Thursday, 3 February 2022

அன்பில்


நேற்று அன்பில் ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயங்களை திவ்யதேசங்கள் என்று கூறுவர். அவை மொத்தம் 108. பூமியில் உள்ளவை 106. மற்ற இரண்டும் பரமபதம் மற்றும் வைகுண்டம். அவை விண்ணுலகில் உள்ளன என ஐதீகம். புவியில் இருக்கும் 106 திவ்யதேசங்களையும் சேவித்தவர்கள் விண்ணுலகில் இருக்கும் பரமபதத்துக்கும் வைகுண்டத்துக்கும் சென்று பெருமாள் திருவடி நிழலை அடைவார்கள் என்பது ஐதீகம். 

இந்த 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டு திவ்ய தேசம் 40 . நடுநாட்டு திவ்யதேசம் 2. தொண்டை நாட்டு திவ்ய தேசம் 22. பாண்டிய நாட்டு திவ்ய தேசம் 18. மலைநாட்டில் 13ம் வடநாட்டில் 11ம் உள்ளன. 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த திவ்ய தேசங்கள் அனைத்தையும் சேவிக்க வேண்டும் என்று. அதற்கான செயல்களைத் துவக்கினேன். ஒரு மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் நாளைக்கு ஒரு கோயில் என முப்பது திவ்யதேசங்களை சேவித்தேன். ஒரு நாளைக்கு ஒரு ஆலயம் மட்டுமே செல்வேன். அங்கே அதிக நேரம் இருப்பேன். அருகிலேயே இன்னொரு ஆலயம் இருந்தால் கூட அடுத்த நாள் தான் வருவேன். இவ்வாறான ஒரு பயணத்தை மேற்கொண்டது தமிழ்ப்  பண்பாட்டை அறிந்து கொள்ள உணர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்தது. 

நடுநாட்டு திவ்ய தேசம் எண்ணிக்கையில் இரண்டு மட்டுமே. அவை கடலூர் அருகில் உள்ள திருவஹீந்திரபுரம் மற்றும் விழுப்புரம் அருகில் உள்ள திருக்கோவிலூர். திருவஹீந்திரபுரம் சென்று பெருமாளை சேவித்து விட்டு வந்தேன். அதன் பின் சில காலம் கழித்தே திருக்கோவிலூர் சென்று வந்தேன். 

சோழ நாடு என்பது காவிரிப்பூம்பட்டினம் தொடங்கி திருவரங்கம் வரை உள்ளது. என் இருப்பிடம் சோழ நாட்டில் என்பதால் அந்த ஆலயங்களை ஓரளவு நிறைவு செய்தேன். இதுவரை ஐம்பது ஆலயங்களுக்கு மேல் சென்றிருப்பேன். ஆலயங்களில் தெய்வத்தை வணங்கி விட்டு அதன் கற்தரையில் கண் மூடி அமர்ந்திருப்பேன். ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ஒரு மரபு. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் மரபை தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு தலம். எவ்வளவு அதிகமான நேரம் அங்கே இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருப்பேன். அந்த இடத்துக்கு எத்தனையோ மஹானுபாவர்கள் வந்திருப்பார்கள். அவர்களின் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது அத்தலம். 

காஞ்சிபுரத்தில் உள்ள எனது நண்பர் ஒருவர் காஞ்சிக்கு அருகில் உள்ள திவ்யதேசங்களை சேவிக்க வருமாறு அழைத்துக் கொண்டிருக்கிறார். அங்கே சென்றால் தொண்டை நாட்டு திவ்ய தேசங்களை சேவிக்க முடியும். நேரமும் காலமும் கூடி வர வேண்டும். 

தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் உள்ள ஆலயங்களை வாரத்துக்கு ஒன்று என்ற கணக்கில் சேவித்தாலே ஓராண்டில் கணிசமான ஆலயங்களை சேவித்து விட முடியும். 

சுப்பு ரெட்டியார் என்ற தமிழ் அறிஞர் அனைத்து வைணவ திவ்ய தேசங்களையும் சேவித்து அது குறித்து பயணக் கட்டுரை எழுதியுள்ளார். தமிழின் மிக முக்கியமான பயண நூல்கள் அவை. 

நேற்று திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற திவ்யதேசத்திற்கு சென்று பெருமாளை சேவித்தேன். சிறிய ஆலயம். பெருமாள் சயன திருக்கோலம். ஒரு குழந்தையைப் போல படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். திருவரங்கப் பெருமாளை நினைவுபடுத்தும் முகம். பெருமாளுக்கு சுந்தரராஜன் என்று பெயர். அழகின் அரசன். அழகின் தலைவன். அதில் எந்த ஐயமும் இல்லை. 

நாகப்பட்டினத்தில் பெருமாளின் நாமம் சௌந்திரராஜன். திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜன். அழகர் கோவில் கள்ளழகர் பெயரும் சுந்தரராஜனே. 

கொள்ளிடத்தின் வடகரையாக திருச்சி மாவட்டமும் தென்கரையாக தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளது. ஒரு மைல் அகலம் கொண்ட கொள்ளிடத்தைக் கடந்தால் ஆற்றின் இருகரைகளிலும் இருப்பவர்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் வர முடியும். ஆலயத்தில் இருந்த மூத்த குடிமக்கள் தங்கள் இளம் வயதில் ஆற்றின் தென் கரையிலிருந்து வடகரையான அன்பிலுக்கு வந்து பள்ளியில் படிக்கும் தங்கள் நண்பர்கள் குறித்து நினைவு கூர்ந்தார்கள். 

அன்பில் சென்று பெருமாளை சேவித்து விட்டு வந்தது மீண்டும் திவ்ய தேசப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது.