Wednesday, 29 June 2022

வினாக்களும் விடைகளும்

’’நாடினேன் நான் கண்டுகொண்டேன்’’ கட்டுரையை வாசித்து விட்டு எனது நண்பரும் எனது பிரியத்துக்குரியவருமான இளம் வாசகர் ஒருவர் என்னை அலைபேசியில் அழைத்திருந்தார். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை மிக இளம் வயதில் சந்தித்தது குறித்து தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். சமூகப் பிரக்ஞை என்பது நுட்பமானது. இன்னும் சரியாகச் சொன்னால் பிரக்ஞை என்பதே மிக நுட்பமானது. நாம் ஒரு விஷயத்தை முழுமையாக அறிய முற்பட்டால் அல்லது ஒரு விஷயத்துக்கு நம்மை முழுமையாகக் கொடுத்தால் நாம் அதனை முற்றறிவோம் அல்லது அதனை முற்றறிவதற்கான மார்க்கத்தில் பயணிப்போம். அப்போது அதன் நிறை குறைகள் , சாதக பாதகங்கள் என அனைத்தையும் அறிந்து கொள்வதற்கான புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும். ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பது என்பது வேறு ; ஒன்றினை முழுமையாகப் புரிந்து கொள்வது என்பது வேறு.  

ஸ்டாலின் ரஷ்ய மக்கள் தொகையில் கோடானு கோடி பேரைக் கொன்று குவித்தவர். ஸ்டாலினைப் போல் ஒரு கொடுங்கோலனை உலகம் கண்டதில்லை. சோவியத் யூனியன் இருக்கும் வரை ஸ்டாலின் செய்த படுகொலைகள் ஒரு உயரிய சித்தாந்ததை நிலைநிறுத்த செய்யப்பட்டன என நியாயப்படுத்தப்பட்டது. உலகெங்கும் இருந்த கம்யூனிஸ்டுகள் அதனை நியாயப்படுத்தினர். 1990ல் சோவியத் யூனியன் சுக்குநூறாக உடைந்தது. அதுநாள் வரை கம்யூனிஸ்டுகள் நம்பிய ஒரு உலகம் ஒரு கணத்தில் இல்லாமல் போனது. 

‘’பின்தொடரும் நிழலின் குரல்’’ நாவல் சோவியத் யூனியனின் உடைவைப் பின்புலமாகக் கொண்டு மானுட அறம் தொடர்பான வினாக்களை எழுப்பக் கூடிய நாவல். அதனை நான் கல்லூரி மாணவனாயிருந்த போது வாசித்தேன். அவை என் உளத்தில் பெரும் கொந்தளிப்புகளை உருவாக்கின. உலக வரலாற்றில் பலியாகிக் கொண்டேயிருக்கும் எளியோரின் பெரும் நிரை என் உள்ளத்தை உலுக்கியது. அந்த நாவல் பெரும் வினாக்களை என்னுள் எழுப்பியது. வினாக்கள் அதிகரிக்க அதிகரிக்க விடை கிடைக்குமா என்ற ஏக்கம் எழுந்தது. 2000ம் ஆண்டில் ’’பின்தொடரும் நிழலின் குரல்’’ வாசித்தேன். 2003ம் ஆண்டுல் லூயி ஃபிஷரின் ‘’ The life of Mahatma Gandhi'' நூலை வாசித்தேன். மகாத்மா காந்தியின் வாழ்க்கை என்பது என்னுடைய பல கேள்விகளுக்கு பதில் அளித்தது. 

‘’சத்யம்’’ என்பதை மகாத்மா தன் வாழ்வாக ஏற்றார். தான் ஏற்ற ஒன்றுக்கு தன்னை முழுவதுமாக அளித்தார். அவர் வாழ்க்கையில் , குழந்தைப் பருவத்தில் தான் பார்த்த ஹரிச்சந்திர நாடகத்தின் ராஜா ஹரிச்சந்திரனைப் போல. அவர் ஏற்றுக் கொண்ட விஷயம் அவரை ஒரு மனிதராக எவ்விதம் உலகத் தளைகளிலிருந்து விடுவித்து ஒரு மகாத்மாவாக ஆக்கியது என்பதன் சித்திரத்தை லூயி ஃபிஷர் அளித்திருப்பார். வரலாறு குறித்த வரலாற்று நாயகர்கள் குறித்த கேள்விகளுக்கு மகாத்மாவின் வாழ்க்கையிலிருந்து எனக்கு பதில் கிடைத்தது. அந்த நூலை நான் வாசித்தது என் நல்லூழ் என்றே கூற வேண்டும்.  

முதலாளித்துவம் , கம்யூனிசம் என்ற இரண்டு சிந்தனைகளுமே இயற்கையை ஒரு பண்டமாகக் காணும் தன்மை கொண்டவை. இயற்கையை உச்சபட்சமாக சுரண்டும் தன்மையை தங்கள் வழிமுறையாகக் கொண்டவை. 

இந்திய மரபு இயற்கையுடன் இயைந்து வாழும் தன்மை கொண்டது. சுரண்டல் இல்லாத ஒரு ஆட்சி முறையே ‘’இராம இராஜ்யம்’’ எனப்பட்டது. பகவான் புத்தர் ‘’கருணையுள்ள பேரரசு’’ என்ற கருதுகோளை முன்வைத்தார். மகாவீரர் அஹிம்சையையும் உண்மையையும் அரசியலின் நெறிகளாகவே கண்டார். 

நிகழ்வுகளை உளச்சான்றின் படி அணுகுதல் ( இதனை மகாத்மா அந்தராத்மாவின் குரல் என்கிறார் ) , சக மனிதர்கள் மேல் கருணையுடன் இருத்தல் , விழுமியங்களைப் பயிற்றுவித்தலின் மூலம் மேலான வாழ்க்கைநிலைக்கு மக்கள் வாழ்வை உயர்த்துதல் , மக்கள் அனைவரையும் ஏற்பு மறுப்பு என்னும் இருநிலை இன்றி சமமாகப் பார்த்தல் ஆகிய தன்மைகளை மகாத்மா காந்தி அரசியலில்  தனது பாணியாகக் கொண்டார். இந்த தன்மைகள் அனைத்தும் முழுக்க முழுக்க இந்திய மரபில் வேர் கொண்டவை. சமத்துவத்தின் குரல் உபநிடதங்களில் ஒலிக்கின்றது. தூய பிரக்ஞை முற்றிலும் கருணைத்தன்மை கொண்டது என்பதை பகவான் புத்தர் எடுத்துரைத்தார்.  

சமூக முன்னேற்றத்துக்கு - சமூக மாற்றத்துக்கு - சமூக நீதிக்கு -  அரசியல் அதிகாரம் மட்டுமே ஒரே தீர்வு அல்ல என்பதை காந்தி உணர்ந்திருந்தார். அரசியல் அதிகாரத்தின் எல்லைகள் காந்தியால் முழுமையாக உணரப்பட்டிருந்தன. உலக வரலாற்றில் மகாத்மாவைப் போல் காலை 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரை ஒவ்வொரு நொடிப் பொழுதையும் மக்களுக்காகவும் சக மனிதர்களுக்காகவும் உழைத்த இன்னொரு தலைவர் இல்லை. உலகின் எந்த பெரிய எழுத்தாளனை விடவும் அதிகமான பக்கங்களை தனது வாழ்நாளில் எழுதியிருக்கிறார். அவரது நூல் தொகுப்பு நாற்பதாயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ளது. 

அவரிடம் ஒவ்வொரு தனிமனிதனிடமும் பேசுவதற்கு சொற்கள் இருந்தன. இருக்கின்றன. 

அவர் மனிதர்களை எந்தெத்த வழியில் இணைக்க முடியுமோ அத்தனை வழியிலும் இணைத்தார். அவரது தினசரி நடைமுறையில் முக்கிய பங்கு வகித்தது பிராத்தனை. இராட்டையில் நூல் நூற்கும் செயலை தினமும் மேற்கொண்டார். லட்சக்கணக்கான மக்கள் அவரைப் பின்பற்றி தினமும் அதனை மேற்கொண்டனர். அதுதான் உண்மையான புரட்சி. தனது ஆசிரமத்தில் அனைவருக்குமான பொது நடைமுறைகளை உருவாக்கிக் கொடுத்தார். 

இந்திய மரபின் தொல் அறம் அவர் செயல்பாடுகளின் அடிநாதமாக இருக்கிறது. அவரை அறிபவர்களால் அவரை சிறிதேனும் பின் தொடர முடியும். அவருடன் சிறிது தூரம் தொடர்ந்தாலே எவ்வளவோ விஷயங்களை உணர்ந்து கொள்ள முடியும். அப்போது கொந்தளிப்புகள் இருக்காது ; அமைதியே இருக்கும். எல்லா வினாக்களுக்கும் விடைகள் இருக்கும். விடைகள் மட்டும் அல்ல தீர்வுகளும் இருக்கும்.