Wednesday, 6 October 2021

இந்திய வழி

 

{நூல் : இந்திய வழி - நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்  ஆசிரியர் : எஸ். ஜெய்சங்கர்  வெளியீடு : தி இந்து தமிழ் திசை  விலை : ரூ. 350}  

ராஜதந்திரிகளின் நூல்களை நான் ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. அவர்களுடைய தொழிலும் வாழ்க்கைமுறையும் சொற்களின் மேல் ’’இரட்டைத் தாழ்ப்பாள்’’  போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கக் கூடியவை. எனினும் பேசியாக வேண்டிய இடத்தில் பேசியாக வேண்டும். செயல்பட வேண்டிய இடத்தில் கட்டாயம் செயல்பட்டாக வேண்டும். சொல்லின் செயலின் நற்பலன்களை எப்போதுமே அளிக்க வேண்டும். விருந்துகள் , மாநாடுகள் என்பவை அவர்கள் வாழ்வின் மேல்பக்கம் என்றால் தேசங்களின் உறவுகள் என்னும் எரிமலை அவர்களுக்கு அடியில் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் தங்கள் அனுபவங்களை முழுமையாக எழுதிட முடியாது. இன்னொரு நபரிடம் சொல்லப்படாது - பகிரப்படாது என்ற உறுதிமொழியுடன் அவர்கள் ஆற்றிய செயல்கள் மிகுதி இருக்கும். இருப்பினும் பல ராஜதந்திரிகள் தங்கள் அனுபவங்களை சுவாரசியமாகவே எழுதியிருக்கின்றனர். ராணுவ, உளவு அதிகாரிகளின் அனுபவங்கள் அளிக்கும் சுவாரசிய வாசக அனுபவத்தினும் மேலான வாசிப்பு அனுபவத்தை அளித்த ராஜதந்திரிகளும் உண்டு. 

’’இந்திய வழி’’ நூல் முற்றிலும் வேறுபட்டது. உலக அரசியல் பலவிதமான மாற்றங்களை இப்போது அடைந்திருக்கிறது. எனவே ராஜதந்திர அணுகுமுறைகளும் மாற்றம் கொண்டுள்ளன. ராஜதந்திரியான ஜெய்சங்கர் அவர்கள் இப்போது வெளியுறவுத் துறையின் அமைச்சராகவும் இருப்பதால் வெளிநாடுகள் - உள்நாடு என எந்த விஷயத்தையும் இணைத்துப் பார்த்து இருபுறமும் செயல்களை முன்னெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். முன்னெடுக்கவும் செய்கிறார். 

உலகம் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட பின்னர், ஒரு குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்த மக்களின் பழக்கங்கள் , தேவைகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு உலகின் வேறு ஏதோ பகுதியில் இருக்கும் பிரதேசம் தனது உற்பத்தியை வடிவமைத்துக் கொள்கிறது. இந்த நிலையில் பொருளாதாரமே யுத்தத்தின் மிகப் பிரதானமான இடத்தை வகிக்கிறது. முன்னர் பல நூற்றாண்டுகளாக இப்படி இருந்திருக்கிறது என்றாலும் முன்னர் உள்ள நிலைமைக்கும் இப்போது உள்ள நிலைமைக்கும் வேறுபாடு உண்டு. பொருளாதாரம் இன்று பல போர்களை நிகழ சாத்தியமில்லாமல் ஆக்கி விடுகின்றன. வேறொரு விதத்தில் சொன்னால் இனி வணிகப் போர்களே போருக்கான களத்தை அமைக்கும். 

இந்தியாவில் நடக்கும் மாற்றங்கள் இன்று உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவின் - இந்தியர்களின் நுகர்வு எவ்விதத்தில் இருக்கிறது என்பது சர்வதேச வணிகத்தின் முக்கிய காரணியாகத் திகழ்கிறது. உதாரணத்துக்கு, இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் எனில் வளைகுடா நாடுகள் அதனால் நேரடியாக பாதிக்கப்படும். மின்சார வாகனங்களுக்கான பாகங்களை நாமே உற்பத்தி செய்வோமாயின் அன்னியச் செலாவணி நமக்கு பெரும் மிச்சமாகும். சர்வதேச சந்தையை பாதிக்கும் இச்செயல் இந்தியர்களின் நுகர்வு பழக்கத்தில் இருக்கிறது. 

இந்நூலில் ஆசிரியர், வாய்ப்பு உள்ள இடங்களில் இணைந்து செயல்படுவது மோத வேண்டிய இடங்களில் மோதிக் கொள்வது என்பதே இன்றைய உலகின் ராஜதந்திரமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார். 

மும்பை நகரம் பாகிஸ்தானால் ஏவப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட  போது இந்தியா பதிலடி கொடுக்காமல் அமைதி காத்தது சாமானிய இந்தியர்களின் மனநிலையை சுக்குநூறாக்கியது.  யூரி - பதான்கோட் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி ‘’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’’ ஆக இருந்தது. தன் பணியைச் செய்ய இந்திய ராணுவம் எந்த எல்லை வரையும் செல்லும் என்ற உறுதியான தகவல் உலகுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களையும் சுட்டிக்காட்டி மாறியிருக்கும் இந்திய அணுகுமுறையை குறிப்பிடுகிறார் ஆசிரியர். 

இந்திய ஒற்றுமை என்பது சர்வதேச அரங்கில் இந்தியா முதன்மை பெற முக்கியமான தேவை என்பதை எடுத்துரைக்கும் ஆசிரியர் இந்திய ஒற்றுமையைக் குலைக்க கருத்தியல் தளத்தில் செயல்படும் சக்திகளை - அவர்களுக்குப் பின்னால் இருக்கும் நாடுகளை - இந்தியர்கள் அடையாளம் காண்பது நலம் பயக்கும் எனக் கருதுகிறார்.  

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவின் ராஜீய உறவுகளை பலகட்டங்களாகப் பிரித்து தன் அபிப்ராயங்களைத் தெரிவித்திருக்கிறார். சர்வதேச உறவுகளையும் சர்வதேச வணிகத்தையும் நாடுகளின் சமூகவியலையும் குறித்து சாமானிய வாசகனுக்கும் தெளிவாக விளங்கும்படி எழுதப்பட்ட நூல்.