Tuesday 19 May 2020

கிராமியப் பொருளாதாரம்

சில வருடங்களுக்கு முன்னால், ‘’ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை - செவ்வியல் பொருளாதாரத்தின் வரலாறு’’ என்ற நூலை வாசித்தேன். அந்நூலின் துவக்கத்தில் இவ்வாறு கூறியிருப்பார்கள் : ’’இது பொருளாதாரம் குறித்தது. பணம் எவ்வாறு இயங்குகிறது - எங்ஙனம் மதிப்பு பெறுகிறது என்பதைப் பொறுத்தது. பணம் ஏற்படுத்தும் விளைவுகளால் உண்டாகும் அநீதி பொருளாதாரம் என்ற பிரிவின் கீழ் வராது. இதனை ஏற்றே பொருளாதாரம் குறித்து மேலும் பேச முடியும். எளிமையாக வாழும் ஒருவனைக் காட்டிலும் ஊதாரியே பலவிதமான செலவு செய்து பண சுழற்சியை உண்டாக்குகிறான். ஊதாரித்தனம் தவறு என்பது நீதி - சட்டம் - சமூகவியல் சார்ந்தது. பொருளாதாரம் பணத்தின் இயங்குமுறையை மட்டுமே கணக்கெடுக்கும்.’’ எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பொருளாதாரத்தின் இந்த Disclaimer யாருக்குமே அதிர்ச்சி தரக் கூடும். 

உலகில் இன்று வலுவான பொருளாதாரங்களாக இருக்கும் பல ஐரோப்பிய நாடுகள் 17ம் நூற்றாண்டுக்குப் பின்னரே தலையெடுத்தவை. அமெரிக்கா 20ம் நூற்றாண்டிலேயே பெரிய சக்தியானது. ஆனால் இந்தியா குறைந்தபட்சம் 4000 ஆண்டுகளாக உலகின் பெரிய பொருளாதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் இங்கிலாந்தால் மிக மோசமாக சுரண்டப்பட்ட போது கூட, இந்தியா பெரிய அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாகவே இருந்திருக்கிறது. இன்றும் இந்தியா உலகின் முக்கியமான பொருளாதாரமே.

ஐரோப்பாவும் அமெரிக்காவும் மனித உழைப்பைச் சுரண்டுவதன் மூலம் செல்வ வளம் மிக்க நாடுகளாக ஆயின. இந்தியா மனிதநேயம் மிக்க பொருளியலையே தனது இயங்குமுறையாக பல ஆயிரம் ஆண்டுகள் கொண்டிருந்தது. இன்று மாற்றங்கள் இருப்பினும், மிகச் சிறு அளவில் அம்முறை நீடிக்கவே செய்கிறது.

இந்தியா வெவ்வேறு விதமான வாழ்க்கைச்சூழல்களைக் கொண்ட நாடு. அதனால் லட்சக்கணக்கான சமூகப் பழக்கங்களைக் கொண்டிருக்கிறது. இங்கே கடலோரத்தில் வாழும் பெரும் சமூகம் உண்டு. ஏரியோரத்தில் வாழும் சமூகங்கள் உண்டு. காட்டையொட்டி வாழும் மக்கள் உண்டு. மலைப்பிரதேசத்தில் வாழ்பவர்கள் உண்டு. ஆற்றையொட்டி வாழ்பவர்கள் உண்டு. பாலை நிலங்களில் வாழ்பவர்கள் உண்டு. பனி பொழியும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் உண்டு. அவர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான பண்பாடு உண்டு. இங்கே ‘’பண்பாடு’’ என்ற சொல்லை ‘’மதம்’’ என்ற சொல்லுடன் இணைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். வயதில் மூத்தவர்களை மதித்தல், முன்னோடிகளின் நினைவைப் போற்றுதல், குழந்தைகளைக் கொண்டாடுதல், பெண்களை மதித்தல், இயற்கையை இறை வடிவமாய் காணல், சக மனிதர்களுக்கு உதவி செய்தல், எல்லா உயிர்களிடத்தும் கருணையுடன் இருத்தல், சொல்லும் செயலும் ஒன்றென இருத்தல் ஆகியவை இந்திய சமூகங்கள் பேணிய பண்பாடுகள். அவை இன்றும் தொடர்கின்றன. இந்தியப் பண்பாடு என்பதை அவற்றை அடிப்படையாய்க் கொண்டு எழுந்ததே. அவற்றை சமயங்கள் ஏற்ற போது அவை வெவ்வேறான சடங்குகளாயின. எந்த சமூகமும் ஒரு விழுமியத்தை தலைமுறைகளின் நினைவில் சடங்குகளாகவே பதிக்க இயலும். இங்கே சடங்குகளோ சமயமோ ஒரு பண்பாட்டை உருவாக்கவில்லை. பண்பாடே சமயத்தையும் சமூகங்களையும் உடுவாக்கியது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால் பண்பாடே எல்லா இந்திய சமூகங்களையும் இணைத்தது; இப்போதும் இணைக்கிறது. உலகில் இது ஒரு மேலான வழிமுறை.

இந்தியப் பண்பாடு மானுடனுக்கு அளிக்கக் கூடிய எல்லா சலுகைகளையும் எப்போதும் அளித்தவாறே இருக்கிறது. அவன் எந்த நிலையிலும் தன்னுடைய சூழலுக்கு அன்னியப்பட்டு விடாமல் இருக்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்கிறது. இங்கே மரத்தை வழிபடுவர்கள் உண்டு. பிராணிகளை வழிபடுபவர்கள் உண்டு. வானத்தை வழிபடுபவர்கள் உண்டு. இந்தியா யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்துவதில்லை என்பதே உண்மை. நியதிகள் சமூகத்தில் ஒழுங்கும் கட்டுப்பாடும் திகழ உருவானவையே என்பதை இந்தியா புரிந்து வைத்துள்ளது. அதனாலேயே எல்லா விதமான விதிவிலக்குகளையும் அனுமதிக்கச் செய்கிறது.

கிராமம் தன்னளவில் ஒரு அலகு. அதில் வேதியர்கள், பூசாரிகள், விவசாயிகள்,ஆநிரை மேய்ப்பவர்கள், கொல்லர்கள், தச்சர்கள், குயவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் வசித்தனர். கிராமத்தின் ஒட்டு மொத்த தொழில் விவசாயம். விவசாயத்தில் நெல், காய்கறிகள்,  கால்நடைகள், பழங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவை அடங்கும். ஒரு கிராமம் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி அங்கு உற்பத்தியாகும் உணவுப்பொருளாகவே செலுத்தப்படும். அந்த உணவுப்பொருள் அரசூழியர்களுக்கு ஊதியமாக அளிக்கப்படும். கிராமத்தில் ஒவ்வொரு விவசாயியுமே அக்கிராமத்தில் ஆலயத்துக்கு தனது உற்பத்தியில் ஒரு பங்கை வழங்குவார். ஆலயத்தைச் சார்ந்து வாழ்வோர் தங்கள் ஊதியமாக அதனைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆலய வழிபாடு கிராமத்தை ஒருங்கிணைக்கும். பெரு தெய்வங்கள், சிறு தெய்வங்கள், காவல் தெய்வங்கள் என அனைத்தும் வழிபடப்படும். அனைத்து தெய்வ ஆலயங்களுக்கும் கிராம உற்பத்தியின் ஒரு பகுதி கிடைக்கும். இது பல்லாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பழக்கம். இன்னும் இதன் அடிப்படை வடிவம் அப்படியே இருக்கிறது. ஒரு கிராமத்தின் உபரி உற்பத்தி வெளியில் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனையாகும். தன்னளவில் ஒரு கிராமம் தன்னிறைவு பெற்றிருக்கும். இங்கே நெல் என்பதற்குப் பதிலாக, சோளம், கம்பு, கேழ்வரகு, கோதுமை என்பதாக இந்தியா முழுதும் பிராந்தியத்துக்கு பிராந்தியம் மாறுபடும். மற்றபடி ஒரே சித்திரம் தான்.

இன்று விவசாயிகள் விதைநெல்லைக் கூட ஊருக்கு வெளியில் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. விதைநெல்லைக் கூட சேமித்து வைக்கச் சொல்லாத ஒரு சமூக ஏற்பாட்டுக்குள் அவர்கள் கட்டாயமாகத் தள்ளப்பட்டுள்ளனர். பயிருக்குத் தேவையான உரம் ஊருக்கு வெளியே நகர்ப்புறங்களிலிருந்து வாங்கி நிலத்தில் இடுகின்றனர். கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய இல்லங்கள்
( களிமண்ணால் கட்டப்படும் வீடுகள் பல நூற்றாண்டுகள் தாங்கக் கூடியவை. சிமெண்ட் கட்டிடத்தின் வலிமை 60 ஆண்டுகளே.) இன்று இல்லாமலாகி வீடு கட்டுவதற்கான மூலப்பொருட்களை ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பெறுகின்றனர். ஒட்டு மொத்த இந்திய கிராமத்தின் உபரி வருவாய் பல விதங்களிலும் சுரண்டப்படுகிறது.

மகாத்மா தனது ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’ நூலில் இந்தியாவின் மரபான அடிப்படைக் கட்டமைப்பை மீளச் செய்வது குறித்து பேசுகிறார்.

அது பலவிதங்களிலும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.