Friday 27 May 2022

நல்வரவு 42

வாழ்க்கையில் ஆயிரம் பிறைகளைக் காணுதலை சிறப்பான ஒன்றாகக் கருதுகிறது இந்திய மரபு. 84 ஆண்டுகள். அதனை ஒரு நிறைவாழ்வு என மதிப்பிடுகிறது. இயற்கையின் சுழற்சியுடன் ஏதேனும் ஒரு விதமான ஒத்திசைவு இருப்பதின் விளைவாக ஒரு ஜீவன் எண்பத்து மூன்று வயதினை வந்தடைவதாக மதிப்பிடுகிறது நம் மரபு. வாழ்க்கையில் எத்தனையோ சுக துக்கங்கள், மான அவமானங்கள், வெற்றி தோல்விகளை இத்தனை ஆண்டுகளைக் கடக்கும் போது ஒரு ஜீவன் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும் என்பதால் ஒரு பக்குவம் கை கூடும் நிலையாக அந்நிலை அமையக் கூடும் என நம் மரபு எண்ணுகிறது. பிரம்மச்சர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என வாழ்க்கையை நான்கு விதமான பருவங்களாக நம் முன்னோர் தொகுத்துள்ளனர்.  சந்நியாசம் லட்சத்தில் ஒருவருக்கே உரியது. மற்ற மூன்று தொகுப்புகளே சாமானியர்களுக்கு இயல்வது. விருப்பு வெறுப்புகளால் ஆனது நம் மனம். உறவுச் சங்கிலிகளில் சிக்கிக் கிடப்பது அதன் இயல்பு. விழைவு அதன் இயங்குமுறை. விருப்பு வெறுப்புகளாலும் உறவுகளாலும் விழைவாலும் பிரக்ஞையின்றி துக்கத்தில் தோய்கின்றன மனித மனங்கள். துக்கம் என்பதை யாவரும் உணரும் அடிப்படை உணர்வாக புத்தர் பார்த்தார். துக்கம் , துக்கத்திற்கான காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என நான்கு அடிப்படை உண்மைகளை புத்தர் மானுடர்க்கு போதித்தார். மானுடன் தனது சமூக அடையாளங்களை ‘’தான்’’ என எண்ணுகிறான். அந்த அடையாளங்களுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கிறான். எல்லா மானுடரும் ஒவ்வொரு விதத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருப்பதால் ஒருவருக்கொருவர் பூசல் உண்டாகிறது. பூசல் வன்முறைக்கு இட்டுச் செல்கிறது. ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் அவர்களால் முழுமையாக உணரப்பட்டதில்லை. அவர்களுக்கு முழுமையான அனுபவம் ஆனதில்லை. இவையே மானுடன் கொள்ளும் துக்கத்திற்கான காரணங்கள். இந்த துக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் பொருள் மீதான பற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். சமூக அடையாளங்களின் எல்லைகளை உணர்ந்திருக்க வேண்டும். இதனையே துக்க நிவாரணம் என்கிறார். துக்கம் என்பதை முழுமையாக உணர்ந்து அதனை ஒரு கற்பிதம் எனப் புரிந்து கொண்டு இனி வாழ்வில் ஒரு கணமும் எதற்காகவும் துக்கம் கொள்வதில்லை என முடிவெடுப்பவர்களுக்கு துக்க நிவாரண மார்க்கம் என்ன என்பதை புத்தர் சொல்கிறார். புத்தர் மானுடர் உலகியல் வாழ்வை புறக்கணிக்க வேண்டும் என்று கூறியவர் அல்ல. ஆக சாத்தியமான மேலான உலக வாழ்க்கையை வாழும் படி கூறியவரே. உயிர்களை நேசித்தலையும் இயற்கையுடன் இயைந்து வாழ்வதையும் ஆன்ம விடுதலை அளிக்கும் சாதனமாகக் கண்டது பௌத்தம். 

இந்த ஆண்டு 42 வயதினை எட்ட இருக்கிறேன். யோக மரபில் 33, 42, 60 ஆகிய அகவைகள் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. ’’யோகம் என்பது மனச்செயல் நிறுத்தம்’’ என்ற முதல் வரியுடன் துவங்குகிறது பதஞ்சலியின் யோக சூத்திரம். மனத்தை - மனத்தின் எண்ணங்களை - ஓயாத ஓட்டத்தை மனச்செயல் என வகுத்துக் கொள்கிறது யோக சூத்திரம். மனம் ஒரே விதமான இயங்குமுறையில் படிந்து இருப்பது. அது தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் வழிகளில் பிரதானமானது அது. ஒரு எந்திரம் தொடர் இயக்கத்தின் விளைவாக சற்று மாறுபடும் தன்மை கொள்வது போல மனம் 33, 42, 60 ஆகிய அகவைகளில் இயற்கையாகவே மாறுதலுக்குள்ளாகக் கூடியது. அந்த மாறுதலை பிரக்ஞையுடன் அணுகினால் அதன் பயன்கள் பெரிதினும் பெரிதானதாக அற்புதமானதாக இருக்கக் கூடும். 

என் அகத்தில் எப்போதும் ஒரு சிறுவன் இருக்கிறான். அவன் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பவன். தோல்விகளால் துவளாதவன். புதிது புதிதாக ஏதேனும் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புபவன். சாகசங்களில் ஆர்வம் கொண்டவன். ஒரு மேலான உலகத்தைக் கண்டு விட வேண்டும் என்ற உறுதி கொண்டிருப்பவன். கற்பனைகளில் மிதப்பவன். கற்பனைகளே மானுட வாழ்வை மேலான நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது என உணர்ந்தவன். அவனுக்கு நிறைய நூல்களை வாசிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது. நிறைய பயணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பாதையில் எதிர்ப்படும் தடைகளை உடைத்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்ற துடிப்பு கொண்டவன். அவனது சாகச உணர்வும், கற்பனையும், ஆர்வமும், துடிப்புமே எனது வாழ்வின் சாரமான அனுபவமாக உள்ளன. 

42 வயதை வரவேற்கும் விதமாக ஒரு மாரத்தான் ஓட்டம் ஓட வேண்டும் என்ற விருப்பம் இன்று உண்டானது. மாரத்தான் ஓட்டம் 42 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. 42 கிலோ மீட்டர் தூரத்தை ஓடிக் கடப்பது உடலளவிலும் மனதளவிலும் ஒரு நல்லனுபவமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. 

எளிய பயிற்சி முறை ஒன்றை பின்பற்றலாம் என உள்ளேன். நூறு நாட்கள் பயிற்சி அது. கொஞ்சம் கொஞ்சமாக இலக்கினைக் கூட்டிக் கொண்டு செல்வது. இன்று முதல் நாள் பயிற்சியைத் துவங்கினேன். எந்த ஒரு நீண்ட நெடிய பயணமும் சிறிய உறுதியான முதல் அடியிலிருந்தே தொடங்குகிறது.