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை குறித்த ஒரு தனித்துவமான பார்வையைக் கொண்டிருந்தார். எந்த தனி மனிதனும் தானாகவே செய்து கொள்ளக் கூடிய செயல்களுக்கு இன்னொரு மனிதனின் உழைப்பைப் பயன்படுத்தக் கூடாது என்று காந்தி எண்ணினார். உடல் உழைப்பை நல்க எவருக்குமே எந்த விதமான தடையோ தயக்கமோ இருக்கக் கூடாது என்பது காந்தியின் எண்ணம்.

அவர் கடுமையான உடல் உழைப்பை நல்கக் கூடியவர். தினசரி உடல் உழைப்பை அனைவரும் நல்குவது சீரான சமூக இயக்கத்துக்கு உதவக் கூடியது என்பது காந்தியின் கருத்து. ஒவ்வொருவரும் தமது கழிப்பறைகளைத் தாமே தூய்மை செய்து கொள்ள வேண்டும்; தங்கள் உடைகளை தாமே நேர்த்தியான முறையில் துவைத்துக் கொள்ள வேண்டும்;தங்களைச் சுற்றியிருக்கும் இடத்தில் ஏதேனும் மரம், செடி, கொடிகளை நட்டு பராமரிக்க வேண்டும்; என்பதில் காந்தி உறுதியாக இருக்கிறார். உண்மையான சமநிலை என்பது உழைப்பு மதிக்கப்படும் இடத்திலேயே உருவாக முடியும். உழைப்பு கூலி பெறும் இடத்தில் சமநிலை இருக்காது என்ற புரிதல் காந்திக்கு உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகளின் விவசாயிகளின் குடும்பத்தாரின் விவசாயத் தொழிலாளர்களின் கோடானு கோடி மணி நேரங்கள் தறி நெசவில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதை காந்தி வலியுறுத்துகிறார். கோடானு கோடி பேருக்கு வேலை தரக்கூடிய ஒரு வழிமுறையை சில ஆயிரம் இயந்திரங்களுக்கு அளித்து அதன் மூலம் வெகு சிலர் மட்டுமே ஜவுளித் துறையில் லாபம் ஈட்டுவதை கடுமையாக விமர்சிக்கிறார் காந்தி.

மருத்துவம் குறித்த அறிவை சமூகத்தில் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டும்; அதன் மூலம் இயற்கையான வழிமுறைகளில் நோய்மையிலிருந்து விடுபட முடியும் என்கிறார்.

செல்வத்திற்கு இணையாகக் கருணையை தமது தேசத்திடம் முன்வைத்துக் கொண்டேயிருக்கிறார் காந்தி. கோடானுகோடி மக்கள் துயரில் வாடும் ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டும் பெருஞ்செல்வம் வைத்திருப்பது முறை அல்ல என்று அவர்களிடமே சொல்லும் காந்தி அவர்களிடமிருந்து கருணையை யாசிக்கும் யாசகனாக விளங்குகிறார்.

காந்தி ஒரு - உழைப்பாளி, சமையல் காரர், சலவைத் தொழிலாளி, நாவிதர், செருப்பு தைப்பவர், மருத்துவர், செவிலியர், ஆசிரியர், நெசவாளர், வணிகர், விவசாயி, பிச்சைக்காரர், சிறைப்பறவை, எழுத்தாளர், எடிட்டர், ஃபாஷன் டிசைனர், பாம்பாட்டி, புரோகிதர்- ஆகிய தலைப்புகளில் அனு பந்தோபாத்யாய் எவ்வாறெல்லாம் காந்தி மேற்கண்ட நபர்களாக தினந்தோறும் இருந்திருக்கிறார் என எழுதியிருக்கிறார். ஒரு மனிதன் இத்தனை செயல்களையும் செய்வது மானுட சாத்தியம் தானா என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது இந்நூல்.

மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் மாடு மேய்த்திருக்கிறார்; மக்களைக் காத்திருக்கிறார்; அன்பிற்கினிய குழந்தையாக இருந்திருக்கிறார்; காளிங்க நர்த்தனம் புரிந்திருக்கிறார்; தீராக் காதலனாக இருந்திருக்கிறார்; யோகியாக விளங்கியிருக்கிறார். தேர் ஓட்டியிருக்கிறார்; தூது சென்றிருக்கிறார்; குழல் இசைத்திருக்கிறார்; அரசனாக ஆட்சி புரிந்தார்; ஆசாரியனாக வழிகாட்டியிருக்கிறார். குதிரைகளைப் பராமரித்திருக்கிறார்.

இந்நூல் இருவரைப் பற்றியும் எண்ண வைத்தது. இருவருக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை உண்டு; இருவருமே குஜராத்திகள்.