Saturday 25 June 2022

பறவை நோக்கு

நேற்று காலை ஒரு நண்பர் என்னை அலைபேசியில் அழைத்தார். அவர் ‘’டிரோன் கேமரா’’ இயக்கக் கூடியவர். 3 ஏக்கர் வயலில் தேக்கு பயிரிட்டிருக்கும் வயலை டிரோன் கேமரா மூலம் படமெடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவர் வணிக ரீதியில் பயன்படுத்துபவர் அல்ல. தனது விருப்பத்தால் டிரோன் மூலம் புகைப்படங்கள் எடுக்கிறார். அவரை அழைத்துக் கொண்டு வயலுக்குச் சென்றேன்.  

டிரோனை காற்றில் எழுப்பி வயலை புகைப்படங்கள் எடுத்தோம். பறவைப் பார்வையில் முழு ஊரே அலைபேசியில் தெரிந்தது. புதிதாகப் பறக்கும் இந்த பறவை எந்த பறவை என கரிச்சான்களும் மீன்கொத்திகளும் பக்கத்தில் பறந்து பார்த்து விட்டு சென்றன. 

வானத்திலிருந்து பார்க்கும் போது எல்லாம் கையில் அடங்கக்கூடியவை என்று தோன்றிவிடுகிறது. வானத்தின் உள்ளங்கை தான் பூமியா? நாம் அனைவரும் அந்த உள்ளங்கை ரேகைகளில் சிறு சிறு புள்ளிகள் தானா?

ஊரின் பரப்பு பறவைக் கோணத்தில் மிகப் பரந்து விரிந்து தெரிந்தது. அதைக் கண்ட போது மலைப்பாக இருந்தது. ‘’காவிரி போற்றுதும்’’ முயற்சிப்பது ஒரு ஏக்கரில் 20 தேக்கு மரங்கள் என்பது மட்டும்தான். அது நிலத்தின் பரப்பில் ஒரு சதவீதம் மட்டுமே. மீதம் உள்ள 99 % நிலத்தில் அவர்கள் வழக்கமாக செய்யும் பயிரை செய்து கொள்ளலாம். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு மிக நீண்டதாக இருக்கிறதே என்ற எண்ணத்துடன் வீட்டுக்கு வந்தேன். 

கணினியைத் திறந்தேன். தஞ்சாவூருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்திலிருந்து ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் பத்து நாட்களுக்கு முன்னால் 3 ஏக்கரில் தேக்கு பயிரிடப்பட்டிருக்கும் வயலை பார்வையிட்டு என்ன முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை குறிப்பெடுத்துக் கொண்டு சென்றிருந்தார். இன்று அவருடைய வயலில் தேக்கு நட மேட்டுப்பாத்தி எடுக்க ஜே.சி.பி பணி புரியத் தொடங்கியுள்ளது என்று கூறி ஜே.சி.பி பணி புரியும் புகைப்படங்களை மின்னஞ்சலில் இணைத்திருந்தார். அந்த புகைப்படங்களில் ஒன்றை இத்துடன் இணைத்துள்ளேன்.