Friday 24 June 2022

இசை

சிறு வயதிலிருந்தே எனக்கு இசை கேட்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் அந்த ஆவல் இதுநாள் வரை நிறைவேறவேயில்லை. எனக்கு பொருட்களை வாங்கும் பழக்கம் குறைவு. அதனால் எலெக்ட்ரானிக் பொருட்களிலிருந்து சற்று தள்ளியே இருக்கும் நிலை ஏற்பட்டது. எனக்கு நெருக்கமான ஒரே எலெக்ட்ரானிக் பொருள் என்றால் அது மடிக்கணினி மட்டும் தான். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகக் கூட உள்ளது. இந்த பதினைந்து ஆண்டுகளில் முதலில் வாங்கிய மடிக்கணினி சென்ற ஆண்டு பழுதானது. அதற்கு மாற்றாக புதிய ஒன்றை சென்ற ஆண்டு வாங்கினேன். இப்போது அதுதான் பயன்பாட்டில் உள்ளது.  

ரேடியோ, டேப் ரெக்கார்டர், வாக்மேன் என எதையுமே நான் வாங்கி பயன்படுத்தியதில்லை. ரேடியோ வாங்க பல ஆண்டுகள் நினைத்தேன். ஆனால் வாங்கவில்லை. 

இருப்பினும் இசை கேட்டு நெகிழும் உள்ளம் என்னுடையது. இசையின் இனிமையை அவ்வப்போது நான் உணர்ந்திருக்கிறேன். அவ்வாறு உணரும் போதெல்லாம் தினமும் இசை கேட்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று எண்ணுவேன். 

என்னுடைய தொழில் என்பது எப்போதும் திறந்த வெளியில் குறைந்தபட்சம் பதினைந்து இருபது பேருடன் இருக்கும் தன்மை கொண்டது. ஜல்லி அள்ளப்படும் சத்தம், மிக்சர் மிஷின் சுழலும் ஓசை, ஆட்களின் கூச்சல் ஆகியவை சூழ்ந்திருப்பது. பழக்கத்தின் விளைவாக மனம் அங்கே நிகழ வேண்டியவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்தி அவற்றை நிகழ்த்திக் கொள்ளும். காலையிலிருந்து இரவு எட்டு மணி வரை ஏதாவது வேலை இருக்கும். காலை விழிக்கும் போது இன்று என்ன வேலை என்ற நினைவுடன் தான் பொழுதின் முதல் கணம் மனதில் விழிக்கும். இரவு வீட்டுக்கு வந்தால் உணவு அருந்தி விட்டு படுத்தால் அடுத்த கணம் உறக்கம் சூழ்ந்து விடும். 

நூல் வாசிக்கும் பழக்கம் சிறு வயது முதல் இருப்பதால் ஒரு நூலை வாசிக்கத் தொடங்கினால் அதற்கான நேரத்தை உண்டாக்கிக் கொண்டு வாசித்து விடுவேன். ஆனால் இசைக்காக அவ்வாறான நேரத்தை என்னால் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஹிந்துஸ்தானி சங்கீதத்தால் நான் பெரிதும் ஈர்க்கப்படுவேன். வெகுநேரம் இசை கேட்க தேவையான சூழலை உண்டாக்க நான் இப்போதும் முயற்சி செய்கிறேன். கொடுப்பினை இருக்கிறதா என பார்க்க வேண்டும். 

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், திருவாரூர் அருகே ஒரு கல்லூரி. அந்த வளாகத்தில் ஒரு பெரிய பள்ளியும் உண்டு. பள்ளி, கல்லூரி, விளையாட்டு மைதானம், ஆடிட்டோரியம் என அனைத்தும் ஒரு பெரிய வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளாய் விளங்கும் தன்மை கொண்டது. அங்கே நான் ஒரு வேலையாய் சென்றிருந்தேன். அப்போது அங்கே ஒரு கர்நாடக இசைக் கச்சேரி நிகழ இருப்பதை அறிந்து ஆடிட்டோரியம் சென்றேன். 

இரு இளம் பெண்கள் பாடினார்கள். இனிமையான குரல். தங்கள் குரலிசை மூலம் மேகங்களில் சஞ்சரிக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தினார்கள். செவி மனம் இவை கடந்து உயிர் கேட்கும் இசை என இருந்தது அவர்கள் சங்கீதம். இரண்டரை மணி நேரம் அவர்கள் கச்சேரி. கச்சேரி முடிந்ததும் அவர்கள் மேடைக்கு அருகில் இருக்கும் கதவு வழியாக வெளியேறுவார்கள் என்பதை யூகித்து நான் அவர்களுடைய கார் என்னுடைய பார்வையில் படும்படியும் இருப்பினும் காரிலிருந்து சற்று தள்ளியும் நின்று கொண்டேன். அவர்களிடம் எதுவும் பேச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் புறப்பட்டுச் செல்லும் போது மானசீகமாக வழியனுப்ப அங்கே இருக்க வேண்டும் என்றே நினைத்தேன்.  இருவரும் காருக்குப் பக்கத்தில் வந்து விட்டார்கள். ஆனால் அவர்களுடைய அன்னை இன்னும் காருக்கு வரவில்லை. எனவே காரில் ஏறாமல் மைதானத்தைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தனர். மைதானத்தில் அந்த நேரத்தில் மென்காற்று வீசியவாறு இருந்தது. இருவரும் சற்று தள்ளி நான் நிற்பதைப் பார்த்து விட்டார்கள். நான் மெல்ல முன்னே வந்து இருவருக்கும் வணக்கம் சொன்னேன். இருவரும் வணக்கம் தெரிவித்தனர். ‘’அம்மா ! ரொம்ப நல்லா பாடினீங்க அம்மா. உங்க பாட்டு மனசை உருக்கிடுச்சி. நான் இசை கேட்டு பழக்கம் இல்லாதவன். ஆனா இரண்டரை மணி நேரம் போனதே தெரியல. அவ்வளவு நேரத்த உங்க இசையால சில நிமிஷமா ஆக்கிட்டீங்க. கடவுளோட பிரியம் என்னைக்கும் உங்க மேல இருக்கும்’’ என்று கூறினேன். இருவரும் ரொம்ப சந்தோஷப்பட்டனர். என்னைப் பற்றி விசாரித்தனர். என்ன தொழில் செய்கிறேன் என்று கேட்டனர். பின்னர் அந்த இரண்டரை மணி நேரத்தில்  அவர்கள் பாடியதில் எனக்கு நினைவிருந்த சில பாடல்களைச் சொன்னேன். அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சி. அதற்குள் அவர்களுடைய அம்மா வந்து விட்டார்கள். அவர்கள் அம்மாவிடம் இருவரும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி. பின்னர் விடைபெற்றுச் சென்றனர். எனக்கும் சில கணங்கள் அவர்களுடன் உரையாட நேர்ந்தது நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது. 

அன்று நான் கேட்டது ஒரு காந்தர்வ சங்கீதம். அவர்கள் இருவரையும் குறித்து கர்நாடக இசை அறிந்த என் நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. அப்போது தான் பாடத் தொடங்கியிருக்க வேண்டும். அதன் பின்னர், அவர்களுடைய பெயரை இசை உலகில் எங்குமே கேட்கவில்லை. அவர்களுடைய கச்சேரிகளும் இணையத்தில் இல்லை. இருவராகப் பாடும் சகோதரிகளான அவர்கள் பின்னாட்களில் வேறு வேறு ஊர்களில் வசிக்க நேரிட்டதா என்பது தெரியவில்லை. யாராவது ஒருவராவது தனியாக கச்சேரி செய்தனரா என்பதையும் அறிய முடியவில்லை. 
 

எனினும் அன்று கேட்ட இசை மட்டும் ஒரு உயிர்ப்புள்ள விதையாக மனதில் இருக்கிறது.