Thursday 23 June 2022

பறவையின் துயர் தீர்த்தவன்

இந்த பதிவின் தலைப்பைப் பார்த்ததும் அனைவரும் இது சித்தார்த்தனைப் பற்றியது என எண்ணக் கூடும் ! இது வேறொருவரைப் பற்றியது. இன்னும் சரியாகச் சொன்னால் வேறு சிலரைப் பற்றியதும் கூட.  

இன்று ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் எனது நண்பரின் நண்பர். இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். அவரை இப்போதுதான் முதல் முறையாக சந்திக்கிறேன். நண்பர் தேனீர் அருந்துவோம் என்று சொன்னார். நானும் நண்பரும் எப்போதாவது ‘’லெமன் மிண்ட்’’ அருந்துவோம். அதாவது புதினாச் சாறில் எலுமிச்சைப் பழம் பிழிந்து அதில் கொஞ்சம் ஐஸ் கலந்து தயார் செய்யப் படுவது ‘’லெமன் மிண்ட்’’. தேனீருக்குப் பதிலாக ‘’லெமன் மிண்ட்’’ஐ நான் பரிந்துரைத்தேன். நாங்கள் இருந்த இடம் ஒரு கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம். அதற்கு அடுத்த தெருவில் நாங்கள் செல்ல வேண்டிய கடை இருந்தது. மூவரும் பேசிக் கொண்டு நடந்தோம். 

புதிதாக அறிமுகமான நண்பரிடம் , ‘’உங்கள் பெயர் என்ன?’’ என்று கேட்டேன். 

அவர் ‘’சிபிச்சக்கரவர்த்தி’’ என்றார். 

அந்த பெயரைக் கேட்டதும் ’’சிலப்பதிகாரத்துல உங்க பேருக்கு ஒரு ரெஃபரண்ஸ் இருக்கு. உங்களுக்குத் தெரியுமா?’’ என்றேன். 

நண்பர் ‘’சிலப்பதிகாரத்திலயா?’’ என்றார். 

‘’ஆமாம். கண்ணகி கையில சிலம்போட பாண்டியனோட அவைக்குப் போய் நீதி கேக்கறா. அப்ப தன்னை அறிமுகப்படுத்திக்கிறா. அதுக்கு முன்னால பாண்டியனை ‘’தேரா மன்னா’’ன்னு சொல்றா. ’’தேரா மன்னா’’ன்னா ஒரு விஷயத்தை முழுமையா புரிஞ்சுகிற தன்மை இல்லாத மன்னனேன்னு அர்த்தம்.’’

’’தேரா மன்னா’’ன்னு தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை நான் மனப்பாடமாகச் சொன்னேன். எப்போதோ படித்தது. மனதில் தங்கி விட்டது. 

‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-

இந்த பாட்டுல இளங்கோ , ‘’புள் உறு புன்கண் தீர்த்தோன்’’ அன்றியும் சொல்றது சிபிச்சக்கரவர்த்தியைப் பத்தி. கழுகால துரத்தப்படுற புறா சிபிகிட்ட வந்து தஞ்சமடையுது. பின்னால துரத்திட்டு வர்ர கழுகு அந்த புறா என்னோட இரை. அத என்கிட்ட ஒப்படைக்கணும்னு சொல்லுது. மன்னன் தஞ்சம் அடைஞ்ச உயிரை காப்பாத்தறதுதான் என்னோட தர்மம்னு சொல்றான். அப்ப கழுகு நான் உணவு கொண்டு வருவன்னு என்னோட குஞ்சுகள் காத்துக்கிட்டு இருக்கு. நீ எடுத்த முடிவால என் குஞ்சுகள் சாக நேர்ந்தா என்ன பண்றது. அவையும் உன்னோட பிரஜைகள் தானே. அதுங்களையும் உன்னோட தர்மம் காப்பாத்த வேண்டாமான்னு கழுகு கேக்குது. சிபி ஒரு தராசு கொண்டு வர்ர சொல்லி புறாவை ஒரு தட்டுல வச்சு இன்னொரு தட்டுல தன் உடம்போட தசையை அறிஞ்சு வைக்கிறாரு. ஆனா புறாவோட எடையை சமனப்படுத்தவே முடியலை. தன் உடம்போட எல்லா தசையும் அறிஞ்சு கொடுத்தும் புறா எடைக்கு சமமாகலையேன்னு கடைசி தசையையும் அரியப் போகும் போகும் போது ‘’மன்னா நீ பெரிய நீதிமான். பிரஜைகளுக்கு சிறந்த அரசன்’’னு அசரீரி கேக்குது. சிபிக்கு பழைய உடம்பு திரும்ப கிடைக்குது. கழுகுக் குஞ்சுகளோட பசியை வானத்துத் தெய்வம் போக்குது. அதைப் பார்த்து இந்திர லோகத்துல இருக்கறவங்க சிபியை வாழ்த்தறாங்க. அப்படிப் பட்ட சிபிச் சக்கரவர்த்தியின் குலத்தில் உதித்த சோழ மன்னர்களால் ஆளப்படும் நாட்டிலிருந்து நான் வந்திருக்கன்னு கண்ணகி சொல்றா’’ என்றேன். 

‘’சார் சார் ! நான் இந்த கதையைக் கேட்டிருக்கன். ஆனா சிபிச்சக்கரவர்த்தி சோழ வம்சத்த சேர்ந்தவர்னு நீங்க சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டன்’’ 

‘’நான் சொல்லல. இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்துல எழுதி வச்சிருக்கார்.’’

‘’புதல்வனை ஆழியில் மடித்தோன் - அப்படின்னா மனுநீதி சோழன் தானே சார்’’

‘’அந்த மன்னனுக்கு மனுநீதி சோழன்னு பேருன்னா அப்ப சோழர்கள் தங்களை மனுவின் வழி வந்தவர்கள்னு நினைக்கறாங்கன்னு அர்த்தம்’’ 

‘’நீங்க சொல்ற விஷயங்கள் ஆச்சர்யமா இருக்கு சார்’’ 

‘’இந்தியாவில சூர்ய குலம் , சந்திர குலம் தான் ரொம்ப தொன்மையானது. ஸ்ரீராமன் சூர்ய குலத் தோன்றல். கிருஷ்ணன் சந்திர குலம். எல்லா ராஜாக்களுமே தங்களை சூர்ய குலமாகவோ சந்திர குலமாகவோ தான் உணர்வாங்க’’

‘’எனக்கு 34 வயசாகுது. இந்த சிலப்பதிகார விஷயத்தை நீங்க சொல்லித்தான் நான் முதல்ல கேள்விப்படறன். ‘’

‘’திருவள்ளுவர் அறிவு அற்றம் காக்கும் கருவின்னு சொல்றார். அதை எப்பவுமே ரொம்ப ஷார்ப்பா வச்சிருக்கணும் சிபி’’ என்றேன்.