இன்று காலை எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன்.
இங்கேயிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு ஊரைக் குறிப்பிட்டு அங்கே உள்ள சிவாலயத்துக்குச் சென்று வருவோமா என்று கேட்டேன்.
நண்பர் ‘’சரி’’ என்றார்.
ஒரு சிறு கிராமம். சிறியதாய் ஒரு திருக்குளம் கோவிலுக்கு எதிரில். கோவில் அர்ச்சகரும் சிப்பந்தி ஒருவரும் மட்டுமே நாங்கள் சென்ற நேரத்தில் இருந்தனர். அர்ச்சகர் சுவாமிக்கு பிரசாதத்தை நிவேதனம் செய்து கொண்டிருந்தார். சிப்பந்தி மலர்மாலை கட்டிக் கொண்டிருந்தார். ஏகாந்தமான சூழ்நிலை நிறைந்திருக்க சிவனை வணங்கினோம்.
புறப்படும் போது நண்பர் சொன்னார் : ‘’நமக்கு கிடைச்ச தரிசனம் இன்னும் பல பேருக்கு கிடைக்கணும் பிரபு’’
அவர் உணர்ச்சிகரமாயிருக்கிறார் எனப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தேன்.
’’இந்த ரூட் டூரிஸ்ட் அதிகம் பயன்படுத்தற ரூட். அவங்களுக்கு இங்க இப்படி ஒரு கோயில் இருக்குன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. எதிரே இருக்கற பகுதியை ஒரு நந்தவனம் மாதிரி ரெடி பண்ணோம்னா இன்னும் நிறைய பேர் தினமும் வருவாங்க’’
’’செஞ்சிருவோம் அண்ணன்.’’
’’காவிரி போற்றுதும் - நிறைநிலவுச் சந்திப்பு’’க்கு ஒரு மாதத்துக்கான திட்டம் கிடைத்தது என்று எண்ணினேன்.
‘’அப்படியே கோயிலோட சிறப்பை எடுத்துச் சொல்ற மாதிரி ஒரு போர்டு வைப்போம். ஃபிளக்ஸ்ல இல்லாம ஆண்டிக் அண்ட் டிரடிஷனல் லுக் இருக்கற மாதிரி செஞ்சு வைப்போம் அண்ணன்’’ என்றேன் நான்.