Thursday 21 July 2022

பக்கம்

மரங்கள் விஷயம் தொடர்பாக அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்களுடன் நான் உரையாடுவது உண்டு. அரசாங்கத்தின் விதிமுறைகளை சட்டங்களைக் குறித்து அவர்களில் பலர் எனக்குச் சொல்வதுண்டு. அவை ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள முன்னெடுக்க எனக்கு பல விஷயங்களில் உதவிகரமாய் இருக்கும். பத்து பேரிடம் நான் பேசினால் அதில் ஒருவர் அல்லது இரண்டு பேர் அந்த விஷயம் தொடர்பாக உள்ள விதிமுறைகளையும் சட்டங்களையும் கூறுவார்கள். மற்றவர்கள் அது குறித்து மௌனம் காப்பார்கள். இந்த விஷயங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று கூறுவார்கள். இன்னதென்று வரையறுத்துச் சொல்ல முடியாத காரணங்களால் தவறிழைத்தவர்கள் பக்கம் சார்பு நிலை எடுப்பார்கள். நாம் ஒருவரிடம் ஆலோசனை கேட்கிறோம் என்றால் அவர் நமக்கு சாதகமாகத்தான் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதில்லை ; எதிர்மறையாகவும் வழங்கலாம். அந்த சாத்தியத்தை அறிந்து தான் - அந்த உரிமையை அவருக்கு அளித்துத்தான் நாம் அவருடன் உரையாடுகிறோம். 

அவர்களிடம் நான் ஒரு விஷயத்தைச் சொல்வது உண்டு. ‘’ ஒரு அநியாயம் நடக்கிறது. அநியாயமான ஒரு செயலை அரசுப்பணியில் இருப்பவர்கள் செய்கிறார்கள். அதற்கு ஒரு சாதாரண குடிமகன் நியாயம் கேட்கிறான். ஆயிரம் தவறுகள் நிகழ்ந்தால் ஒரு தவறுதான் தட்டிக் கேட்கப்படுகிறது. என்றாலும் உங்களால் அந்த சம்பவத்தில் எது நியாயமான பக்கமோ அந்த பக்கத்திற்கு உங்களால் தார்மீக ஆதரவு கூட தர முடியவில்லை. அந்த உளநிலையை யோசித்துப் பாருங்கள். நியாயமான பக்கத்தில் நிற்க முடியாததால் மானசீகமாக அநியாயம் செய்தவர் பக்கம் சென்று விடுகிறீர்கள். அதற்கான காரணம் நீங்கள் அரசுப் பணியில் இருந்தவர் என்பது. ஓர் அரசு அதிகாரியின் அதிகார துஷ்பிரயோகம் மீது ஒரு சாதாரண குடிமக்ன் கேள்வி கேட்பதை - அங்கீகரிக்கப்பட்ட அமைதியான வழியில் கேள்வி கேட்பதைக் கூட - உங்களால் ஏற்க முடியவில்லை. அந்த அதிகாரியின் இடத்தில் உங்களைப் பொருத்திக் கொள்கிறீர்கள். இந்த நாடு குடியரசாக ஆக வேண்டும் என்று இந்த நாட்டின் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த எத்தனையோ லட்சம் பேர் தங்கள் உயிரைக் கொடுத்து உருவாக்கிய அமைப்பு இது. இது செம்மையாக இயங்க வேண்டும் என்றால் சிறியதிலிருந்து பெரியது வரை தவறுகள் சுட்டுக் காட்டப்பட வேண்டும். சரி செய்யப்பட வேண்டும். மக்களே இல்லாமல் அரசு என ஒன்று இருக்க முடியாது. யோசித்துப் பாருங்கள்’’ என்று சொல்வேன். 

பொது விஷயங்களில் அனுபவம் கிடைக்க கிடைக்க ஒரு விஷயத்தை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதில் பல நடைமுறைப் புரிதல்கள் உண்டாகி விடும். 

இங்கே அரசு இயங்கும் விதத்தை பூடகமாகவே வைத்திருந்த பழக்கத்திலிருந்து  அரசு ஊழியர்கள் இன்னும் விடுபடவில்லை. இருபது இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அரசு அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகள் அறிக்கைகள் ஆகியவற்றை சாதாரண குடிமகன் பெற வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாட வேண்டும். ஆனால் இப்போது தகவல் பெறும் உரிமைச் சட்டம் இருக்கிறது. அரசின் எந்த தகவலையும் எவரும் பெற முடியும். அரசின் பல நடைமுறைகள் மின்னணு முறைக்கு வந்து விட்டன. இருப்பினும் அரசு ஊழியர்கள் இன்னும் கடந்த காலத்தின் கைதிகளாகவே இருக்கின்றனர்.