Thursday 26 May 2022

ஐந்து பெயர்கள்

பஞ்சாபிகளுக்கும் மலையாளிகளுக்கும் ஒரு பழக்கம் உண்டு. அவர்கள் தங்கள் பெயருடன் ஊரின் பெயரையும் சேர்த்துக் கொள்வார்கள். வட இந்தியாவில் சில பகுதிகளிலும் பெயருடன் ஊர்ப் பெயரை இணைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அங்கே சிலர் தங்கள் தொழிலை பின்னொட்டாக வைத்துக் கொள்ளும் நடைமுறையைக் கைக்கொள்வார்கள். ராஜேஷ் பைலட், விஜய் மெர்ச்சண்ட் ஆகியவை எடுத்துக்காட்டுகள். 

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல்  ஊரின் பெயரை மயிலாடுதுறை என்றே கூறி வருகிறேன். எனினும்  ஊருக்கு ஒரு கணக்கில் ஐந்து பெயர்கள் இருக்கின்றன. அவை ஐந்தும் ஊருடன் பலவிதத்திலும் இணைந்தவை. ஊரின் நடுவில் மிகப் பெரிய சிவாலயம் உள்ளது. சோழர் காலத்திய ஆலயம். நாயக்கர்களால் கட்டப்பட்ட கோபுரத்தை உடையது.  அம்பிகை மயில் வடிவத்தில் சிவனை பூசனை செய்த தலம் என்பது ஊரின் தலபுராணம். அதனால் கௌரி மாயூரம் என்பது ஊரின் பெயர். சிவனின் பெயர் மாயூரநாதர் அதனால் ஊர் மாயூரம் எனப்படுகிறது.  மயூரம் என்றால் மயில் என்று அர்த்தம்.  ஐப்பசி மாதத்தில் முப்பது நாளும் அதிகாலை மாயூரம் காவிரியில் மூழ்குவது சிறப்பான ஒன்றாக பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டு இன்றும் அந்த வழக்கம் தொடர்கிறது.  இதனை ‘’துலா ஸ்நானம்’’ என்று கூறுவார்கள். அதிக அளவில் காவிரியில் மக்கள் மூழ்கி நீராடும் படித்துறைக்கு ‘’துலா கட்டம்’’ என்று பெயர். காசியில் கங்கைக்கரையில் அரிச்சந்திர கட்டம், மணிகர்ணிகா கட்டம், அனுமந்த கட்டம் என்று இருப்பது போல இங்கே ‘’துலா கட்டம்’’.

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் மாயூரநாத சுவாமி மீது பதிகம் பாடியிருக்கிறார்கள். சம்பந்தர் இரண்டு பதிகம் - அதாவது இருபது பாடல்கள். நாவுக்கரசர் ஒரு பதிகம் - பத்து பாடல்கள். இந்த பதிகங்களில் இருவரும் ‘’மயிலாடுதுறை’’ என்ற பதத்தை பயன்படுத்துகிறார்கள். 

உரவெங் கரியின் னுரிபோர்த்த
பரமன் னுறையும் பதியென்பர்
குரவஞ் சுரபுன் னையும்வன்னி
மருவும் மயிலா டுதுறையே. (சம்பந்தர்)

நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயி லாடு துறையென்று 
போற்று வார்க்குமுண் டோ புவிவாழ்க்கையே (நாவுக்கரசர்)

சீர்காழிக்காரரான திருஞானசம்பந்தர் பாடிய முதல் பாடல் ‘’தோடுடைய செவியன்’’ எனத் தொடங்கும் தேவாரம். அதில் சீர்காழியை பிரம்மாபுரம் எனக் குறிப்பிடுகிறார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (சம்பந்தர்)

 சீர்காழியை ஞானசம்பந்தர் வேணுவனம், திருப்புகலி, திருவெங்குரு, திருத்தோணிபுரம், திருப்பூந்தராய், திருச்சிரபுரம், திருப்புறவம், சண்பை, திருக்கொச்சைவயம், திருக்கழுமலம் ஆகிய பெயர்களாலும் அழைக்கிறார். இந்த பெயர்களுக்கு தனித்தனி பாடலாகவும் பின்னர் இத்தனை பெயர்களையும் ஒரே பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டு அழைக்கிறார். பல்பெயர்ப்பத்து என அந்த பதிகம் அழைக்கப்படுகிறது. தனது சொந்த ஊரான சீர்காழியை ஞானசம்பந்தர் இத்தனை பெயர்கள் கொண்டு அழைத்தாலும் சீர்காழி சீர்காழியாகவே தொடர்கிறது. 

தனது முதல் பாடலில் சீர்காழியை பிரமாபுரம் எனக் குறிப்பிட்ட ஞானசம்பந்தர் மாயூரநாதர் மீது பாடிய பதிகத்தின் கடைசி பாடலில் தன்னை காழி ஞானசம்பந்தன் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். 

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன் 
மயல்தீர் மயிலா டுதுறைமேல்
செயலா லுரைசெய் தனபத்தும்
உயர் வாம் இவையுற் றுணவார்க்கே. (சம்பந்தர்)

சம்பந்தருக்கும் நாவுக்கரசருக்கும் சம காலத்தில் வாழ்ந்தவர் திருமங்கையாழ்வார். அவர் எங்கள் ஊரில் இருக்கும் பள்ளி கொண்ட பெருமாள் மீது பத்து பாடல்களைப் பாடியுள்ளார். அதில் இந்தளூர் என்று குறிப்பிடுகிறார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் எங்கள் ஊர் திருஇந்தளூர் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த பெயரும் மயிலாடுதுறை என்ற பெயர் அளவுக்கே தொன்மையானது. 

சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய
மைந்தா, அந்த ணாலி மாலே சோலை மழகளிறே
நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ,என்
எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே. 

உ.வே.சா தனது ‘’என் சரித்திரம்’’ நூலில் பக்கத்துக்குப் பக்கம் மாயூரம் என்று குறிப்பிடுகிறார். அவருடைய ஆசிரியரான மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘’மாயூரப் புராணம்’’ என்ற நூலை இயற்றியுள்ளார். பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவர் தன் பெயருக்கு முன்னால் மாயூரத்தைச் சேர்த்துக் கொண்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளை. 

மாயூரம் பின்னாட்களில் மருவி மாயவரம் என்றானது. அரசு ஆவணங்களில் மாயவரம் என்ற பெயர் இடம்பெறலானது. ரயில்வே ஜங்ஷனுக்கு மாயவரம் ஜங்ஷன் என்று பெயர். ரயில்வே துறையில் அதனை MV என்று சுருக்கப் பெயராகப் பயன்படுத்துகிறார்கள். இப்போது மயிலாடுதுறை ஜங்ஷன் என அழைக்கப்பட்டாலும் அந்த சுருக்கப் பெயர் MV என்றே தொடர்கிறது. இணையம் மூலம் ரயில் இருக்கை முன்பதிவு செய்ய ஸ்டேஷன் பெயர் என்ற தலைப்பில் MV என்று உள்ளிட வேண்டும். தி.ஜானகிராமன் தனது அக்பர் சாஸ்திரி கதையில் மாயவரம் ஜங்ஷன் என்ற பெயரைப் பயன்படுத்தியிருப்பார். 

மரூஉ என்பது மாயூரத்துக்கு மட்டும் என்று இல்லை. தமிழ்நாட்டில் பல ஊர்களின் பெயர்கள் அவ்வாறு மருவியுள்ளன. சீர்காழிக்கு சீகாழி , சீயாழி என மரூஉ பெயர்கள் உண்டு. கும்பகோணத்துக்கு கும்மோணம். திருவாரூருக்கு திருவாளூர். திருநெல்வேலிக்கு தின்னவேலி. நாகர்கோவிலுக்கு நாரோயில். மாயூரம் மருவி மாயவரம் என்றானது. அந்த மாயவரமும் மாயரம் என மருவியது. ஊர்க்காரர்கள் பலர் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது ஊர்ப் பெயரை மாயரம் என்றே குறிப்பிட்டுக் கொள்வார்கள். 

ஊரின் ஒரு பகுதி கூறைநாடு. திருமணத்தன்று மணமகள் உடுத்தும் சேலைக்கு கூறைச்சேலை என்று பெயர். அந்த கூறைச்சேலைகள் நெய்யும் நெசவாளர்கள் நிறைந்த பகுதி கூறைநாடு என அழைக்கப்படுகிறது. கூறைநாடு என்ற பெயர் மருவி கொரநாடு என்றாகி விட்டது. திருஇந்தளூரை திருவிழந்தூர் என மக்கள் அழைக்கத் தொடங்கி விட்டனர். 

மரூஉ பெயர்கள் எல்லா ஊருக்கும் உண்டு. எனினும் ஒரு ஊரின் மூன்று பகுதிகள் பெயர் மருவி அழைக்கப்படுவது இங்கு மட்டும் தான். மாயூரம் மாயவரமாகவும் திருஇந்த்ளூர் திருவிழுந்தூராகவும் கூறைநாடு கொறநாடாகவும் . மயிலாடுதுறையின் அஞ்சல் குறியீட்டு எண் 609001. திருஇந்தளூரின் எண்ணும் அதுவே. கூறைநாட்டுக்கு 609002. மயிலாடுதுறை ரயிலடியை ஒட்டிய பகுதிகளுக்கு 609003. 

கௌரி மாயூரம் ஆகிய மாயூரம், திருஇந்தளூர் என்றும் அழைக்கப்பட்டு, ஞானசம்பந்தராலும் நாவுக்கரசராலும் மயிலாடுதுறை என்று பாடல் பெற்று பின்னர் மாயவரம் ஆகி அதன் ஒரு பகுதி கூறைநாடு என்று பிரசித்தமாகி இப்போது மயிலாடுதுறை என்று பெயரில் நிலை கொண்டிருக்கிறது. 

உ.வே.சாமிநாத ஐயர் தனது ஆசான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்தது மயிலாடுதுறையில் தான். மாயூரநாதர் ஆலய தெற்கு வீதியில் இருந்த திருவாவடுதுறை மடத்தின் கிளை மடத்துக்கு அருகில் தான் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை குடியிருந்த வீடு இருந்தது. 

உலகெங்கும் ஒரு வழக்கம் உண்டு. வீட்டில் குழந்தைகளுக்குப் பெயரிடுவார்கள். இடப்பட்ட பெயரில் சிலர் அழைப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் சிலர் அந்த குழந்தைக்கு தங்கள் விருப்பத்துக்கு ஏற்றார் போல ஒரு பெயரை சூட்டி விடுவார்கள். வளர்ந்ததும் பள்ளியில் நண்பர்கள் ஒரு பெயர் சொல்லி அழைப்பார்கள். அந்த குழந்தை வளர்ந்து தனக்கென ஒரு பெயரைச் சூட்டிக் கொள்வதும் உண்டு. 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல்வார். கங்கையில் நீராடும் ஒருவன் அதனை ஜலம் என்கிறான். அதன் கரையில் நடந்து செல்லும் வழிப்போக்கன் தாகத்துக்கு நீர் அருந்தி அதனை பானி என்கிறான். ஓர் ஆங்கிலேயன் அதனை வாட்டர் என்று புரிந்து கொள்கிறான். ஒரு வேதியர் அதனை தீர்த்தம் என்கிறார். ஜலம் என்றும் தீர்த்தம் என்றும் பானி என்றும் வாட்டர் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அழைக்கப்படும் பொருள் ஒன்றே. பரம்பொருளின் இயல்பும் அவ்வாறானதே. பரம்பொருளை சிலர் கிருஷ்ணன் என்கிறார்கள். சிலர் ஈஸ்வரன் என்கிறார்கள். சிலர் தந்தை என்கிறார்கள். சிலர் அல்லா என்கிறார்கள். வெவ்வேறு பெயர்களால் சுட்டப்படும் பரம்பொருள் ஒன்றே. 

கம்பனுடைய வாழ்வில் நடந்ததாக ஒரு கதை உண்டு. கம்பன் யுத்த காண்டத்தில் ‘’துமி’’ என்ற வார்த்தையை பிரயோகம் செய்திருக்கிறான். அந்த பாடல் குறித்து பேச்சு வரும் போது ஒட்டக்கூத்தர் அவ்வாறான ஒரு வார்த்தை தமிழில் இல்லை என்கிறார். கம்பனுக்கு மனம் கலக்கமாகி விடுகிறது. கம்பனின் மனக் கலக்கத்தைக் கண்ட கலையரசி சரஸ்வதி ஒரு மோர்க்காரப் பெண்ணாக மோர் விற்றுக் கொண்டு வருகிறாள். கம்பரும் ஒட்டக்கூத்தரும் அவளிடம் தாகம் தணிக்க மோர் கேட்கிறார்கள். அப்போது மோரை கலனில் ஆற்றிக் கொடுக்கிறாள் அந்த மோர்க்காரப் பெண். அப்போது ’’தள்ளி நில்லுங்கள் ; மோர்த் துமி தெறிக்கும்’’ என்கிறாள். ஒட்டக்கூத்தர் ‘’துமி’’ என்ற சொல் மக்கள் புழக்கத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்கிறார். சொல்லரசியால் சொல்லப்பட்ட சொல் என்பதால் அந்த பெயர் நிலைபெற்று விடுகிறது. 

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானக்குழந்தை ஞானசம்பந்தரால் விரும்பி அழைக்கப்பட்ட பெயரான மயிலாடுதுறை ஊர்ப்பெயராக நிலை பெற்றிருப்பது நன்நிமித்தமே.