Friday 12 March 2021

மறுபக்கம்

எனது நண்பர் ஒருவர் மருத்துவர். அவர் எனக்கு சகோதரனைப் போன்றவர். அவர் கைக்குழந்தையாயிருந்த போதிலிருந்து நான் அறிவேன். நான் தூக்கி வளர்த்த குழந்தை. மருத்துவம் படித்து மருத்துவத்தில் மேற்படிப்பும் முடித்து இப்போது வெளி மாநிலம் ஒன்றில் பணி புரிகிறார். சில வாரங்களுக்கு முன்னால், ஊருக்கு வந்திருந்த போது என்னைக் காண வீட்டுக்கு வந்திருந்தார். கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்டாயா என்று கேட்டேன். எங்கள் மருத்துவமனையில் அனைவரும் போட்டுக் கொண்டோம் என்று சொன்னார். மிகவும் துல்லியமான இயங்குமுறையில் பதிவும் செயலாக்கமும் நடைபெறுகிறது என்று சொன்னார். 

தமிழ்நாட்டில் அதே நடைமுறை முன்வைக்கப்பட்டது. ஆனால் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. அதில் என்னென்ன ஒழுங்கீனமெல்லாம் நிகழ்த்த முடியுமோ அத்தனையும் நிகழ்த்தினார்கள்.  இந்தியாவில் இவ்வளவு குறைவான வரவேற்பு மருத்துவத் துறையால் அளிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். 

இந்தியா முழுமைக்குமான ‘’நீட்’’ தேர்வு குறித்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கருத்து சொல்லி திசை திருப்பி அதை அரசியல் பிரச்சனையாக்கினர். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இருப்பதை விட இங்கே மருத்துவ உள் கட்டமைப்பு அதிகம் என அதற்கு காரணம் கூறினர். தமிழ்நாட்டின் மருத்துவர்களில் கணிசமானோர் ‘’நீட்’’ தேர்வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை பிரச்சாரத்துக்குத் துணை நின்றார்கள். தமிழ்நாட்டின் மருத்துவத் துறையின் செயல் தரம் எந்த அளவு தாழ்ந்து இருக்கிறது என்பதற்கு கோவிட்-19 தடுப்பூசி குறித்து அவர்கள் நடந்து கொண்டிருக்கும் விதமே சான்று. தமிழ்நாட்டு மருத்துவத் துறை எந்த அளவு அரசியல் உள்நோக்கங்கள் கொண்டுள்ளது என்பதற்கும். 

தமிழ்நாட்டில் ஒரு சங்கிலித் தொடர் இருக்கிறது. அது எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது எனில்

1. அரசியல்வாதிகள் மது பானத் தொழிற்சாலை வைத்துக் கொண்டு மது தயாரிப்பார்கள்.

2. அரசாங்கம் மது விற்கும். 

3. மதுவால் குடிமக்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாவார்கள். 

4. அரசாங்கம்  மாவட்டத்துக்கு மாவட்டம் மருத்துவக் கல்லூரி திறக்கும். 

5. மருத்துவத்தை மக்களுக்கு இலவசமாக வழங்குவதாகச் சொல்லும். 

6. எண்ணிக்கையில் பெரிய வலைப்பின்னலில் மருத்துவம் அளிப்பதால் மிகப் பெரிய அளவிலான ஊழலும் முறைகேடுகளும் சுகாதாரத் துறையில் நிகழும். 

7. சமூகம் நோய்மையில் சிக்கித் தவிப்பதால் மருத்துவம் பெரும் பொருளீட்டும்  செயல்பாடு ஆகும். 

இவ்வாறாக இந்த சங்கிலித் தொடர் பூர்த்தியாகும். 

தமிழ்ச் சமூகம் தன் நோய்மையிலிருந்து விடுபட வேண்டிய நேரம் இது.