Wednesday, 2 February 2022

இசைவும் மாற்றும்

காந்திய வழிமுறைகள் பலவற்றில் முக்கியமான ஒன்று மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்களிடமும் தொடர்ச்சியான உரையாடலில் இருப்பது. காந்தி பிரிட்டிஷாரை எதிர்த்தார். எதிர்த்தவாறே அவர்களுடன் உரையாடலிலும் இருந்தார். மனிதத்தன்மையின் எல்லையை மீறி பிரிட்டிஷார் நடந்து கொண்ட போது கூட பிரிட்டிஷ் அமைப்புடன் தொடர்ச்சியான உரையாடலில் இருந்தார். மனிதர்கள் திரண்டிருக்கும் எந்த ஒரு அமைப்புமே முழு எந்திரமாக ஆகி விடுவதில்லை என்பதையும் அதன் ஒரு மிகச் சிறு பகுதியேனும் மனிதத் தன்மை கொண்டிருக்கும் என்பதையும் காந்தி நம்பினார். பிரிட்டிஷ் அரசின் வைஸ்ராய்கள், பிரதமர்கள், கட்சித் தலைவர்கள் என அனைவரிடமும் தனிப்பட்ட கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். பிரிட்டிஷ் அரசில் பலர் காந்திக்கு தனிப்பட்ட நண்பர்களாக இருந்துள்ளனர். 

இன்று தமிழ்நாட்டின் சாமானிய அரசியல் பிரக்ஞை அரசமைப்பு என்பதை எதிர்மறைத் தன்மையுடனே அணுகுகிறது. அரசாங்கம் என்பது மிகப் பெரிய அமைப்பு. இலட்சக்கணக்கான மனிதர்களால் ஆனது. கோடிக்கணக்கான மனிதர்களால் ஏற்கப்படுவது. மக்களாட்சியில் அரசாங்கத்துக்கும் பொது மக்களுக்குமான பொது அம்சம் என்பது எந்த சட்டம் பொது மக்களை வழிமுறைப்படுத்துகிறதோ அதே சட்டம் தான் அரசாங்கத்தையும் வழிமுறைப்படுத்துகிறது என்பதே. ஒரு பெரிய அமைப்பு செயல்படும் போது நிச்சயம் பலவிதமான அபிப்ராயங்களும் அபிப்ராய பேதங்களும் உருவாகும். இது இயல்பானது. ஊழல் மிகப் பெரிய சிக்கல். அதிகார அமைப்பின் மனத்தில் ஊழலை நிலைபெறச் செய்து விட்டு நம் நாட்டை விட்டு அகன்றிருக்கிறது பிரிட்டிஷ் ஆட்சி. சாமானிய மக்கள் ஒட்டு மொத்த அரசமைப்பையும் ஊழல் மிக்கதாக நினைக்கிறார்கள். அது பகுதி உண்மை ; முழு உண்மை அல்ல. அரசமைப்பில் இருக்கும் ஊழலைக் களைய அரசாங்கத்துக்குள்ளேயே பல்வேறு அமைப்புகள் உள்ளன. அவை தங்கள் கவனத்துக்கு வரும் விஷயங்களில் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் செய்கின்றன.  மனித உரிமைகள் ஆணையம், சென்ட்ரல் விஜிலென்ஸ், கணக்குத் தணிக்கை அமைப்புகள் ஆகியவையும் அரசாங்கத்தின் பகுதிகளே. அவை குறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. 

அரசு அலுவலகங்களுக்குச் செல்ல நேரிடும் போது அவற்றின் சட்ட திட்டங்கள் குறித்த அறிதலோடு செல்கிறேன். அங்கே நிகழ வேண்டிய செயல்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை சரிபார்க்கிறேன். அவ்வாறு நிகழவில்லை என்றால் அதனை நிகழ்த்துவதற்கு அதனை எங்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு கொண்டு செல்கிறேன். 

அரசு அலுவலகங்களில் மூன்று மணி நேரத்தில் நடக்க வேண்டிய வேலையைச் செய்ய மூன்று மாதங்கள் கூட ஆக்குகிறார்கள் என்பது உண்மை. இந்நிலை மாற வேண்டும் என்ற கரிசனம் கொண்டவர்கள் அதிகார அமைப்பை வேலை செய்ய வைக்க அதற்குள் இருக்கும் உயர் அமைப்புகளின் உதவியையும் துணையையும் கொண்டும் செயல்பட வேண்டும். 

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. என் நண்பர் ஒருவர் வெளிநாட்டில் இருந்தார். அவரது அம்மாவின் பெயரில் மனை வாங்க விரும்பினார். நில உரிமையாளருக்கு அவருடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தச் சொன்னேன். பத்திரப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு நண்பருக்கு உதவினேன். பத்திரப் பதிவு அலுவல்கம் சென்ற போது அங்கு எழுதப்பட்டிருந்த விதிகளைப் பார்த்தேன். அதில் பத்திரம் முத்திரைத் தாளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற விதியைப் பார்த்தேன். எனது நண்பரின் பத்திரத்தை சாதாரணத் தாளில் உருவாக்கி முத்திரைக் கட்டணத்தை வங்கி வரைவோலையாக செலுத்தி விட்டேன். பத்திரப் பதிவு இனிதே நடந்தது. இதனால் ஆயிரம் ரூபாய் மிச்சம். 

அன்று அது பத்திரப் பதிவு அலுவலகத்தாலும் நிலம் விற்பவராலும் பத்திரம் எழுதுபவராலும் நூதனமாகப் பார்க்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து அரசு  பதிவுக் கட்டணத்தை முழுமையாக இணையம் மூலம் செலுத்த வேண்டும் என்றும் முத்திரைக் கட்டணத்தை இணையம் மூலமாகவோ அல்லது முத்திரைத்தாளாகவோ செலுத்தலாம் என்ற  நடைமுறையைக் கொண்டு வந்தது.