Saturday 4 June 2022

ஒரு மாதிரி வயல்

கடந்த மூன்று மாத காலமாக கணிசமான பொழுதினை ஒரு குறிப்பிட்ட செயலுக்காக வழங்கி வருகிறேன். அது குறித்தே எப்போதும் யோசனை. இன்னும் என்னென்ன வகையில் துல்லியமாக்கலாம் என அவதானித்துக் கொண்டிருந்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் ஒரு கிராமத்தை அடிப்படை அலகாகக் கொண்டவை. ஒரு முழு கிராமத்துக்கு என்ற அளவிலேயே ‘’காவிரி போற்றுதும்’’ திட்டமிடல்கள் இருந்தன - இருக்கின்றன. எனினும் இந்த செயலாக்கம் முதற் பார்வையில் ஒரு விவசாயி தொடர்பானது. ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அது எல்லா விவசாயிகளுக்குமானது. எனவே இதனை ஒரு மாதிரி வடிவமாக ஆக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உருவானது. எனவே இதற்கு முழுமையான நேரமும் கவனமும் கொடுத்தேன். 

‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமம் என்பதை ஒரு தேசம் என்பதாகவே எண்ணுகிறது. மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது செல்லும் போது ஒரு கிராமத்தை மட்டுமாவது பாண்டவர்களுக்குக் கொடுங்கள் என்று இறைஞ்சுகிறார். தேசத்துக்குரிய அத்தனை மாண்புகளும் கிராமத்துக்கும் உண்டு. 

விவசாயிகள் பெரும் பொருளியல் சக்தியாக மாற வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பங்களில் ஒன்று. விவசாயிகளின் வாழ்வில் பொருளியல் செழிப்பைக் கொண்டு வருவதே ‘’காவிரி போற்றுதும்’’ லட்சியம். தலைமுறை தலைமுறைகளாக மண்ணில் உழைத்து வியர்வை சிந்தி தேசத்துக்கே உணவளித்த பாரம்பர்யம் கொண்ட விவசாயிகள் தன்னிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகவே ‘’காவிரி போற்றுதும்’’ தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது. ‘’செய்க பொருளை’’ என்பது திருவள்ளுவரின் கட்டளை. நம் நாட்டில் விவசாயிகள் செழிப்பாக இருந்த காலகட்டங்களில் உலகின் GDPல் 50% நமது பங்களிப்பாக இருந்திருக்கிறது. 

’’காவிரி போற்றுதும்’’ பணிகளை முன்னெடுத்த போது காவிரி வடிநிலப் பகுதி விவசாயிகளிடம் தேக்கு மரங்கள் பயிரிடுமாறு கேட்டுக் கொள்வேன். முழு நிலப்பரப்பில் இல்லாவிட்டாலும் வயலின் வரப்புகளிலாவது பயிரிடுமாறும் அது வயல் அளிக்கும் வருமானத்தினும் மிகுதியான வருமானத்தை அளிக்கும் என்றும் அவர்களிடம் கூறுவேன். பல விவசாயிகள் இதனை மேற்கொண்டனர். இருப்பினும் எனக்கு ஒரு ஆவல் இருந்தது. விவசாயிகளை நேரடியாக அழைத்துச் சென்று எல்லா விதத்திலும் பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் ஒரு வயலில் முழுமையாக தேக்கு பயிரிடப்படுமானால் அது விவசாயிகள் நேரடியாக பார்த்து அறிய ஏதுவாக இருக்கும் என்பதால் அவ்வாறான ஒன்றை அமைக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தேன். 

என்னுடைய தொடர் பணிகளைப் பார்த்த ஒரு விவசாயி - அவர் ஐ.டி கம்பெனியில்  பணிபுரிபவர் - பரிந்துரைக்கப்பட்ட விதங்களில் தனது 3 ஏக்கர் வயலிலும் முழுமையாக தேக்கு பயிரிட விரும்புவதை என்னிடம் தெரிவித்து அதன் செயலாக்கத்தை முன்னின்று நடத்துமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். 

மூன்று மாதமாக அந்த பணியை முன்னெடுத்தேன். ஊரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் அவரது வயல் உள்ளது. தினமும் பல மணி நேரங்கள் அங்கே இருப்பேன். வேலை சரியாக நடக்கிறதா என்று பார்ப்பேன். தொய்வுகள் ஏதேனும் இருப்பின் அவற்றை சரிசெய்வேன். கொஞ்சம் கொஞ்சமாக நிறைவை நோக்கி நகர்த்திச் செல்வதற்கு தேவையானதைச் செய்தேன். 

1. என்னுடைய கட்டுமானப் பொறியியல் அறிவின் துணை கொண்டு 3 ஏக்கர் முழுமையான பரப்புக்கும் 2 அடி உயரம் கொண்ட மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டது. பொதுவாக ஒரு அடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைப்பார்கள். ஆனால் இரண்டு அடி உயரம் தேவை என்பதில் நான் உறுதியாக இருந்தேன். 

2. மேட்டுப்பாத்தியில் ஒரு மரக்கன்று நடப்பட 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த 8 கன அடி கொள்ளளவு கொண்ட குழிகளில் மக்கிய சாண எருவும் கரித்தூளும் கலந்து இடப்பட்டன. 

3. ஒரு மரத்துக்கும் அதன் அருகில் உள்ள  இன்னொரு மரத்துக்கும் இடையே 12 அடி இடைவெளி வயலின் முழுப் பரப்புக்கும் பேணப்பட்டது. 

எளிமையாய்த் தோன்றும் இந்த விஷயங்களை செயலாக்குவது என்பது எளிய ஒன்றாக இருக்கவில்லை. இருப்பினும் முழுமையான உழைப்பை அளித்து அச்செயலுக்கு எங்களை முழுமையாக அர்ப்பணித்து அதனை செய்து முடித்தோம். 

இனி இந்த செயலுக்குப் பிறகு , ‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியும் என்றால்,

1. ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குறு விவசாயியிலிருந்து 15 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயி வரை எவரையும் நேரடியாக இந்த வயலுக்கு அழைத்து வந்து நிகழ்ந்துள்ளதைக் காட்ட முடியும். விவசாயிகள் எப்போதுமே பிரத்யட்சமாக காணக் கூடியதை எளிதில் புரிந்து கொண்டு தங்கள் வயலில் செயல்படுத்துவார்கள். தேக்கங்கன்றுகள் வளர்ச்சியைக் காணும் போது அதன் எதிர்கால வளர்ச்சியையும் அவர்களால் அனுமானிக்க முடியும். சில வருடங்களில் இது ஒரு அனுபவ ஞானமாகியிருக்கும். 

இந்திய தத்துவ மரபு பிரத்யட்சம், அனுமானம், சுருதி என அறிதல் முறைகள் மூன்று என வகுக்கிறது. 

2. வயல் வரப்பில் தேக்கு வளர்ப்பதில் நடைமுறை சிக்கல்கள் கொண்ட விவசாயிகள் பத்திலிருந்து பதினைந்து தேக்கு மரங்களை ஒரு மேட்டுப்பாத்தி அமைத்து நட்டு விட்டு மற்ற பரப்பில் வழக்கம் போல் அவர் செய்வதை செய்து கொண்டிருக்கலாம். ஒரு மேட்டுப்பாத்தி அமைக்க சில நூறுகள் மட்டுமே செலவாகும் என்பதால் பலரும் இதனை முயன்று பார்ப்பர். சிறு அளவில் நல்ல பலன் இருந்தால் அதனை விரிவாக்குவார்கள். 

3. இந்த வயல் அவர்களுடைய எல்லா ஐயங்களையும் நீக்கும். 

இப்போதே பல நண்பர்களையும் விவசாயிகளையும் இந்த மாதிரி வயலுக்கு அழைத்து வந்து காட்டியிருக்கிறேன். அவர்கள் நிகழ்ந்துள்ளவற்றைக் கண்டு ஊக்கம் பெற்றுள்ளார்கள். 

மூன்று ஏக்கரில் 800 தேக்கு மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. உழைப்பை நம்பும் உழைப்பை அளிக்கும் அந்த விவசாயி பூமாதேவியின் ஆசியுடன் ஆகாசவாணியின் ஆசியுடன் தனது உழைப்புக்கேற்ற பலனாக 15 ஆண்டுகளில் பத்து கோடி ரூபாய் பெறுவார். 

நாம் உழைப்பை நம்புகிறோம். நாம் தெய்வத்தை நம்புகிறோம். 

ஒவ்வொரு விவசாயிக்கும் இந்த வாய்ப்பும் இந்த சாத்தியமும் அமைய வேண்டும் என்பதே ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம்.