Thursday, 16 June 2022

எழுக

நண்பரின் ஊரில் நாளை கணநாதர் ஆலய குடமுழுக்கு விழா. நாளைய தினமே தேக்கு மரக்கன்றுகளை தங்கள் வயலில் நட வேண்டும் என நண்பரும் நண்பரின் குடும்பத்தினரும் விரும்பினர். அந்த ஆலயத்தின் அடுத்த குடமுழுக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் நிகழும். அப்போது மரங்கள் நல்ல நிலைக்கு வந்திருக்கும் என்பதோடு ஆலய குடமுழுக்குடன் அவர்கள் முன்னெடுக்கும் செயல் ஏதோ ஒரு விதத்தில் பிணைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் விரும்பினார்கள்.  இன்று தஞ்சாவூர் சென்று நர்சரியில் தேக்கு மரக் கன்றுகளை வாங்கி வர விரும்பினோம். ஊருக்குப் பக்கத்தில் ஆடுதுறையில் மரக்கன்றுகள் கிடைக்கும் என்று கூறினேன். தஞ்சாவூர் சென்று பார்ப்பது - அங்கே மரக்கன்றுகள் திருப்தியான நிலையில் இருந்தால் அவற்றை வாங்கிக் கொள்வது இல்லையேல் திரும்பி வரும் வழியில் ஆடுதுறையில் வாங்குவது என்று முடிவு செய்தோம். மொத்தம் ஆயிரம் கன்றுகள் தேவை. நாங்கள் நண்பரின் மாருதி ஆம்னி வாகனத்தில் சென்றோம். நண்பரின் சகோதரர் வாகனத்தை இயக்கினார்.

காலை 7 மணிக்குப் புறப்பட்டோம். தேக்கு மரக்கன்றுகள் குறித்தும் அவற்றின் பராமரிப்பு குறித்தும் பேசிக் கொண்டு சென்றோம். அடுத்த ஆறு மாதங்கள் முக்கியமான பருவம். கண்ணை இமை காப்பது போல காக்க வேண்டும் என்று சொன்னேன். உண்மையில் காப்பது என்பது தேக்கு மரக்கன்றுகளுடன் உணர்வுபூர்வமாக இணைந்து இருப்பதே. ‘’இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்’’ என்பது திருக்குறள். நிலத்தை பரம்பொருளின் வடிவம் என்கிறது இந்திய மரபு. பரம்பொருள் கருணைக்கடல். தன்னை அன்புடன் பிரியத்துடன் நினைப்பவர்களுக்கு தன் அருளை வாரி வழங்கும் இயல்புடையது. நிலமும் அத்தகையதே. நமது செயல் களத்துக்கு அடிக்கடி செல்ல வேண்டும். அதனுடன் உணர்வுபூர்வமாக பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். மானசீகமாக அதனுடன் உரையாட வேண்டும். அதனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அடுத்த ஆறு மாதங்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் ஊற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சொன்னேன். மரம் என்பது தானாக வளர்வது என்ற பொது அபிப்ராயம் இங்கே வலுவாக உள்ளது. ஒரு மாத காலம் வரை அதற்கு கவனம் கொடுப்பார்கள். பின்னர் தானாக வளர்ந்து விடும் என்று இருந்து விடுவார்கள். தேக்கு மரங்கள் நன்றாகப் பருக்க வேண்டும். அப்போது தான் அதற்கு ஆக உச்சமான விலை கிடைக்கும். நன்றாகப் பருக்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையானதை நாம் கொடுக்க வேண்டும். எனவே தண்ணீர் ஊற்றுவது மிகவும் அவசியம். என் அபிப்ராயங்களை நண்பரிடம் சொல்லியவாறு வந்தேன். 

சுவாமிமலையில் ஒரு உணவகம். தஞ்சாவூர் திருச்சி செல்லும் போது அங்கே காலை உணவருந்துவது வழக்கம். அந்த வகையில் உணவக உரிமையாளர் எனக்கு பழக்கமானவர் ஆனார். என்னைக் கண்டதும் பிரியத்துடன் நலம் விசாரித்தார். 

கல்லணை - பூம்புகார் சாலை அகலப்படுத்தப்பட்டிருப்பதால் கார் இயக்க வசதியாக இருக்கிறது என நண்பரின் சகோதரர் சொன்னார். ‘’செல்வம் சாலைகளை உண்டாக்கவில்லை. சாலைகள் தான் செல்வத்தை உண்டாக்குகின்றன’’ என்ற தாமஸ் ஜெபர்சனின் மேற்கோளை நண்பரிடம் சொன்னேன். பட்டுக்கோட்டைக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையே உள்ள சாலைக்கு ‘’சேது ரஸ்தா’’ என்று பெயர். தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் யாத்ரிககர்களின் சேவைக்காக அந்த சாலையில் பல சத்திரங்களை அமைத்தனர். 2003ல் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பேருந்தில் மனோராவைப் பார்ப்பதற்காக நானும் எனது நண்பர் ஒருவரும் திருவாரூர் திருத்துறைப்பூண்டி மார்க்கமாக பட்டுக்கோட்டை சென்றோம். அப்போது அங்கே தொண்டி என்ற ஊருக்கான பேருந்து இருந்தது. சேது ரஸ்தாவில் பயணிக்கலாம் என்ற ஆவலில் அந்த பேருந்தில் ஏறி தொண்டி சென்று அங்கிருந்து இராமேஸ்வரம் சென்றோம். அன்று அது ஒரு ஒற்றைச் சாலை. மனமேல்குடி, மீமிசல் ஆகிய கடற்கரை கிராமங்களின் வழியே செல்லும். 2010 ஐ ஒட்டிய ஆண்டிலேயே அது கிழக்குக் கடற்கரை சாலையுடன் இணைக்கப்பட்டு இப்போது பிரமாதமான சாலையாக உள்ளது என்று கூறி பட்டுக்கோட்டை - தொண்டி பேருந்து பயணத்தை நினைவு கூர்ந்தேன். 

நண்பரிடமும் நண்பரின் சகோதரரிடமும் மனோரா சென்றிருக்கிறீர்களா என்று கேட்டேன். ‘’மனோரா’’ எனக்கு ஒரு காலத்தில் மிகவும் பிடித்த இடம். பித்துப் பிடித்ததைப் போல அடிக்கடி அங்கே செல்வேன். அந்த கடற்கரை - அந்த நிலக்காட்சிகள் ஆகியவை என் மனம் கவர்பவை. நண்பர்கள் சென்றிருந்தார்களே தவிர அதன் வரலாறை அவர்கள் அறியவில்லை. 

ஐரோப்பாவில் நெப்போலியன் பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாய் விளங்கிய போது ‘’வாட்டர்லூ யுத்தம்’’ நிகழ்ந்தது. அந்த யுத்தத்தில் நெப்போலியனை களத்தில் சந்தித்தது கார்ன்வாலிஸ். அவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர். வாட்டர்லூ களத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருந்ததால் பிரெஞ்சுப் படையின் துப்பாக்கிகள் சரிவர இயங்கவில்லை. அவற்றால் வெடிமருந்து வெடிப்பதற்குத் தேவையான வெப்பநிலையை துப்பாக்கியில் பராமரிக்க இயலவில்லை. ஆனால் ஆங்கிலப் படையின் துப்பாக்கிகள் குடகு மலையின் மழைக்காடுகளில் இருந்த தேக்கு மரத்தால் ஆனவை. பனி பொழியும் களத்திலும் அவை திறம் படச் செயல்பட்டன. வாட்டர்லூ களத்தில் கார்ன்வாலிஸ் வென்றதற்கு முக்கியக் காரணம் அது. அந்த வெற்றியின் நினைவாக தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் மனோராவைக் கட்டினார். அது கலங்கரை விளக்கமாகவும் பயன்பட்டிருக்கிறது என்று சொன்னேன். வரலாறு என்றும் அறியப்பட வேண்டிய ஒன்று. வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகங்களுக்கு மீண்டும் வரலாறு அந்த பாடத்தை நடத்தும். தற்செயலாக என்றாலும் உரையாடலின் மைய இடத்துக்கு தேக்கு வந்ததை மகிழ்ச்சியாக உணர்ந்தேன். 

தஞ்சாவூர் நர்சரியில் தரமான மரக்கன்றுகள் இருந்தன. ஆயிரம் மரக்கன்றுகளை டாடா ஏஸ் வண்டியில் ஏற்ற ஏற்பாடு செய்து விட்டு நண்பரை பொறுப்பாக டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்து ஊருக்கு கொண்டு வந்து சேர்த்திடுங்கள் என்று கூறி விட்டு நாங்கள் ஆம்னியில் முன்னதாகவே ஊருக்குப் புறப்பட்டோம். நேரம் அப்போதே மதியம் 1 மணி ஆகி விட்டது. நண்பரின் உறவினர் ஒருவர் கோயம்புத்தூரிலிருந்து ஊருக்கு வருகிறார். அவர் அலைபேசியில் அழைத்தார். அவரை தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கச் சொல்லி விட்டோம். ரயில் நிலையம் சென்று அவரை அழைத்துக் கொண்டு நாங்கள் புறப்பட்டோம். 

உக்கிரமான வெயில். தஞ்சாவூர் பை பாஸில் சாலியமங்களம் வழியாக பாபநாசம் சென்று அங்கிருந்து குடந்தை சாலையைப் பிடிக்க விரைந்து கொண்டிருந்தோம். நான் இரண்டு பெண்கள் கம்மங்கூழ் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். நண்பரிடம் கம்மங்கூழ் குடிப்போமா என்று கேட்டேன். வண்டியை நிறுத்தினோம். இரண்டு பெண்கள் கூழ் விற்கிறார்கள். இரண்டு பானைகள். வத்தல் மற்றும் மோர்மிளகாய். மூன்று சொம்பு கூழ் வாங்கி அருந்தினோம். கூழ் விற்கும் பெண் சர சர என்று வேலைகளைச் செய்வதைக் கவனித்தேன். தனது பணியை தனது கடமையை செவ்வனே செய்யக் கூடிய ஒருவர் வாழ்க்கை குறித்த மேலான புரிதல் கொண்டவராக இருப்பார் என்பது எனது நடைமுறைப் புரிதல். மயிலாடுதுறை செல்ல எந்த சாலையில் திரும்ப வேண்டும் என்று நண்பர் கேட்டார். அந்த அம்மா பதில் சொன்னார்கள். தனது மகளை மயிலாடுதுறை அருகில் ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்திருப்பதாகக் கூறினார்கள். எந்த கிராமம் என்று கேட்டேன். ஊர்ப் பெயரைச் சொன்னார்கள். தடுப்பூசிக்காக செயல் புரிந்த கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமம். அந்த ஊருக்கு நான் சென்றிருக்கிறேன் என்று சொன்னேன். அவர்களுக்கு மிகவும் சந்தோஷம். நாங்கள் தேக்கு மரக்கன்றுகள் வாங்க வந்தோம் என்று கூறினேன். 

நண்பர் 3 ஏக்கர் நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிடுகிறார் என்று சொன்னேன். கூழ் விற்கும் பெண்ணின் உதவியாளருக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது என்று சொன்னார். முழுமையாக இல்லாவிட்டாலும் வயலில் பத்து தேக்கு கன்று நட்டு வளர்த்துக் கொள்ளுங்கள். 15 ஆண்டுகளில் உங்களுக்கு 15 லட்சம் பணம் கிடைக்கும் என்று சொன்னேன். அவர்கள் கவனமாகக் கேட்டார்கள். ‘’ நீங்கள் உழைப்பதற்கு தயங்கக் கூடியவர்கள் இல்லை. உழைக்க வேண்டும் என்ற தீரா ஆர்வம் இருப்பதால் தான் இந்த வெயிலில் கூழ் விற்கிறீர்கள். இதில் நீங்கள் செலுத்தும் உழைப்பில் நூறில் ஒரு பங்கை வயலில் 15 தேக்கு மரக்கன்றுகள் வளர்க்க செலுத்துங்கள். 15 ஆண்டுகளில் நல்ல பலன் கிடைக்கும். பணம் ஈட்ட வேண்டும் என்று தான் கூழ் வியாபாரம் செய்கிறீர்கள். உங்களால் 15 தேக்கு மரங்களை சர்வ சாதாரணமாக வளர்க்க முடியும். அவசியம் செய்யுங்கள் ‘’ என்று கூறினேன். அவர்கள் இருவரும் ஆர்வமானார்கள். 

‘’நான் ஒரு சிவில் இன்ஜினியர். விவசாயிகளுக்கு விவசாயத்தில் அதிக வருமானம் கிடைக்க எளிய வழிகளை பரிந்துரைப்பதை ஆர்வத்தின் காரணமாக செய்கிறேன். நான் இன்னும் சில நாட்களில் மீண்டும் இந்த ஊருக்கு வருகிறேன். உங்கள் வயலை நேரில் பார்த்து எப்படி தேக்கு மரம் நட வேண்டும் எப்படி பராமரிக்க வேண்டும் என்று கூறுகிறேன். அதன் படி செய்யுங்கள். நீங்கள் வழக்கமாக செய்யும் நெல் விவசாயமும் செய்து கொள்ளுங்கள். அதனுடன் இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’’ என்றேன். இருவரின் அலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்டு எனது அலைபேசி எண்ணை அளித்து விட்டு புறப்பட்டோம். 

ஒரு பயணம் இன்னொரு பயணத்துக்கு வழிகோலுகிறது. ஒரு செயல் இன்னொரு செயலை நிகழ்த்துகிறது.