Monday, 8 March 2021

உத்தம லாபம்

யட்சன் : லாபா நாம் உத்தமம் கிம்?
யுதிர்ஷ்ட்ரன் : லாபா நாம் சிரேயஸ் : ஆரோக்யம்

யட்சன் : லாபத்தில் சிறந்தது எது?
யுதிர்ஷ்ட்ரன் : ஆரோக்கியமே உத்தமமான லாபம்.

-யட்சப் பிரசன்னம், மகாபாரதம். 

என் பெற்றோருக்கு நான் வீட்டில் அதிக நேரம் இருப்பதில்லை என்னும் மனக்குறை. எங்காவது கிளம்பிச் சென்று விட்டு உணவருந்தத் தாமதமாக வருகிறேன் என்று வருத்தம். அவர்கள் வருத்தத்தைப் போக்கும் விதமாக அவ்வப்போது ஏதாவது செய்ய முயல்வேன். செய்தித்தாளில் கோவிட் தடுப்பூசி மயிலாடுதுறையில் போடத் துவங்கி விட்டார்கள் என்ற செய்தி கண்டேன். அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரித்து விட்டு வருவோம் என்று காலையில் சென்றேன். அது மேற்கு பார்த்த வளாகம். அதன் கிழக்குக் கோடியில் தடுப்பூசி போடும் இடம் இருந்தது. நான் சென்று பார்த்த போது பெரிய கூட்டம் எதுவும் இல்லை என்பது ஆச்சர்யம் தந்தது. நான் சென்று விசாரித்தேன். காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தடுப்பூசி போடுவதாகவும் வரும் போது ஆதார் அட்டை எடுத்து வர வேண்டும் என்றும் சொன்னார்கள். நான் வீட்டுக்குத் திரும்பி வந்து கேட்டறிந்த தகவலைச் சொன்னேன். நாளை காலை செல்லலாம் என முடிவானது. 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் வயதானவர். சற்று உடல்நலம் இல்லாதவர். யாரேனும் உடன் வந்தால் மட்டுமே அவரால் வெளியே செல்ல முடியும். அவரைச் சென்று பார்த்தேன். தடுப்பூசி போடும் விபரத்தைச் சொல்லி மருத்துவமனைக்கு கிளம்பச் சொன்னேன். அவரை அழைத்துக் கொண்டு சென்றேன். 

இரண்டு செவிலிச் சகோதரிகள் பதிவு செய்யும் இடத்தில் இருந்தனர். அவர்கள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஆதார் அட்டையைப் பார்த்து பெயர், முகவரி, ஆதார் எண் ஆகியவற்றை குறித்துக் கொண்டு ஒரு சீட்டைக் கொடுத்தனர். அதில் மேற்படி விபரங்களுடன் இரண்டாம் முறை தடுப்பூசி போடும் தேதியும் குறிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு அறையின் வாசலில் கணினி முன் ஒரு சகோதரி அமர்ந்திருந்தாள். அவள் முன்னால் ஒரு அலைபேசி. அதில் வாட்ஸ் அப் பக்கம் திறந்திருந்தது. கையால் எழுதப்பட்டிருந்த விபரங்கள் அதில் தெரிந்தன. அந்த கையெழுத்து பதிவு செய்யும் இடத்தில் உள்ள பெண்ணின் கையெழுத்து என்பதை உணர்ந்து கொண்டேன். ஒவ்வொரு வரிசை எண்ணாக பதிவு செய்ய பதிவு செய்ய அந்த பெண் வாட்ஸப்பில் அனுப்புகிறாள். அதைப் பார்த்து இங்கே உள்ள பெண் கணினியில் ஏற்றுகிறாள். ஒரு வாட்ஸப் மெசேஜ் அனுப்ப ஒரு ரூபாய் கட்டணம் என்று வைத்தால் இந்தியர்கள் என்ன ஆவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். இந்தியர்கள் என்ன ஆவார்களோ வாட்ஸப் உலகிலிருந்தே காணாமல் போய் விடும்!

நாங்கள் இருந்த கட்டிடம் ஐந்து மாடிக் கட்டிடம். அதி நவீன வசதிகள் கொண்டது. தடுப்பூசி போடும் அறை மிகச் சுகாதாரமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. பத்து வினாடிகள். நண்பருக்குத் தடுப்பூசி போட்டாயிற்று. அரை மணி நேரம் உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என அவதானிக்க வேண்டும் என்று சொன்னார்கள். நண்பரை லகுவாக அமர வைத்து விட்டு பத்து நிமிடத்தில் வந்து விடுகிறேன் எனக் கூறி விட்டு தபால் ஆஃபிஸ் வரை சென்றேன். அங்கே சில கடிதங்கள் அனுப்ப வேண்டியிருந்தது. நான் திரும்பி வர அரைமணி நேரமாயிற்று. பெரியவர் உடல்நிலை சீராக இருந்தது. செவிலிச் சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு புறப்பட்டோம். 

அரசாங்கம் மக்கள் நலனுக்காக ஒரு விஷயத்தைத் திட்டமிடுகிறது. அதற்கு மக்களிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்தால் தானே ஒரு விஷயம் முழுமை பெறும். அதனை உணரும் இடத்துக்கு நம் சமூகம் என்று வரும் என மனம் கொதித்தது. அதில் இன்னும் ஆச்சர்யம் தமிழ்நாட்டின் சுகாதாரத் துறை மருத்துவர்களிலும் பணியாளர்களிலும் கணிசமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பதை எப்படி புரிந்து கொள்வது? அதில் எத்தனை அலோபதி மருத்துவர்கள் ஆயுர்வேதத்தை மருத்துவமாகவே கருத மாட்டோம் என வீதிக்கு வந்து போராடினர்? 

ஆளற்ற வராந்தாவும் காலியாக இருந்த பிளாஸ்டிக் இருக்கைகளும் என மனதில் தோன்றி மறைந்த போது எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது. 

செயல் புரியும் கிராமத்தின் மக்கள் தொகை தோராயமாக 1500. அதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 300 பேர் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் அழைத்து வந்து அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி போட முடியுமா என்று யோசித்தேன். 

சாத்தியம்தான் என்று தோன்றியது. 

கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்க வேண்டும். அவர்களிடம் தடுப்பூசி குறித்தும் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது குறித்தும் விளக்க வேண்டும். பின்னர் அவர்கள் மயிலாடுதுறை வருவதற்கு ஒரு நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அன்று அவர்களை வேன் அல்லது பேருந்து ஏற்பாடு செய்து அழைத்து வந்து மீண்டும் ஊரில் கொண்டு போய் விட வேண்டும். என் மனம் அடுத்தடுத்து நடக்க வேண்டியதை அகக் கண்ணால் கண்டு கொண்டிருந்தது. 

என்னுடைய நண்பருக்கு ஃபோன் செய்தேன். ‘’ஹலோ ! பிரபு பேசுறன். 5 நிமிஷம் பேசலாமா?’’

அவர் கல்லூரிப் பேராசிரியர். 

‘’பேசலாம். பேசலாம். சொல்லு என்ன விஷயம்?’’

‘’இந்த சலூன் லைப்ரரி சம்பந்தமா உன் ஃபிரண்டு ஒருத்தர்ட்ட பேசுறன்னு சொன்னியே. அது என்னாச்சு?’’

‘’இன்னைக்கு சாயந்திரம் பேசிட்டு பணம் எப்ப வரும்னு சொல்லிடறன்’’

‘’எப்பவுமே நான் தான் என்ன அப்டேட்னு கேக்க வேண்டியதா இருக்கு. மார்ச் 15 க்குள்ள எல்லா விஷயமும் செய்யணும்னு முடிவு பண்ணியிருக்கோம். ஞாபகமிருக்குல்ல?

‘’இன்னும் ஒரு வாரம் இருக்கேப்பா’’

‘’ஒரு வாரம் தான் இருக்கு’’ என்று அழுத்தமாகச் சொன்னேன். 

பேராசிரியர் மௌனம் காத்தார். 

‘’ஆக்சுவலா நான் வேற ஒரு விஷயத்துக்காக ஃபோன் செஞ்சேன்”

‘’என்ன விஷயம்?’’

‘’நாம பிளாண்டேஷன் பண்ணோம்ல அந்த கிராமத்துல 60 வயசுக்கு மேல இருக்கறவங்க 300 பேர் இருப்பாங்க. அவங்கள அசெம்பிள் பண்ணி மாயூரம் கூட்டி வந்து கோவிட் தடுப்பூசி போட்டுக்க உதவி செய்யலாம்னு நினைக்கறன்.’’

‘’நல்ல விஷயம் தான். மக்கள் கோ ஆப்பரேட் பண்ணுவாங்களா?’’

‘’எடுத்துச் சொன்னா கேப்பாங்க’’

‘’என்ன செலவு ஆகும்?’’

‘’டிரான்ஸ்போர்டேஷன் செலவு தான். ரொம்ப பெருசு கிடையாது’’

‘’ஏற்பாடு பண்ணிக்கலாம். நீ ஆர்கனைஸ் செய்’’

‘’சப்போர்ட்டுக்கு ரொம்ப தேங்க்ஸ்’’

‘’நான் உன்னை சாயந்திரம் மீட் பண்றேன்’’

பேசி முடித்தோம். அடுத்த ஃபோனை கர்நாடகாவுக்குப் போட்டேன். 

‘’அண்ணா! சொல்லுங்க அண்ணா’’

‘’ஃபிரண்டு ஒருத்தருக்கு தடுப்பூசி போட வந்தேன். அப்ப ஒரு ஐடியா தோணுச்சு’’ . சுருக்கமாகச் சொன்னேன். 

’’நல்ல விஷயம் அண்ணா.’’

‘’சலூன் லைப்ரரிக்கு ஒர்க் பண்ணனும். அதுக்கு மினிமமா 150 ஊருக்காவது நேர போற மாதிரி இருக்கும்.’’

‘’நீங்க மேனேஜ் பண்ணிடுவீங்க. செய்ங்க’’

’’ஏதோ நீங்கள்லாம் கொடுக்கற சப்போர்ட்ல ஒன்னுல இருந்து இன்னொன்னு செய்ய முடியுது. பகவான் மேல பாரத்தைப் போட்டுடறன்’’

’’பேங்க் அவர்ஸ் முடிஞ்சதும் நான் சாயந்திரம் ஃபோன் பண்றேன் அண்ணா’’

தம்பி விடுபட்டான். 

கிராமத்துக்கு ஃபோன் செய்தேன். இளைஞர்களிடம் பேசினேன். 

‘’சார்! நாங்க கூட இருக்கோம் சார். நீங்க சொன்னா எல்லாரும் கேப்பாங்க. நமக்கு நல்ல ரிசல்ட் இருக்கும்’’

ஒரு இளைஞன் மட்டும் ஒரு சந்தேகம் கேட்டான். 

‘’சார்! ஒரு டாக்டரை ஊருக்கு அழைச்சுட்டு வந்து எல்லாருக்கும் தடுப்பூசி போட்டுட்டா?’’

‘’தம்பி! கோவிட் தடுப்பூசி குறிப்பிட்ட சில ஹாஸ்பிடல்ல தான் இருக்கு. வெளியில கொண்டு வர முடியாது.’’

இத்தனை பேர் ஆதரவளிக்கும் விஷயத்தை எளிதில் செய்து விடலாம் என்று மனம் உறுதி கொண்டது. 

ஒவ்வொரு வீட்டுக்காகச் சென்று தடுப்பூசியின் முக்கியத்துவத்தைத் தெரிவிக்க வேண்டும். பின்னர் தோதான ஒரு நாளை முடிவு செய்ய வேண்டும். வாகன ஏற்பாடு செய்ய வேண்டும். பஸ் 60 பேரை மாயூரத்தில் கொண்டு போய் விட்டு உடன் திரும்பும். அரைமணியில் கிராமத்திலிருந்து அடுத்த பேருந்து கிளம்பும். ஒவ்வொரு பேருந்தும் மூன்று முறை சென்று வரும். கோவிட் தடுப்பூசியின் பாதுகாப்பை முழுமையாய்ப் பெறும் முதல் கிராமம். 

சென்ற ஆண்டு மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அந்த கிராமத்துக்கு முதல் முறையாகச் சென்றேன் என்பது நினைவில் வந்தது. 

‘’கடமையைச் செய்’’ என்கிறது கீதை.