Wednesday, 1 June 2022

ஓர் அதிகாரி

பல சூழ்நிலைகளில் - பல வருடங்களில் - பல விதமான வெள்ள நிவாரணப் பணிகளில் பங்கெடுத்திருக்கிறேன். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் இணைந்து பணியாற்றிய ஒரு ஆட்சிப் பணி அதிகாரி நேற்று ஊருக்கு வந்திருந்தார். எனக்கு ஃபோன் செய்தார். பல வருடங்களுக்குப் பிறகு என்னுடைய ஞாபகம் அவருக்கு இருந்தது மகிழ்ச்சி அளித்தது. அவரைச் சென்று சந்தித்தேன். அவருடன் அவருடைய துணை அதிகாரியும் உடனிருந்தார். துணை அதிகாரி எனக்கு இப்போது தான் அறிமுகமாகிறார். அவரிடம் அதிகாரி எவ்வாறு வெள்ள நிவாரணப் பணிகளில் பம்பரம் என சுழன்று பணியாற்றுவார் என்பதை நினைவு கூர்ந்தேன். காலை 7 மணிக்கு அலுவலகத்தில் இருப்பார். வெள்ளம் பாதித்த பல கிராமங்களுக்கு செல்வார். மக்களைச் சந்திப்பார். ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பதை துல்லியமாக ஆய்வு செய்வார். ஓர் அதிகாரி ஒரு விஷயத்தில் அக்கறை காட்டுகிறார் என்றாலே அவருக்குக் கீழ் உள்ள அரசு நிர்வாகத்தின் கீழ் அடுக்கு வரை அனைத்து வேலைகளும் சரியாக இருக்கும்.  வெள்ள நிவாரணப் பணிகளின் போது அவருடைய பணி எல்லையில் அனைத்தும் மிகச் சரியாக இருந்தன. நான் பொதுவாக எந்த விஷயத்தையும் கறாராகவே மதிப்பிடுபவன். எனது மதிப்பீட்டிலியே அனைத்தும் சரியாக இருந்தன. காலை 7 மணிக்குத் துவங்கும் அவரது பணிகள் இரவு 11 மணி வரை நீடிக்கும். ஊழியர்களுக்கு குறிப்புகளை அளித்தல் - நிலையை துல்லியமாக மேலிடத்துக்கு தெரிவித்தல் - விடுபடல்கள் ஏதும் இன்றி அனைத்தும் நடக்கிறதா என ஆய்வு செய்தல் என எல்லா வேலைகளையும் பிழையின்றி மேற்கொள்வார். ஐ. ஏ. எஸ் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பார். அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து கொடுப்பார். 

மாநில அரசின் அலுவலகங்களுக்கு எப்போதோ செல்பவர்கள் ஆனாலும் அடிக்கடி செல்பவர்கள் ஆனாலும் அவர்கள் அங்கே அடையும் அனுபவம் என்பது மிகவும் எதிர்மறையான ஒன்றாகவே இருக்கும். அரசு இயந்திரம் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதே உண்மை. மக்கள் அடிக்கடி செல்ல நேர்கிற போக்குவரத்து அலுவலகம், நகராட்சி அலுவலகம், பத்திரப் பதிவு அலுவலகம்  ஆகிய்வை ஆனாலும் மிகக் குறைவாக பொது மக்கள் செல்லும் அலுவலகங்கள் ஆனாலும் ஒரே நிலைமை தான். பொதுமக்களை உரிய விதத்தில் அணுகுவதும் பதிலளிப்பதும் தங்கள் பொறுப்பு அல்ல என எண்ணும் - மக்கள் ஏன் அலுவலகங்களுக்கு வருகிறார்கள் என அலுத்துக் கொள்ளும் மனநிலையே பல வருடங்களாக தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு இருக்கிறது. ‘’சேற்றில் முளைத்த செந்தாமரை’’ என நண்பரைப் போல சிலர் இருக்கிறார்கள் என்பதும் அவர்களைப் போன்றவர்களே நிர்வாக மாற்றங்களை தொடர்ந்து நிகழ்த்துகிறார்கள் என்பதுமே மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயங்கள். 

நேற்று காலையிலிருந்து மாலை வரை அவருடன் பயணித்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து சொன்னேன். ஆர்வமுடன் கேட்டுக் கொண்டார். ஊருக்கு அருகில் 3 ஏக்கர் பரப்பில் நண்பர் வயலில் முழுமையாக தேக்கு நட ஏற்பாடு செய்வதை அவரிடம் தெரிவித்து அதனை நீங்கள் வந்து பார்க்க வேண்டும் என்று எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். வாகனத்தில் செல்லும் போது அங்கே நிகழும் விஷயங்கள் குறித்து முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டார். வயலில் நிகழ்பவற்றை பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

நேற்றைய நாளின் பெரும்பாலான பொழுது அவருடன் செலவிட்டது மகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தது.