’’இசை மொழி’’ நண்பர் தீவிர கண்ணதாசன் ரசிகர். பல வருடம் திரைப்பாடல்களைக் கேட்டதால் எப்போதும் கண்ணதாசன் கண்ணதாசன் என்பார்.
அவரும் நானும் உரையாடிக் கொண்டிருந்த போது எனக்கும் அவருக்கும் ஒரு சிறு போட்டி. கண்ணதாசனின் பிரபலமான பாடல்களிலிலிருந்து நான் ஒரு வரியைக் கூறுவேன். அது என்ன பாடல் என்று அவர் கூறவேண்டும்.
என்னுடைய தொழிலிலிருந்தே முதல் கேள்வியைத் துவங்கினேன்.
‘’சீட்டுக் கட்டு கணக்காக இங்க வீட்டக் கட்டி இருக்காக’’ என்ற வரியைக் கூறினேன்.
நண்பர் தன் மனதைத் துழாவி துழாவத் துவங்கிய இடத்துக்கே சில வினாடிகளில் வந்து என்னை நோக்கினார்.
‘’மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’’ என்றேன்.
நண்பர் சற்று விழிப்படைந்தார். அடுத்த கேள்வியைக் கேளுங்கள் என்றார்.
‘’பச்சைக் கிளிகள் பறப்பதைக் கண்டால் பருந்துக்குப் பிடிக்காது’’ என்ற வரியை வைத்தேன்.
நண்பருக்கு உதவ அந்த வரியை அப்பாடலில் வரும் ரைமிங்-ஐ கோடி காட்டினேன்.
சில நிமிடங்கள் யோசித்தார்.
தெரியவில்லை என்றார்.
‘’வரவு எட்டணா செலவு பத்தணா’’ என்று துவங்கும் பாடல் என்றேன்.
அடுத்து என்றார்.
அதே படத்தில் இன்னொரு பாடலிலிருந்து ஒரு வரியைச் சொன்னேன்.
’’கையில் உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி’’
‘’நீங்க பாட்டோட ஆரம்பத்துல இருந்து கேட்டா நான் ‘’சட் சட்’’னு பதில் சொல்லிடுவேன்’’
’’அத எல்லாரும் ஓரளவு சொல்லிடுவாங்க. நீங்க நாப்பது வருஷமா தினமும் பாட்டு கேக்கறீங்க. அதனால உங்களுக்கு இதுதான் சரி’’
நண்பர் போட்டியின் விதிமுறைகளை மாற்றி அமைப்பதில் ஆர்வமாக இருந்தார். நான் அவருக்கு ஒரு குளூ கொடுத்தேன். முன்னர் கேட்ட கேள்வியின் படமே தான் இதுவும் என்று.
முட்டி மோதிப் பார்த்து விட்டு அமைதியானார்.
‘’ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே’’ என்று பதில் சொன்னேன்.
நண்பர் ‘’அட இதுவா’’ என்று அசந்து போனார். ‘’உங்களோட பெரிய தொந்தரவு’’ என்றார்.
பாடல் வரியிலேயே ஒரு குளூ தந்து ‘’திருநீலகண்டரின் மனைவி சொன்னது என்னைத் தொடாதே’’ என்றேன்.
நண்பர் தீவிர சைவர் . நீறணியாமல் அவரைக் காணவே முடியாது என்பதால் இதைக் கேட்டேன்.
புத்தர் தன் சீடர் ஒருவரிடம் வானில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன என்று கேட்டார். சீடர் அக்கேள்விக்கு ‘’எனக்குத் தெரியாது’’ என்று பதில் சொன்னார். புத்தர் அச்சீடரிடம் ‘’ஞானப்பாதை உனக்கு உகந்தது; நீ தெரியாததைத் தெரியாது என்று சொல்கிறாய். அது ஒரு முக்கியமான புரிதல். அதன் மூலம் ஞானப்பாதையில் நீ முதல் அடியை எடுத்து வைக்கிறாய்’’ என்றார்.
நான் கேட்ட கேள்விக்கு நண்பரும் ஞானப்பாதையின் முதல் அடியை எடுத்து வைத்தார்.
‘’நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே’’ என்றேன்.
‘’ஓ ! தொடாதே என்ற வார்த்தையை வச்சாவது நான் யூகிச்சு இருக்கணும்’’ என்றார்.
சைவரிடம் வைணவம் தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்போம் என ‘’நாட்டுக்குக் கோயிலைக் கட்டிட ஒருவர் திருடவும் செஞ்சாரு’’ என்றேன்.
நண்பர் அவ்வாறான காரியத்தைச் செய்தது யார் என வினவினார். நான் திருமங்கை ஆழ்வாரின் கதையைச் சொன்னேன். ‘’அப்படியா’’ என்று கேட்டுக் கொண்டார்.
இந்த வரி என்ன பாடலில் வருகிறது என்றார்.
‘’தில்லுமுல்லு தில்லுமுல்லு உள்ளமெல்லாம் கல்லு முள்ளு’’ .
கவிஞர் மகாகவி குறித்து எழுதிய பாடலிலிருந்து ஒரு வரியைச் சொன்னேன்.
‘’வாழ்வென்றும் தாழ்வென்றும் வளம் என்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கிறது; அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது’’ ஒரு வரிக்கு அதிகமாகவே சொன்னேன்.
நண்பர் இப்போதும் ஞானப்பாதையின் முதல் அடியே வைத்தார்.
‘’காலத்தால் அழியாத காவியம் பல தந்த’’ என்று ஆரம்பித்ததும் நண்பர் ஓ ஓ எனத் துடித்தார். ‘’ஜஸ்ட் மிஸ்’’ என்றார்.
‘’படைப்பதனால் என் பேர் இறைவன்’’ என்றேன்.
‘’ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு’’ பாடல். படம் இரத்தத் திலகம். அந்த பாடலை பாடுபவராக அந்த படத்தில் கண்ணதாசனே நடித்திருப்பார் என்றார்.
நான் கை தட்டி ஆரவாரம் செய்து நண்பரை ஊக்கப்படுத்தினேன்.
‘’வில்லொடு கணையும் ஏந்தி நடந்தான் விஜயகுமாரன் அபிமன்யூ’’ என்றேன்.
நண்பர் பதில் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை கொண்டார். அவரது ஆர்வம் எனக்கும் உற்சாகம் தந்தது. நான் அடுத்தடுத்து நிறைய குளூ தந்தேன்.
இது ஒரு தாலாட்டுப் பாடல். இன்னும் சற்று நேரத்தில் கொல்லப்பட இருக்கும் தன் குழந்தைக்கு தாய் பாடும் தாலாட்டு. மீளாத் துயிலில் ஆழப் போகும் குழந்தைக்கு தாய் பாடும் தாலாட்டு. இந்த பாடலில் இரண்டு அன்னைகள் இரண்டு குழந்தைகள் இருப்பார்கள் என்றேன்.
’’மகாதேவி படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். பாடல் நினைவில்லை’’ என்றார்.
‘’மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வது நமது சமுதாயம்’’ என்ற பாடல் என்றேன். இந்த பாடலில் சிறுவன் அபிமன்யூ போர்க்களம் சென்றதும் தன் தந்தையின் ஆசானான துரோணருடன் சமர் செய்ய விரும்பி துரோணர் எங்கே துரோணர் எங்கே என்று தேடுவான். அந்த காட்சியை சிறப்புற சொல்லியிருப்பார் கண்ணதாசன் என்றேன்.
‘’ஆதி வீடு ; அந்தம் காடு’’ என்றதும் வீடு என்ற வார்த்தையினைப் பின் தொடர்ந்து ‘’தெய்வம் தந்த வீடு’’ என பதில் சொல்லி மந்தஹாசம் புரிந்தார்.
‘’நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு; அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று’’ என்றேன்.
வரியை ஓரிரு முறை வாய் விட்டுச் சொல்லிப் பார்த்தார். லேசாக பாடிப் பார்த்தார்.
‘’ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்; இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி’’ என்று கேட்டார் நண்பர்.