Friday 24 September 2021

பரிந்துரை

’’வணிக அங்காடி’’ நண்பன் ஃபோன் செய்தான். 

‘’இன்னைக்கு என்ன பிளான்?’’

‘’கடலூர் பக்கத்துல ஒரு கோயில்ல 150 மரக்கன்னு வேணும்னு கேட்டாங்க. கொண்டு போய் கொடுத்துட்டு வரணும்.’’

‘’நானும் வர்ரேன்’’

‘’ஓ.கே. நீ ஆம்னி ஓட்டுவியா?’’

‘’எல்லா காரும் ஓட்டுவேன்’’

எல்லா காரும் ஓட்டுவதும் என்னுடைய கார் ஓட்டுவதும் ஒரே ரகமானதில்லை என்பது எனக்குத் தெரியும். என் காரை ஓட்டியவர்களுக்குத் தெரியும். இவன் புதிது. 

‘’முதல்ல நாம ஆடுதுறை போகனும். அங்க கவர்மெண்ட் ஃபார்ம் இருக்கு. மரக்கன்னு வாங்கிகிட்டு கடலூர் கிட்ட போகணும்.’’

‘’ரூட் எப்படி?’’

’’ஆடுதுறை - அணைக்கரை - சேத்தியாத்தோப்பு - வடலூர் - கடலூர்’’

‘’ரிடர்ன் எத்தனை மணி ஆகும்?’’

‘’காலைல 10 மணிக்கு கிளம்புனா சாயந்திரம் 5 மணி ஆயிடும்’’

''மதிய சாப்பாடு ?’’

‘’ஆன் தி வே - ல’’

மறுநாள் காலை கார் கண்ணாடிகளைத் துடைத்து வைத்தேன். 

பேருந்து நிலையங்களில் தொலை தூரம் செல்லும் பேருந்துகளின் ஓட்டுனர்கள் கண்ணாடியை முதலில் துணியால் தூசி தட்டி பின் தளும்ப தண்ணீரை ஊற்றி பருத்தித் துணியாலும் பின்னர் செய்தித்தாள் காகிதத்தாலும் துடைப்பார்கள். கண்ணாடி தெளிவாக இருப்பதற்கு. அதைப் போல் நானும் வண்டியைத் தயார் செய்து வைத்தேன். 

நண்பன் வண்டியை ஓட்டத் தொடங்கினான். 

‘’பவர் ஸ்டியரிங்-ல ஓட்டிட்டு மானுவல் ஸ்டியரிங் கொஞ்சம் வித்யாசமா இருக்கு’’

நான் பதில் சொல்லவில்லை. 

’’வண்டி எந்த வருஷ மாடல்’’

‘’2004’’

‘’ரீ - வேல்யூசன் செஞ்சிருக்கணுமே?’’

‘’ரெண்டு வருஷம் முன்னாடி’’

‘’எத்தனை சி சி’’

‘’894’’

‘’என்ஃபீல்டு பைக் 400 சி. சி’’

அதற்கு நான் என்ன செய்ய முடியும் என யோசித்தேன்.  

‘’சூப்பர் மார்க்கெட் ஞாபகமாவே இருக்கு’’

‘’பல வருஷ பழக்கம் இல்லையா. வீ ஆர் ஆல் ஆஃப்டர் ஆல் ஹியூமன் பீயிங்க்ஸ்.’’

‘’மனசு முழுக்க பிஸினஸ் ஞாபகமாவே இருக்கு. என் பிராப்ளத்தை எப்படி சால்வ் பண்றதுன்னு தெரியலை. ஏதாவது வழி சொல்லு’’

‘’ஒரு விஷயம் புரிஞ்சுக்க. லௌகிகம் மனுஷனுக்கு அன்னியமானது இல்ல. நாம எல்லாரும் அந்த கடல்ல தான் இருக்கோம். சில பேர் அதுல மூழ்கிக் கிட்டு இருக்காங்க. சில பேருக்கு அதுல எப்படி மிதக்கணும்னு தெரியுது. சில பேர்ட்ட தோணி இருக்கு. சில பேர்ட்ட கட்டுமரம் இருக்கு. சிலர்ட்ட கப்பல் இருக்கு. அவ்வளவு தான் வித்யாசம். அலை அடிக்கற கடல் மாதிரி லௌகிக வாழ்க்கை. எப்ப வேணாலும் புயல் அடிக்கும். மழை பெய்யும். பெரிய அலை வரும். சம்சார சாகரம். ‘’

’’நிறைய பணம் இருக்கு. ஆனா சந்தோஷம் இல்லை’’

‘’பணம் நிறைய இருக்கறது நல்ல விஷயம் தான். அத நினைச்சு கவலைப்படத் தேவையில்லை. நூறு ரூபா சம்பாதிச்சா ஒரு ரூபாய் தானம் பண்ணு. அது கொடுக்கற நிம்மதி ரொம்ப பெரிசு’’

‘’என்ன செய்யணும் எப்படி செய்யணும்னு எனக்கு ஒன்னும் தெரியலையே’’

‘’உனக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3000 ரூபாய் லாபம் இருக்குமா?’’

‘’இருக்கும்’’

‘’அதுல 30 ரூபாயை மட்டும் தானத்துக்குன்னு எடுத்து வச்சுடு. வருஷத்துக்கு 11,000 ரூபாய் வரும். அத வச்சு எவ்வளவோ நல்ல காரியம் செய்யலாம்’’

‘’எது எது நல்ல காரியம்? இப்ப 11,000 ரூபா கையில இருந்தா என்ன செய்யலாம்?’’

‘’இது தீபாவளி சீசன். கையில 11,000 ரூபாயோட ஒரு ஸ்வீட் கடைக்குப் போ. ஒரு கிலோ ஸ்பெஷல் ஸ்வீட் 400 ரூபாய் இருக்கும். 25 கிலோ ஸ்வீட் ஆர்டர் பண்ணு.  கால் கிலோ பாக்கெட்டா 100  பேக் பண்ணி வாங்கிக்க. 100 ஆட்டோ எப்பவும் நிக்கற ஆட்டோ ஸ்டாண்டுக்கு போ. அங்க உள்ள எல்லா ஆட்டோ டிரைவருக்கும் கொடு.’’

நண்பன் அந்த காட்சியை மனதில் பார்த்தான். 

நான் தொடர்ந்து சொன்னேன். ‘’அத்தனை பேருமே அவங்க வீட்டுக்கு எடுத்துட்டு போயி ஃபேமிலி மெம்பர்ஸுக்குக் கொடுப்பாங்க. அதுல சின்ன குழந்தைகள் இருக்கும். வயசான பெரியவங்க இருப்பாங்க. அவங்க ஸ்வீட் எடுத்துக்கற போது உணர்ர கண நேர இனிமை எவ்வளவு அபூர்வமானது. அது எத்தனை நெகிழ்வை நம்பிக்கையை கொடுக்கும் தெரியுமா?’’




நண்பன் உண்மைதான் என ஆமோதித்தான்.