Wednesday 1 June 2022

சரித்திரம் (நகைச்சுவைக் கட்டுரை)

கல்லூரியில் கடைசி செமஸ்டரில் எங்களுக்கு ஒரு புராஜெக்ட் உண்டு. நான்காம் ஆண்டு துவங்கியதுமே இரண்டு இரண்டு மாணவர்களாக மொத்த வகுப்பின் எண்ணிக்கையைப் பிரித்து அந்த குழுவுக்கு ஒரு பேராசிரியரை வழிகாட்டியாக நியமித்து விடுவார்கள். வருகைப்பதிவின் அகர வரிசை அடிப்படையில் மாணவர் குழு உருவாக்கப்படும். ஒரு பெரிய கட்டிடம் ஒன்றினை டிசைன் செய்ய வேண்டும். நான்கு வருடமாக கற்ற அனைத்து விஷயங்களையும் ஒருங்கிணைத்துத் தொகுத்துக் கொண்டால் புராஜெக்ட்டை நல்ல முறையில் நிறைவு செய்யலாம். அதனை வழிநடத்தவே வழிகாட்டி. 

என்னுடைய புராஜெக்ட் மெட் ஒரு பேராசிரியரிடம் டியூஷன் படித்துக் கொண்டிருந்தான். அப்போது பிரபலமாக இருந்த ஆட்டோகேட் என்ற சாஃப்ட்வேரில் அவன் திறன் பெற விரும்பினான். அந்த பேராசிரியருக்கும் எங்கள் வழிகாட்டியாக இருந்த பேராசிரியருக்கும் கல்லூரி தொடர்பான பல விஷயங்களில் முரண்கள். அது எங்கள் புராஜெக்ட்டில் பிரதிபலிக்கத் தொடங்கியது.  ஒரு கட்டத்தில் எங்கள் வழிகாட்டி எனது புராஜெக்ட் மெட்டிடம் ‘’நீ எப்படி புராஜெக்ட்டை நிறைவு செய்கிறாய் என்று பார்க்கிறேன்’’ என்று மிரட்டத் தொடங்கினார். எனக்கு அவர்கள் மோதலில் நேரடித் தொடர்பு இல்லை எனினும் நான் என் புராஜெக்ட் மெட் பாதிக்கப்படும் இடத்தில் இருந்ததால் தார்மீக ரீதியாக அவனுடன் துணை நின்றேன். அவ்வப்போது நடக்கும் விஷயங்களை என்னிடம் சொல்லி வருத்தப்படுவான். இதே நிலையில் ஒரு செமஸ்டர் அதாவது ஆறு மாதங்கள் முடிவடையும் நிலை வந்து விட்டது. ஒரு நாள் என்னிடம் ‘’வழிகாட்டி’’ மிகவும் வருத்துவதாக வருத்தப்பட்டான். துறைத் தலைவரிடம் சென்று கூறுவோம் என்றான். இன்னும் ஆறு மாதத்தில் கல்லூரி நிறைவடைய இருக்கும் நிலையில் ஒரு சிக்கலுக்குள் நுழைவது உசிதமா என்பது எங்கள் கவலையாக இருந்தது. இருப்பினும் துறைத் தலைவரிடம் சென்று தெரிவித்தோம். அவர் நல்ல மனிதர். நியாயமானவர். ஆனால் நாங்கள் எதிர்பாராத விஷயம் ஒன்றைச் சொன்னார். வாய்மொழியாக புகார் அளித்தால் இந்த விஷயத்தை விசாரிக்க முடியாது ; வேண்டுமானால் எழுத்துப் பூர்வமாக புகார் அளியுங்கள் என்றார். நாங்கள் வந்து விட்டோம். அவர் தெரிவித்த அன்று மாலை வகுப்புகள் முடிந்ததும் துறைத் தலைவர் அறைக்கு அருகில் இருந்த காலி வகுப்பறை ஒன்றில் அமர்ந்து விஷயத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினோம். புராஜெக்ட் மெட்டின் கையெழுத்து கோழிக் கிறுக்கலாக இருக்கும். எனவே கடிதத்தை நான் எழுதினேன். ஆனால் அது பலவிதத்திலும் ரிஸ்க். இருந்தும் எனது கையெழுத்தில் எழுதினேன். ’’ஃபிரம்’’ பகுதியில் எங்கள் இருவரின் பெயர்களும் வகுப்பும். ‘’டூ’’ பகுதியில் துறைத்தலைவர். ‘’சப்ஜெக்ட்’’ பகுதியில் புராஜெக்ட் நிறைவு செய்வதில் உருவாக்கப்படும் இடையூறுகள் என குறிப்பிட்டோம். விஷயத்தை விளக்கி எழுதி துறைத் தலைவரிடம் வழங்கி விட்டோம். அப்போதும் அவரிடம் ‘’ நீங்கள் கூறுவதால் தான் இவ்வாறு செய்கிறோம். எங்களுக்கு இதில் விருப்பமில்லை’’ என்று கூறினோம். எங்கள் முன்னால் பச்சை மை பேனாவில் ஆங்கிலத்தில் ‘’ஃபார்வர்டர்ட்’’ என எழுதி தனது சுருக்கக் கையெழுத்தை இட்டார். நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். 

மறுநாள் காலை எங்கள் முதல் பிரிவேளை வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது எங்கள் வழிகாட்டி வகுப்புக்கு வந்தார். அந்த நேரத்தில் அவர் அங்கு வருவது ஏன் என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளருக்குப் புரியவில்லை. ஏனெனில் அவர் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பாடம் எடுப்பவர் இல்லை. மூன்றாம் ஆண்டில் தான் அவரது பாடம். என்ன விஷயம் என்று வகுப்புக்கு வெளியே சென்று கேட்டார். அவர்கள் சிறிது நேரம் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது எங்கள் இரண்டு பேருக்கு மட்டும் தெரியும். எங்கள் வகுப்பின் மற்ற மாணவர்களுக்குத் தெரியாது. வழிகாட்டியும் விரிவுரையாளரும் வகுப்புக்குள் வந்தனர். வழிகாட்டி தன்னைப் பற்றி நாங்கள் இருவரும் அளித்த புகாரைப் பற்றி சுருக்கமாகச் சொல்லி விட்டு நாங்கள் துறைத் தலைவருக்கு அளித்து ரிமார்க்ஸ்ஸுக்காக வழிகாட்டிக்கு ஃபார்வர்ட் செய்த கடிதத்தின் நகலை எல்லா மாணவர்களிடமும் ஒவ்வொரு காப்பி வழங்கினார். எங்கள் கைக்கும் ஒரு நகல் வந்தது. புராஜெக்ட் மெட் பதட்டத்துடன் இருந்தான். நான் மிகவும் சாவகாசமாக இருந்தேன். அதனை நான்காக மடித்து எனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன். எங்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளர் ‘’ ஒரு மாணவனுக்காக ஒரு பேராசிரியர் மேல் நடவடிக்கை எடுத்தது என்பது கல்லூரி சரித்திரத்திலேயே கிடையாது’’ என்றார். பின்னர் வழிகாட்டி இதனை துறையின் எல்லா பேராசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் வழங்க வேண்டும் . அதற்காக செல்கிறேன் என்றார். 

நான் அமைதியாக மெட்டிடம் சொன்னேன். ‘’இனிமேல் அவரை யாராலும் காப்பாற்ற முடியாது’’

‘’எப்படி சொல்கிறாய்?’’ என்று கேட்டான் மெட்.

‘’அவருடைய இயல்பு என்ன என்பதை அவரே வெளிக்காட்டி விட்டார். அதனை நாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.’’ என்றேன். 

துறைத்தலைவர் அறைக்குச் சென்று நேற்று நாங்கள் அளித்த புகாரின் நகல் எங்கள் கைகளுக்கே வந்ததை எடுத்துக் கொண்டு காட்டி விட்டு கொடுத்து விட்டு வந்தோம். துறைத்தலைவர் அதிர்ச்சி அடைந்து விட்டார். 

இந்த விஷயம் தொடர்பாக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. துறைத் தலைவர் அதன் தலைவர். மூத்த பேராசிரியர் அதன் இன்னொரு உறுப்பினர். விசாரணை குறித்த தகவல் புலத்தலைவருக்கும் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் தெரிவிக்கப்பட்டது. 

முதலில் வழிகாட்டியை அழைத்து அவருடைய தரப்பை கேட்டார்கள். பின்னர் அவரை அனுப்பி விட்டு எங்களை அழைத்து எங்கள் தரப்பைக் கேட்டார்கள். புராஜெக்ட் மெட் பதட்டமாக இருந்தான். நான் தான் பேசினேன். 

‘’நாங்கள் எழுத்து பூர்வமாக புகார் அளிக்க எவ்வளவு தயங்கினோம் என்பது  துறைத் தலைவருக்குத் தெரியும். அவர் சொன்னதால் தான் அதனைச் செய்தோம். அவரிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதம் எங்களுடையது தான் என்றாலும் ஒப்படைக்கப்பட்ட பின் அது துறையினுடையதும் கூட. அஃபிஷியல் ரெகார்ட். அதில் துறைத் தலைவரின் சுருக்கக் கையொப்பமும் முத்திரையும் உள்ளது. இந்த செய்கை மூலம் துறைத் தலைவர் அலுவலக மாண்பை வழிகாட்டி சிதைத்துள்ளார்’’ என்று கூறினேன். 

‘’அவரிடம் பேசுகிறோம். உங்கள் புராஜெக்ட் நல்ல விதமாக நிறைவு செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்’’ என்றார்கள். நாங்கள் அதனை ஏற்கவில்லை. 

கொஞ்ச நேரம் அறைக்கு வெளியே காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருந்தோம். சில நிமிடங்களில் ஒரு மணி ஒலித்தது. உள்ளே சென்றோம். 

‘’இந்த நிமிடத்திலிருந்து உங்கள் புராஜெக்ட்டுக்கு வழிகாட்டப் போவது துறைத் தலைவர் . இனி உங்கள் வழிகாட்டி துறைத்தலைவர்’’ என்று ஆங்கிலத்தில் கூறினார். 

நான் துறைத்தலைவருக்கு நன்றி கூறினேன். மெட்டிற்கு பதட்டத்தில் என்ன ஏது என்று புரியவில்லை. நான் அவனிடம் சுருக்கமாக விஷயத்தைச் சொன்னேன். அவனும் நன்றி கூறினான். 

பலநாள் சிக்கல் தீர்ந்ததின் மகிழ்ச்சியில் கேண்டீனுக்கு சென்று தேனீர் அருந்தினோம். பதினைந்து நிமிடம் கழித்து மீண்டும் துறை அலுவலகத்துக்கு செல்லலாம் என்று சொன்னேன். மெட் ‘’ஏன்’’ என்றான். வழிகாட்டி மாற்றப்பட்டதை நோட்டிஸ் போர்டில் அறிவிப்பாக வெளியிட்டிருப்பார்கள் : அதனைச் சென்று பார்ப்போம் என்றேன். என் யூகம் சரியாக இருந்தது. 

மறுநாள் காலை  ‘’ ஒரு மாணவனுக்காக ஒரு பேராசிரியர் மேல் நடவடிக்கை எடுத்தது என்பது கல்லூரி சரித்திரத்திலேயே கிடையாது ‘’ என்று கூறியவரின் வகுப்பு அன்றும் முதல் பிரிவேளையாக இருந்தது. அப்போது அந்த வகுப்பில் இருந்த அனைவருக்கும் சரித்திரம் மாறியிருப்பது தெரிந்திருந்தது.