Friday 30 July 2021

தினை

இன்று காலையிலிருந்து கடுமையான அலைச்சல். 

இரவு ஒன்பது மணிக்கு ஊருக்குள் நுழைந்ததும் அலைபேசியில் ஒரு அழைப்பு. எண்ணி வைத்தாற் போல் ஒரே ஒரு ரிங் ஆனது. எனது நண்பர் அழைத்திருந்தார். அவர் ஒரு விவசாயி. வெளிநாட்டில் பணி புரிந்து விட்டு சில ஆண்டுகளுக்கு முன்னால் ஊருக்குத் திரும்பி விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது சகோதரர் வெளிநாட்டில் இப்போது பணி புரிகிறார். நான் அவரை அலைபேசி மூலம் அழைத்தேன். அவர் சகஜமாக இல்லை என்பது குரல் மூலம் தெரிந்தது. சாதாரணமாகத்தான் அழைத்தேன் என்று சொன்னார். நான் அவருடைய வீட்டுக்கு வருவதாகச் சொன்னேன். அங்கு சென்றேன்.  

சோர்வான முகத்துடன் இருந்தார். சட்டென தயக்கத்தை உதறி , ‘’பிரபு! இந்த எஸ். எம்.எஸ் ஐ பாருங்கள்’’ எனக் காட்டினார். 

அவரது மகனுக்கு சென்னையில் ஒரு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. 

‘’அண்ணன்! நல்ல விஷயம். காலேஜ் ரொம்ப நல்ல காலேஜ்’’ நான் சொன்னேன். 

‘’முழுக்க படிங்க பிரபு’’

அட்மிஷன் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ. 50,000 செலுத்த வேண்டும். 

‘’இப்ப என் கையில ஒரு ரூபாய் இல்ல பிரபு. போன வாரம் களையெடுப்பு. கையில இருந்த எல்லா பணமும் செலவாயிடுச்சு. நாளைக்குப் பணம் கட்டணும்.’’

நான் நேரத்தைப் பார்த்தேன். இரவு 9.05. 

‘’என்ன அண்ணன்! இப்ப சொல்றீங்க. எஸ். எம். எஸ் எப்ப வந்துச்சு.’’

‘’நேத்து மதியம். மூணு நாளைக்குள்ள கட்டணும். நாளைக்கு லாஸ்ட் டேட்.’’

‘’அமௌண்ட் கொஞ்சம் பெருசு அண்ணன். ஒரு பார்ட் அமௌண்ட் அரேஞ்ச் பண்ணட்டுமா?’’

‘’எனக்கு வேற சோர்ஸ் இல்ல. தம்பி 10 நாள்ல ஃபாரின்ல இருந்து அனுப்பிடுவான்.’’

‘’இப்ப ரொம்ப டைட்டா இருக்கு. நாளைக்கு ஒரு நாள் தான் இருக்குன்னு சொல்றீங்க. அதான் யோசிக்கறன்’’

‘’பையனோட அட்மிஷன் உங்க கையில இருக்கு’’

‘’சரி! பாத்துக்கலான்ணன். நாளைக்கு காலைல பேங்க் டயத்துல பணம் கட்டிடலாம். கவலைப்படாம இருங்க.’’

வீட்டுக்கு வந்து இரவு உணவை உண்டு விட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இன்று நாள் முழுதும் கடுமையான அலைச்சல் என்பதால் சற்று முன் நேரத்திலேயே உறங்கச் செல்லலாம் என எண்ணினேன். புதிதாக ஒரு பொறுப்பு. பொருளியலில் செல்வத்தை இருப்புச் செல்வம், யூகச் செல்வம் என இரண்டாகப் பிரிப்பார்கள். என்னிடம் யூகச் செல்வமே மிகுதி. 

யாரிடம் உதவி கேட்கலாம் என யோசித்தேன். எனக்கு மிக நெருக்கமான ஒரு நண்பனுக்கு ஃபோன் போட்டேன். நண்பனிடம் கடுமையான பணி காரணமாக நான்கு நாட்களாக ஃபோன் பேச முடியவில்லை. 

முதல் ரிங்கில் ஃபோனை எடுத்தான்.

‘’தம்பி நான் உன்கிட்ட ஒரு உதவி கேட்டு ஃபோன் செஞ்சுருக்கன்’’

பொதுவாக நான் நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுவேன். 

‘’சொல்லுங்க அண்ணன்! நாலு நாளா ரொம்ப பிஸியா?’’

‘’ஆமாம்ப்பா. அதாவது’’ என ஆரம்பித்து விஷயத்தைச் சொன்னேன். 

‘’உங்க ஃபிரண்ட்டோட மகன் காலேஜ் அட்மிஷனுக்கு பணம் வேணும். பத்து நாள்ல பணம் ரிடர்ன் ஆயிடும். அதானே அண்ணன்’’

‘’அதான் தம்பி’’

‘’எவ்வளவு அமௌண்ட்?’’

‘’ஃபிஃப்டி தௌசண்ட். நெக் ஆஃப் த மொனெண்ட் ல கேக்கறன் நினைக்காத. என் கவனத்துக்கு இந்த விஷயம் வந்தே 30 நிமிஷம் தான் ஆகுது.’’

‘’நான் நாளைக்கு காலைல நெஃப்ட் செஞ்சிடறன்.’’

‘’பணத்துக்கு நான் பொறுப்பு தம்பி’’

‘’ஓ.கே அண்ணன். நீங்க சொன்னா சரிதான்’’

‘’ரொம்ப நன்றி தம்பி. நீ செஞ்சிருக்கறது ரொம்ப பெரிய உதவி. உனக்கு ரொம்ப பெரிய மனசு’’

‘’இது ரொம்ப சின்ன விஷயம் அண்ணன்!’’

‘’காலத்தினாற் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்’’

ன்னு

திருக்குறள் சொல்லுது தம்பி. நீ செஞ்சிருக்கற உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நான் அமௌண்ட் ரெடி ஆயிடுச்சுன்னு ஃபிரண்ட்க்கு ஃபோன் பண்ணி சொல்லிடறன்.’’

‘’அமௌண்ட் காலைல உங்க கைக்கு வந்ததும் சொல்லுங்க அண்ணன்’’

‘’இல்ல இப்பவே சொல்லிடறன். நைட் நிம்மதியா அவரு தூங்குவாரு.’’

உலகில் தினையும் உண்டு; பனையும் உண்டு என எண்ணிக் கொண்டேன்.