Thursday 14 May 2020

ராஜாஜியின் ஜெயில் டைரி

சமீபத்தில், ராஜாஜியின் ஜெயில் டைரி என்ற நூலை வாசித்தேன். 1920களில், ஒத்துழையாமை இயக்கத்தின் போது ராஜாஜி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு நாளும் சிறையில் தனக்குத் தோன்றும் எண்ணங்களையும் தனது அன்றாடச் செயல்களையும் ராஜாஜி எழுதி வைக்கிறார். அது ராஜாஜியின் சீடரான சின்ன அண்ணாமலையின் தமிழ்ப் பண்ணை பிரசுரம் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்தது. அதன் சில பகுதிகள் மொழிபெயர்ப்பு மேலும் சீராக்கப்பட்டு ‘’கல்கி’’யில் வெளிவந்திருக்கிறது. அதன் தொகுப்பே ‘’ராஜாஜியின் ஜெயில் டைரி’’.

மிக மோசமாக சிறை பராமரிக்கப்படுகிறது. அரசியல் கைதிகள் குற்றவியல் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளுடன் ஒன்றாக வைக்கப்படுகின்றனர். சிறை அதிகாரிகள் சாதாரண மருத்துவ வசதிகளைக் கூட செய்து தர விருப்பமில்லாமல் இருக்கின்றனர். ராஜாஜியின் உடல்நிலை அவ்வப்போது சீர்கேடாகிறது. ராஜாஜி அதனை ஆத்ம சோதனை என்று எடுத்துக் கொள்கிறார். எந்த சோதனையையும் சத்யாக்கிரகி வெற்றிகரமாகக் கடப்பான் என தனக்குத் தானே உறுதியாக சொல்லிக் கொள்கிறார் ராஜாஜி. செய்தித்தாள் கூட தரப்படுவதில்லை. அத்தகவலை மகாத்மா காந்திக்கு எழுதும் கடிதத்தில் ராஜாஜி சாதாரணமாகக் குறிப்பிடுகிறார். ராஜாஜிக்கு எழுதும் பதில் கடிதத்தில், ‘’அது மிகவும் நல்ல விஷயம்; வெளி உலக பாதிப்பு இன்றி சிறை வாழ்வில் அகத்துக்குள் ஆழ்ந்து செல்ல அது மிக உதவும்’’ என்று பதில் எழுதுகிறார் காந்தி.

சக கைதிகள் மோசமாக நடத்தப்படும் போது மிகவும் வருந்துகிறார் ராஜாஜி. காந்தியைக் குறித்தும் சுதந்திரப் போராட்டம் குறித்தும் எப்போதும் எண்ணியவாறு இருக்கிறார்.  காங்கிரஸ் காந்தியால் மட்டுமே வழிநடத்தப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறார் ராஜாஜி.