Sunday 25 July 2021

வெள்ளத்தனைய மலர்நீட்டம்

சில வாரங்களுக்கு முன்னர் ஒருவர் அறிமுகமானார். இப்போது நாங்கள் நெருக்கமான நண்பர்கள்.  என் மீது மிகுந்த பிரியம் கொண்டுள்ளார். 

அவர் மின்னணுப் பொருட்கள் மீது பேரார்வம் கொண்டவர். லௌகிகமான எந்த பொருளையும் எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ எவ்வளவு குறைவாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவு நல்லது என்று எண்ணுபவன் நான். 

பலர் பலகாலமாக என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு கூறி வருகிறார்கள். ஒரு ஜி.எஸ்.எம் ஃபோன் என்னிடம் உள்ளது. இப்போது சில நாட்களாக அதனையும் துறந்து விட்டு லேண்ட்லைன் மட்டும் பயன்படுத்தினால் என்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

நண்பர் என்னிடம் எல்லாரும் பாடும் பாட்டை பாடத் துவங்கினார். ‘’ பிரபு! ஸ்மார்ட்ஃபோனால எவ்வளவோ நன்மை இருக்கு. அதுல எவ்வளவோ வசதி இருக்கு. நீங்க ஏன் ஸ்மார்ட்ஃபோன் வச்சுக்காம இருக்கீங்க?’’

‘’நான் உங்ககிட்ட எப்பவாவது ஏன் ஸ்மார்ட்ஃபோன் வச்சுருக்கீங்கன்னு கேட்டிருக்கனா. உங்க விஷயத்துல நான் தலையிடறது இல்லை. ஏன் எல்லாரும் என் விஷயத்துல மட்டும் தலையிடறீங்க?’’

அவர் மென்மையான இயல்பு உள்ளவர். ‘’ நீங்க சொல்றது கரெக்ட் தான்’’

சில நாட்களுக்குப் பின் மீண்டும் ஆரம்பித்தார். 

‘’நீங்க வில்லேஜ்ல நிறைய ஒர்க் பண்றீங்க. அது இன்னும் நிறைய பேருக்குத் தெரியணும். அதுக்கு உங்களுக்கு ஸ்மார்ட்ஃபோன் வேணும்.’’

‘’நண்பரே! ஒரு விஷயம் எத்தனை பேரைச் சென்றடையணும்னு நாம விரும்பறமோ அத்தனை பேரை இன்னைக்கு இருக்கற தகவல் தொடர்பு யுகத்துல நாம சென்றடைஞ்சுடலாம். அதுக்கு பல வழி இருக்கு. நான் லேப்டாப் யூஸ் பண்றேன். அதுலயே எல்லா வசதியும் இருக்கு. அப்புறம் எதுக்கு ஸ்மார்ட்ஃபோன்?’’

‘’உங்க கிட்ட பேசும் போது நீங்க சொல்றது சரின்னுதான் தோணுது’’

‘’நான் சொல்றன்னு கூட எதையும் அப்படியே ஏத்துக்காதீங்க. ஒரு விஷயத்தோட எல்லா டைமண்ஷனையும் சீர் தூக்கிப் பார்த்து முடிவு செய்ங்க’’

நண்பர் ஒருநாள் வீட்டுக்கு வந்திருந்தார். 

என் மேஜை மேல் கிண்டில் இருந்தது. 




‘’பிரபு! இது என்ன?’’

‘’கிண்டில்’’

‘’அப்படின்னா?’’

‘’நீங்க இதுக்கு முன்னாடி இதைப் பாத்தது இல்லயா?’’

‘’இல்ல. இப்ப தான் பாக்கறன்’’

‘’கேள்விப்பட்டதில்லையா?’’

‘’இல்லை’’

நான் கிண்டில் குறித்து விளக்கினேன். 

‘’நான் உங்க கிட்ட கிண்டில் வாங்குங்கன்னு சொல்ல மாட்டேன். கிண்டில் வாங்கி வச்சுக்க புத்தகம் படிக்கற பழக்கம் இருக்கணும். அதை ஏற்படுத்திக்கங்க. அப்புறமா கிண்டில் வாங்கலாம்’’