Tuesday 1 February 2022

விழிப்பு

தமிழ்ச் சமூகத்தில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தது உண்டு. இங்கே சமூகம் சார்ந்தோ பொருளியல் சார்ந்தோ சட்ட்ம் சார்ந்தோ பரவலான விழிப்புணர்வு கிடையாது ; அதன் விரிவாக்கமாக இவை சார்ந்து பெரும் அறியாமை மட்டுமே நிலவுகிறது. சராசரி தமிழ் மனம் தான் அரசியல் பிரக்ஞை கொண்டிருப்பதாக எண்ணுகிறது. ஆனால் அரசியல் பிரக்ஞையின் அடிப்படையான பாடம் என்பது அதிகார அமைப்பு சமூகத்தில் எவ்விதம் நிலை கொண்டுள்ளது என அறிந்திருப்பதே தவிர அரசியல் கட்சிகளின் பின்னால் செல்வது அல்ல என்பதை உணர்ந்திருப்பது.

சட்டமன்றம், அதிகார வர்க்கம், நீதித்துறை என்பது இந்திய அரசியலின் அடிப்படையான கட்டுமானங்கள். அதில் அதிகார வர்க்கமே பெரும் அதிகாரம் கொண்டது. அரசியல்வாதிகள் ஐந்து ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருப்பார்கள். அரசு அதிகாரிகளே முப்பது ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிப்பவர்கள். நீதித்துறையின் அதிகாரம் நுட்பமானது ; ஆனால் மிக உறுதியானது. 

தமிழ்நாட்டில், தமிழ் மக்கள் சட்டமன்றம் மூலம் நிகழும் செயல்பாடுகளே அரசின் செயல்பாடுகள் என எண்ணுகிறார்கள். இது பொதுவான மக்களின் புரிதல். ஆனால் எந்த அரசுக்கும் முழு முற்றான அதிகாரம் இல்லை. எந்த அதிகாரிக்கும் கூட முழு முற்றான அதிகாரம் இல்லை. அவர்கள் அனைவரும் நீதித்துறைக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள். சட்டத்தைத் தாண்டி செயல்பட்டால் நீதித்துறையால் தண்டிக்கப்படக் கூடியவர்கள். 

மக்களிடம் சட்டம் குறித்து குறைந்தபட்ச விழுப்புணர்வு உண்டானால் கூட அரசு இயங்கும் முறையில் பெரும் மாற்றங்கள் இயல்பாக நடக்கத் துவங்கும். குடிமக்கள் தங்கள் பல தேவைகளை சட்டபூர்வமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். நீதிமன்றத்தில் தான் சட்டம் செல்லுபடியாகும் என்றல்ல எல்லா அலுவலகங்களிலுமே சட்டத்தின் படி மட்டுமே அதிகாரிகளால் செயல்பட முடியும். இதனைக் கூறும் போது, என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்படும். எல்லா இடத்திலும் சட்ட மீறல் இயல்பாக பழகியிருக்கிறதே என்பதே. அதற்கு நான் அளிக்கும் பதில் சட்டம் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கும் சமூகத்தில் சட்ட மீறல் இயல்பாக நடக்கும். ஏனென்றால் மீறலை நிகழ்த்துபவர்களுக்கு நன்றாகத் தெரியும் இதனால் பாதிக்கப்படும் யாருக்கும் சட்டம் தெரியாது என. 

சமீபத்தில் ஒரு நண்பர் தனது நிலத்தில் தேக்கு பயிரிட விரும்பினார். ஆனால் அவருக்கு அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டுமா என்று ஐயம். உங்கள் நிலத்தில் நீங்கள் மரம் வளர்க்க அரசாங்க அனுமதி எதற்கு என்று கேட்டேன். அவர் ஐயம் தீரவேயில்லை. இப்போது அனுமதி பெறாமல் வைத்து விட்டால் பல ஆண்டுகள் கழித்து வெட்டும் போது சிக்கலாகி விடுமா என்ற அச்சம் அவருக்கு. அவ்வாறெல்லாம் ஆகாது என்பதை விளக்கினேன். முதலில் தேக்கு மரம் நடுங்கள். பின்னர் அந்த விபரத்தை ஒரு கடிதம் மூலமாக கிராம நிர்வாக அலுவலருக்குத் தெரிவித்து ‘’அடங்கல்’’ என்ற நில ஆவணத்தில் அதனைப் பதிவு செய்து வாங்கிக் கொள்ளுங்கள். அது ஒரு மிகப் பழைய முறை. அவ்வாறு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்றேன். 

சமீபத்தில் இன்னொரு நண்பர் தனது வயலில் மின் கம்பிகள் தொடர்ந்து திருடு போவதாக காவல்துறையிடம் புகார் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் வயதான விவசாயி . எண்பது வயதானவர். ஊக்கத்துடன் விவசாயம் செய்கிறார். மின்கம்பிகள் திருடு போனதால் வயலில் உள்ள நெற்பயிருக்கு நீர் பாய்ச்ச முடியாத நிலை. மாற்று ஏற்பாடு செய்தார். காவல் நிலையம் செல்ல என்னையும் அழைத்தார். உடன் சென்றேன். புகாரை பெற்றுக் கொண்டனர். புகார் பெற்றுக் கொண்டதற்கு ஒப்புகை தருமாறு கேட்டோம். இடத்துக்கு நேரில் வந்து விசாரிப்பதாகக் கூறினார்கள். வந்து விட்டோம். ஒரு மாதம் ஆனது. எந்த விசாரணையும் இல்லை. பின்னர் நண்பர் புகாரை காவல்துறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பி விட்டார். இது நிகழ்ந்த பின் காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து விட்டு சென்றனர். 

பதவியேற்பின் போது, ‘’இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பால் மாறாப் பற்று கொண்டிருப்பேன்’’ என்றே அனைவரும் பதவியேற்கிறார்கள். சட்டத்தின் ஆட்சி என்பதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதுமே மக்களாட்சியின் மாண்பு. அது விழிப்புணர்வு கொண்ட சமூகத்தில் மட்டுமே நிகழ முடியும்.