Tuesday 9 March 2021

ஆபரேஷன் ஷீல்டு

இன்று மாலை செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று நண்பர்களைச் சந்தித்தேன். அவர்கள் மிக உற்சாகமாக வரவேற்றார்கள். கிராமத்தில் உள்ள எவரும் விடுபடாமல் முழுமையாகச் செய்து முடிக்கலாம் என்றார்கள். அவர்களின் உற்சாகத்தில் அவர்கள் இந்த விஷயத்தில் காட்டும் ஆர்வம் தெரிந்தது. எதையும் சரியாக உரிய விதத்தில் எடுத்துச் சொன்னால் எவரும் கேட்பார்கள் என்பது எனது அனுப்வம். குறைந்தபட்சம் பரிசீலிக்கவாவது செய்வார்கள். 

cowin.gov.in  என்ற இணையதளம் குறித்து சொன்னேன். அதிலேயே அனைத்து பதிவுகளையும் மேற்கொள்ள முடியும் என்ற விபரத்தையும் அது இயங்கும் முறையையும் விளக்கினேன். மிகவும் வியந்தார்கள். 

நமது செயல்முறைக்கு ‘’ஆபரேஷன் ஷீல்டு’’ என பெயரிடலாம் என்று சொன்னேன். பெரும் உற்சாகம் அடைந்தார்கள். 

மயிலாடுதுறையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது என்பதால் இந்த பெயரிடல்.

நாளை ஒரு மாதிரிப் படிவத்தை எடுத்துச் சென்று காட்ட வேண்டும். அதில் ஏதும் மாற்றங்கள் செய்யலாமா அல்லது அப்படியே ஏற்கலாமா என கிராமத்து இளைஞர்களுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலை படிவங்களை ஒவ்வொரு வீடாகச் சென்று தடுப்பூசி குறித்து எடுத்துச் சொல்லி நிரப்புமாறு கொடுத்து விட்டு வர வேண்டும். அன்று மாலையே ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிரப்பப்பட்ட படிவத்தைப் பெற்று விட வேண்டும். தடுப்பூசி போடத் தகுதி உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை கிடைத்து விடும். அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்தடுத்த விஷயங்களைத் திட்டமிடலாம். 

ஞான தீபம்  பணி முன்னேற்றங்கள் குறித்து சொன்னேன்.